“லிப்ட்’ என்ற படத்தை யார் வெளியிடுவது” என்ற பஞ்சாயத்து இன்றைக்கு துவங்கியுள்ளது.
EKKA Entertainment நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘லிப்ட்.’ இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் கவின் ஹீரோவாகவும், அமிர்தா ஐயர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.யுவா, பின்னணி இசை, பாடல்கள் – மைக்கேல் பிரிட்டோ, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம். எழுத்து, இயக்கம் – வினித் வரபிரசாத்.
தற்போது இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தக் கொரோனா 2-ம் அலை தாக்குதலின் ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் வெளியாகாமல் இருந்தது.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. “கண்டிப்பாக இந்தப் படம் தியேட்டரில்தான் வெளியாகும்” என்று விநியோகஸ்தர் ரவீந்தர் சந்திரசேகர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘எக்கா எண்ட்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “எங்களது ‘லிப்ட்’ படத்தின் வெளியீட்டு்க்காக ‘லிப்ரா புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது” என்றும், “லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ விநியோகஸ்தரான ரவீந்திரன் சந்திரசேகர் ஒப்பந்தத்தில் சொன்னது போல நடந்து கொள்ளவில்லை. எனவே அவருக்கும் இந்த படத்திற்கும் இனிமேல் சம்பந்தம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை வந்த சில நிமிடங்களில் ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ சார்பாக ரவீந்திரன் சந்திரசேகரும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில்… “நாங்கள் ‘லிப்ட்’ படத்தின் வெளியீட்டுக்காக ஒப்பந்தப்படி 50% பணத்தை முன்பேயே கொடுத்து விட்டோம். மீதி பணத்தை ரிலீஸ் சமயத்தில் கொடுப்பதாக சொன்னோம்.
இந்தக் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் லேட்டானது. ‘லிப்ட்’ படத்தை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளோம்.
இதற்காக படத்தின் தயாரிப்பாளரை கடந்த ஒரு மாத காலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளோம். சங்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்புக்கும் அவர்களிடமிருந்து இப்போதுவரையிலும் பதில் இல்லை.
இந்த நிலையில் எங்கள் இருவருக்குமான ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக வேடிக்கையான அறிக்கையை தயாரிப்பு தரப்பினர் வெளியிட்டுள்ளார்கள். ‘லிப்ட்’ பட வெளியீட்டு உரிமை இப்போதும் எங்களிடம்தான் உள்ளது” என்று ரவீந்திரன் சந்திரசேகர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த ‘லிப்ட்’ படம் தற்போது பாதியில் நிற்கிறது.









