மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம்முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.
இருந்தும் ‘பார்த்திபன் கனவு’, ‘பத்ரகாளி’, ‘முள்ளும் மலரும்’, ‘47 நாட்கள்’, ‘மோகமுள்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பரதேசி’, ‘அரவான்’, ‘விசாரணை’ போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப்படமாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன.
நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து தமிழ்ச் சினிமாவில் உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’
பல விருதுகளைப் பெற்ற ‘ப்ராஜெக்ட் ஃ’ என்கிற நாவலின் கதையில்தான் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாவலை பெண் எழுத்தாளர் ‘கவா கம்ஸ்’ என்பவர் எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச் செல்லும் இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’ கதிரேசன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். நடிகர் நந்தா நாயகனாக நடித்துள்ளார். தரன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கும் கதை, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது.
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பதால் இத்திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விவரங்களையும் காட்சிகளாக்கிக் கதையுடன் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
“அடுத்து என்ன நடக்கப் போகிறது..?” என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு விறுவிறுவென இழுத்துச் செல்லும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டார்.












