லிங்கா பட வழக்கு – 10 கோடி ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு படத்தை வெளியிட ஐகோர்ட்டு அனுமதி..!

லிங்கா பட வழக்கு – 10 கோடி ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு படத்தை வெளியிட ஐகோர்ட்டு அனுமதி..!

மதுரை சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் என்ற இயக்குநர் தான்  எழுதிய ‘முல்லைவனம்’ என்ற கதையை திருடித்தான் ‘லிங்கா’ படத்தைத் தயாரித்துள்ளார்கள் என்றும், தனக்கு அதற்கான பரிகாரம் வேண்டும் எனவும் அதுவரையிலும் ‘லிங்கா’ படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தார்.

அவரது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து ‘இது சிவில் வழக்கிற்கானது. எனவே சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார்.

இதனை எதிர்த்து ரவிரத்தினம் அதே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். தனது அப்பீல் மனுவில், “எனது மனுவுக்கு பதிலளித்து நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், ‘லிங்கா படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பொன்குமரன் எழுதுகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியிருப்பதாகவும், படத்தின் திரைக்கதையை தான் எழுதியிருப்பதாக’வும் குறிப்பிட்டிருந்தார்.

இருவரது பதில் மனுக்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. கதை திருட்டு தொடர்பான உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு போலீஸாருக்கு உத்தரவிடுவதற்கு, ரஜினிகாந்த், ரவிக்குமார் ஆகியோரது பதில் மனுக்களில் உள்ள முரண்பாடே போதுமானது.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, கதை திருட்டு தொடர்பாக ‘லிங்கா’ படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்…” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாளை ‘லிங்கா’ படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், வி.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

நடிகர் ரஜினிகாந்த், ‘லிங்கா’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்.குமரன் ஆகியோருக்காக வக்கீல்கள் சஞ்சய் ராமசாமி, சண்முகராஜா சேதுபதி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

ரவிரத்தினத்தின் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் தனது வாதத்தின்போது,  “மனுதாரர் தான் எழுதிய கதையின் அடிப்படையில் ‘முல்லைவனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்காக தற்போதுவரையிலும் 3½ கோடி ரூபாய்வரை செலவு செய்துள்ளார். தனது பல ஆண்டு கால உழைப்பின் மூலம் படத்தை இயக்கி வருகிறார். இது போன்ற சூழ்நிலையில் மனுதாரரின் கதையை அடிப்படையாக கொண்டுள்ள ‘லிங்கா’ படத்தை வெளியிட அனுமதித்தால் மனுதாரரின் எதிர்காலம் பாழாகி விடும். மனுதாரர் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மனுதாரரிடம் மட்டுமே விசாரணை நடத்தி உள்ளனர். படக் குழுவினரிடம் விசாரணை நடத்தவில்லை..” என்றார்.

தமிழக அரசு சார்பில் வாதாடிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், “மனுதாரர் கொடுத்த புகார் மீது போலீசார் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அவர், கொடுத்துள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை..” என்றார்.

தயாரிப்பாளர் தரப்பு வக்கீல் சஞ்சய் ராமசாமி வாதாடும்போது, “மனுதாரர் தனது கோரிக்கைக்காக இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது. சிவில் கோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தவறு இல்லை. மனுதாரரின் இந்த ‘அப்பீல்’ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்..” என்று கோரிக்கை வைத்தார்.

ரவிரத்தினத்தின் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், “லிங்கா படத்தை நாளை வெளியிட அந்த படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். எங்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளது. எனவே, வழக்கின் அவசர நிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது..” என்று கேட்டுக் கொண்டார்.

குறுக்கிட்ட நீதிபதிகள், “தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் எந்த தவறும் இல்லை. மனுதாரர் தனது கோரிக்கைக்காக சிவில் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். அதே சமயம், தற்போதைய அவசர சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘லிங்கா’ படத்தை வெளியிட அனுமதித்து படம் வெளியான பின்பு, மனுதாரர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு சாதகமான தீர்ப்பை பெற்றால் மனுதாரர் பாதிக்கப்படுவார். அதேவேளையில் எதிர்மனுதாரர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து படத்தை தயாரித்துள்ளனர். படத்தை வெளியிட அனுமதிக்காவிட்டால் எதிர்மனுதாரர்களும் பாதிக்கப்படுவர். இரு தரப்பினரும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தீர்வு என்ன..?” என்றனர்.

இதற்கு பதிலளித்த வக்கீல் சஞ்சய்ராமசாமி, “மனுதாரர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றால், அதன் பின்பு உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற சட்டத்தில் இடம் உள்ளது..” என்றார்.

ரவிரத்தினத்தின் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், “முல்லைவனம் 999’ படத்தின் கதையை நீதிமன்றத்துக்கு தரத் தயாராக உள்ளோம். அதேபோல ‘லிங்கா’ படத்தின் கதை என்ன என்பதை ‘லிங்கா’ படக் குழுவினர் தெரிவிக்கட்டும். அதன் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கலாம்..” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் வழக்கு தொடர்பான தங்களது தீர்ப்பை வழங்கினர்.

“இந்த வழக்கில் நன்னெறி, நீதி, மனசாட்சி இவற்றின் அடிப்படையில் தீர்ப்பளிக்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது.

மனுதாரர் தனது கோரிக்கைக்காக 4 வாரங்களுக்குள் சிவில் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

மனுதாரர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ‘லிங்கா’ படத் தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ், ஐகோர்ட்டு வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். அதேபோன்று மேலும் 5 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தையும் (மனுதாரருக்காக 5 கோடி ரூபாய் அளிக்கத் தயார் என்று ஏதாவது ஒரு வங்கி அளிக்கும் உத்தரவாத கடிதம்) அளிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.

தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய் ராமசாமி இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். “பண விவகாரம் தொடர்பான வழக்கில் மட்டும்தான் இது போன்று உத்தரவிடமுடியும். எனவே இந்த 5 கோடி ரூபாய் டெபாசிட் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…” என்று கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

உடனே மீண்டும் பேசிய வக்கீல் சஞ்சய் ராமசாமி, “இந்தத் தொகை முழுவதையும் உடனடியாக செலுத்துவது என்பது நேரமின்மையால் சாத்தியமில்லாதது.” என்று கூறி தீர்ப்பை கொஞ்சம் மாற்றி அமைத்துத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

இதன் பின்பு நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில், மறுபடியும் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, “3 கோடி ரூபாயை நாளை(டிசம்பர் 12) பகல் 12 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அவ்வாறு பணத்தை டெபாசிட் செய்த பின்புதான் படத்தை வெளியிட வேண்டும். வருகிற 15-ந் தேதி, மீதமுள்ள 2 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும்…” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வக்கீல் சஞ்சய் ராமசாமி, ஐகோர்ட்டு வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை, உடனடியாக சென்னையில் இருந்த ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் ஐகோர்ட்டு வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகை 15-ம் தேதிக்குள் செலுத்தப்படும்.

ஒரு சின்ன மிஸ்டேக்குதான்.. எவ்வளவு பெரிய சிக்கல்ல கொண்டு வந்து விட்டிருக்கு பாருங்க..!

மூணு பேரின் வக்கீல்களும் கலந்து பேசி மனு தாக்கல் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..?

Our Score