‘லிங்கா’வின் 21 நாள் திருச்சி-தஞ்சை ஏரியா வசூல் 4 கோடியே 5 லட்சம் ரூபாய்தான் – விநியோகஸ்தரின் புலம்பல்..

‘லிங்கா’வின் 21 நாள் திருச்சி-தஞ்சை ஏரியா வசூல் 4 கோடியே 5 லட்சம் ரூபாய்தான் – விநியோகஸ்தரின் புலம்பல்..

‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் ‘லிங்கா’ படத்தை வாங்கி விநியோகித்த விநியோகஸ்தர்கள்.

ஆனால் இவர்கள் சொல்வதெல்லாம் பொய். ‘லிங்கா’ படம் மிகப் பெரிய ஹிட்டடித்துவிட்டது. இவர்கள் லாபம்தான் சம்பாதித்திருக்கிறார்கள். குறுக்கு வழியில் ரஜினியை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படியொரு நாடகமாடுகிறார்கள் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இவர்களில் யார் சொல்வது உண்மை என்று நமக்கு தெரியாத நிலையில் இந்த விஷயம் குறித்து தங்களது தரப்பு நியாயத்தை மிக விளக்கமாக இன்று வெளிவந்திருக்கும் ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையில் விநியோகஸ்தர் சிங்காரவேலன் பேட்டியளித்திருக்கிறார்.  அது இங்கே :

distributor-singaravelan

”லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ரஜினி உட்பட ஆகிய அனைவரும் ‘லிங்கா’ படம் 10 ‘படையப்பா’வுக்கு சமம், 5 ‘எந்திரனு’க்கு சமம்னு ஓவர் பில்டப் கொடுத்தாங்க. அதுவும் இல்லாமல் ‘ரஜினி நடித்து சில வருடங்கள் கழித்து வெளிவரும் படம் என்பதால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்’னு சொன்னாங்க.

இதை எல்லாம் கேட்டபிறகு இந்தப் படத்தை வாங்கலாம்னு நம்பிக்கை வந்தது. ‘வேந்தர் மூவீஸ் வெளியிடும்’னு அறிவிச்சாங்க. வேந்தர் மூவீஸ் எங்ககிட்ட ‘லிங்கா’ படத்துக்கு விலை பேசினாங்க. “2010-ல வந்த ‘எந்திரன்’ 7 கோடி ரூபாய்க்கு திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவுல வசூல் பண்ணி இருக்கு. அதனால ‘லிங்கா’ படத்துக்கு நாங்க 9 கோடி ரூபாய் விலை நிர்ணயம் பண்ணி இருக்கோம். இதுதான் இறுதியானது”ன்னு சொன்னாங்க. நாங்க பேரம் பேசி இறுதியில 8 கோடி ரூபாய்க்கு வாங்கினோம்.

திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவுல 55 திரையரங்குகளில் ‘லிங்கா’ படத்தைத் திரையிட்டோம். அந்த 55 திரையரங்குகளிலும் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை ஒருநாள் ஷோவையும் சேர்த்து 1,26,000. ஆனால், முதல் நாள் பார்த்தவங்க எண்ணிக்கை வெறும் 76,000 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் படம் சரியில்லாததால 50,000, 40,000-ன்னு பார்க்கறவங்க எண்ணிக்கை குறைஞ்சுடுச்சு. இப்ப 25 திரையரங்குகளில்தான் படம் ஓடுது. ஒருநாளைக்கு 5,000 பேர்கூட பார்ப்பதில்லை.

படம் ரீலீஸான அடுத்த நாளே படம் சரியா போகலைன்னு எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. நாங்களும் இதை வேந்தர் மூவீஸ் போன்றவங்களுக்கு தெரியப்படுத்தினோம்.  படம் ரிலீஸான 7 நாட்களுக்குப் பிறகு வேந்தர் மூவீஸ் ஒரு அறிக்கை வெளியிடுறாங்க. அதுல ‘கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறை, தேர்வு விடுமுறைகள் எல்லாம் வரப் போகுது. விடுமுறை வந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பாங்க. படம் நல்லா போகும்’னு சொன்னாங்க.

ஆனா அந்த மாதிரி எதுவுமே நடக்கல. எதுக்கு இந்த மாதிரி அறிக்கை விட்டாங்கன்னும் தெரியலை. படம் ஓடலைன்னு எல்லாருக்கும் தெரியும்போதே படம் நல்லா போகும்னு பில்டப் கொடுக்கறாங்கன்னா… படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி எவ்வளவு பில்டப் கொடுத்து இருப்பாங்கன்னு நீங்களே நினைச்சுப் பாருங்க.  இது கிட்டத்தட்ட மண்ணுளிப் பாம்பு, காந்தப் படுக்கை மோசடி மாதிரி இல்லாததை இருக்குன்னு நம்ப வைத்து மோசடி செஞ்ச மாதிரிதான்.

அதேபோல படம் வாங்கும்போது அக்ரிமென்ட் போட்டாங்க. படம் என்ன வசூல் ஆனாலும் அவங்ககிட்ட கொடுத்துடணும். எங்களுக்கு 10 சதவிகிதம் கமிஷன் மட்டும் தருவாங்க. அவ்வளவுதான். இப்படி கமிஷன் கணக்குல பிசினஸ் பண்ணுறவங்க படத்தை குறைந்த விலைக்கே எங்களுக்குக் கொடுத்திருக்கலாமே..?

8 கோடி முதலீடு போட்ட எனக்கு 21 நாட்கள்வரை வசூலான தொகை 4,04,75,922 ரூபாய்தான். இனி பொங்கலுக்குள் இப்போது ஓடிக் கொண்டு இருக்கும் தியேட்டர்களில்கூட லிங்கா எடுக்கப்பட்டு விடும்.

வேந்தர் மூவீஸ், ஈராஸ், கே.எஸ்.ரவிகுமார்ன்னு யார்கிட்ட கேள்வி கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்கறாங்க. ‘மொத்தமாக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்கிட்ட வாங்கிக்கோ’ன்னு சொல்றாங்க. இப்படி பணத்தை ஆள் ஆளுக்கு வாங்கிட்டு ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு எங்களை அலைய விடுறாங்க. இது நியாயமா..?

ரஜினி ஏன் கர்நாடகாவில் இருந்து தயாரிப்பாளரை கூப்பிட்டு வரணும்? இந்த ராக்லைன் வெங்கடேஷ் யாரு..? 2005-ம் வருஷம் விக்ரம் நடித்த ‘மஜா’ என்ற படத்தைத் தயாரித்தவர். ‘லிங்கா’ போலவே இந்தப் படத்துக்கும் ஓவர் பில்டப் கொடுத்து விநியோகஸ்தர்களை நஷ்டமாக்கிட்டு கர்நாடகாவுக்கு ஓடிப் போயிட்டார். ஓடிப் போனவருக்கு ஒன்பதாம் இடத்துல குரு என்பதுபோல, ஓடிப் போனவரை ‘லிங்கா’ படத்தைத் தயாரிங்கன்னு, ரஜினியே கர்நாடகாவில் இருந்து கூப்பிட்டு வர வேண்டிய அவசியம் என்ன..? ஏமாத்திட்டு ஓடிட்டா கர்நாடகாவுக்கு  போய் யார் கேட்கப் போறாங்க என்ற எண்ணம்தானா..?

‘லிங்கா’ படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரஜினியின் சம்பளம் இல்லாமல் 45 கோடிதான் என்று சொல்கிறார்கள்.  ரஜினிக்கு 50 கோடின்னு சம்பளம் வைத்துக் கொண்டாலும் மொத்தம் 95 கோடிதான் பட்ஜெட். ஆனால் மொத்தம் 220 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பண்ணியிருக்காங்க என்பது எங்களுக்கு வந்த தகவல். இதுவரைக்கும் தமிழ்நாடு முழுவதும் வசூல் ஆனது என்னவோ 72 கோடி ரூபாய்க்குள்தான். இதற்கு என்கிட்ட டாக்குமென்ட் இருக்கு. இதுல எங்களை மோசடி நடத்தினது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசையுமே மோசடி செஞ்சிருக்காங்க..” என அடுத்த குண்டை தூக்கிப் போட்டுத் தொடர்கிறார்.

”லிங்கா’ வரி விலக்குக்கு சிறிதும் தகுதியில்லாத படம். கேளிக்கை வரி விலக்கு பெற வேண்டும் என்றால், 5 விதிகள் இருக்கின்றன. முக்கியமாக படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும். ‘லிங்கா’ என்பது தமிழ் பெயரே அல்ல. லிங்கா சமஸ்கிருத சொல். இதுக்கு முன் ‘ஜமாய்’, ‘ரம்மி’, ‘ஜில்லா’ போன்ற படங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படவில்லை. அவைகளெல்லாம் வேற்று மொழிச் சொல் என அரசாங்கம் மறுத்துவிட்டது. ஆனால், ரஜினி என்ற பிம்பத்துக்காகவே இந்தப் படத்துக்கு மட்டும் வரிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்துக்கு இதனால் சுமார் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை எல்லாம் யார் தட்டிக் கேட்கப் போறாங்கன்னு தெரியலை.

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமா கம்பெனி விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் ஏமாற்றி, அரசாங்கத்தையும் ஏமாற்றி என்னதான் பண்ணப் போறாங்கனு தெரியலை.

ரஜினியை நம்பித்தான் படத்தை வாங்கினோம். இது குறித்து ரஜினியை சந்திக்க கடந்த 22-ம் தேதி ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் சத்யநாராயணாவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தோம். அவரும் ரஜினிகிட்ட கேட்டுட்டு பதில் சொல்றேன்னு சொன்னார். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரம் இருக்கப் போகிறோம். ரஜினி தலையிட்டு இந்தப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை..” என்றார் கோபமாக.

Rock Line Venkatesh-1

‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ”இதுவரைக்கும் இந்தப் புகார் குறித்து யாரும் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. பேசவும் இல்லை. தெரியாத விஷயத்தைப் பற்றி நான் எப்போதும் பேசமாட்டேன். பிசினஸ் பண்ணும்போது லாப, நஷ்டங்கள் வருவதெல்லாம் அவங்கவங்க தலையெழுத்து. இதுக்கு யார் பொறுப்பு ஏற்க முடியும்.. சொல்லுங்க…?” என்றார்.

T.Siva

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் வேந்தர் மூவீஸின் சி.ஈ.ஓ-வான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவிடம் பேசினோம். ”வியாபாரம்ன்னா லாபம், நஷ்டம் ரெண்டும்தான் இருக்கும். நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசி யார் மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பொங்கலுக்குப் பிறகு, நானே ‘லிங்கா’ படத்தின் மொத்த வசூல் விவரங்களையும் சேகரித்து பதில் சொல்கிறேன்..” என முடித்துக் கொண்டார்.

நன்றி : ஜூனியர்விகடன் – 11-01-2015

Our Score