சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தின் அகில உலக தியேட்டர் ரிலீஸ் உரிமையை ஈராஸ் நிறுவனம், 165 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இதுவரையில் எந்தவொரு சினிமாவையும் இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்கியதில்லை. அந்த வகையில் இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் லிங்கா மகத்தான சாதனை செய்திருப்பதாகவே கருதலாம்.
ஏற்கெனவே ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்திருக்கும் ஈராஸ் நிறுவனம் ரஜினியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறது. ஈராஸ் நிறுவனமே ‘லிங்கா’ படத்தின் ஆடியோ உரிமையையும் பெற்றிருந்தது. ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்துதான் ஈராஸ் நிறுவனத்தின் தென்மண்டல பிரிவின் தலைமை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் விற்பனை செய்யும் உரிமையை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து ஐங்கரன் நிறுவனம் பெற்றிருப்பதாகத் தகவல்.
எது எப்படியிருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் புதிய புதிய சாதனைகளை படைத்துக் கொண்டேயிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி..!