கேளிக்கை வரி விலக்கு பெற்று அரசுக்கு 21 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
‘லிங்கா’ படத்தினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களில் ஒருவரான ஆர்.சிங்காரவடிவேலன்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில். “நான் மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரராக உள்ளேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதி விநியோகம் உரிமத்தை பெற்றேன். ஆனால், இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து, எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு, இழப்பீடு வழங்கும்படி படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரிடம் முறையிட்டோம். எந்த பயனும் இல்லை.
இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்த ராக் லைன் வெங்கடேசன், ‘லிங்கா’ படத்தின் மூலம் தனக்கு லாபம் கிடைத்ததாகவும், இப்போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும்படி தனக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ‘லிங்கா’ படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. ரஜினிகாந்தின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வரிவிலக்கு சலுகை பெறப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் தமிழில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தால், தமிழ் கலாசாரத்தை வளர்க்கும்விதமாக இருந்தால், வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், ‘லிங்கா’ என்பது தமிழ் பெயர் இல்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும். மேலும், ‘லிங்கா’ படத்தின் கதை தமிழ் கலாசாரத்தை மேம்படுத்தும் விதமாக இல்லை.
எனவே, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசனும், ரஜினிகாந்தும் தகுதியில்லாத படத்துக்கு வரிச் சலுகை பெற்று, அரசுக்கு 21 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 3-ம் தேதி புகார் செய்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்…” என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை வக்கீல்கள் எஸ்.ஜோயல், ஜி.விஜயகுமார் ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
அடேங்கப்பா.. என்னவொரு கண்டுபிடிப்பு..? அதுவும் எத்தனை நாட்கள் கழித்து..?
‘லிங்கா’ என்ற பெயரே சமஸ்கிருத வார்த்தை என்பது இப்போதுதான் இந்த விநியோகஸ்தர்களுக்குத் தெரிந்திருக்கிறது போலும்..
21 கோடி ரூபாய் அளவுக்கு வரி மோசடி என்பதும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. வரி விலக்கு கிடைத்துவிட்டது என்பது தெரிந்த பின்புதான் இவர்கள் படத்தை வாங்கி வெளியிட்டார்கள். அப்போது இப்படி வரிவிலக்கு பெற்றது மோசடியாக பெறப்பட்டது என்று இந்த உண்மையானவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது..!
இந்தப் படம் நன்கு ஓடி இவர்களுக்கு நல்ல லாபம் வந்திருந்தால் இவர்கள் இதையெல்லாம் வெளியில் சொல்லியிப்பார்களா..? பணம் சம்பாதிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த நிலையில் இப்படி படத்தைப் பற்றிச் சொல்லி இவர்களும் சேர்ந்து அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்..!









