“சைக்கோ’ படத்தின் கதையை படமாக்கக் கூடாது” – இயக்குநர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

“சைக்கோ’ படத்தின் கதையை படமாக்கக் கூடாது” – இயக்குநர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

“பிரபல இயக்குநரான மிஷ்கின் கிரைம், திரில்லர் சம்பந்தப்பட்ட படத்தினை இயக்கக் கூடாது…” என்று சென்னை உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல சினிமா பைனான்சியரான ரகுநந்தன் தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அறிமுக நடிகரும், ரகுநந்தனின் மகனுமான மைத்ரேயன் சில மாதங்களுக்கு முன்பேயே ஒரு குற்றச்சாட்டை இயக்குநர் மிஷ்கின் மீது பகிரங்கமாக சுமத்தியிருந்தார்.

maithreya-myskin-1

“இயக்குநர் மிஷ்கின் அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ என்கிற படத்தை இயக்கப் போகிறார். ஆனால் அந்தக் கதையில் என்னை நடிக்க வைப்பதாகச் சொல்லி மூன்றாண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தமும் செய்து கொண்டு, ஒரு கோடி ரூபாயை முன் பணமாகவும் இயக்குநர் மிஷ்கின் பெற்றுக் கொண்டுவிட்டார்.

ஆனால் ஒப்பந்தத்தில் சொன்னபடி அவர் செய்யவில்லை. இப்போது என்னைத் தவிர்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலினை வைத்து என்னிடம் சொன்ன எனக்கான கதையான ‘சைக்கோ’ கதையை படமாக்கப் போகிறார்..” என்று சில மாதங்களுக்கு முன்பாகவே நடிகர் மைத்ரேயன் புகார் சொல்லியிருந்தார்.

இந்தச் செய்தி இந்த லின்க்கில் உள்ளது.

இதையடுத்து இயக்குநர் மிஷ்கினுக்கெதிராக தயாரிப்பாளர் ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவில், “எங்கள் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க இயக்குநர் மிஷ்கினின் நிறுவனத்துடன் 2015-ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

கடத்தப்பட்ட பெண் ஒருவரை, கதாநாயகன் காப்பாற்றுவது போலான கதை அது. படத்தில் கதாநாயகனாக ஷியாம் என்னும் மைத்ரேயன் நடிக்க இருந்தார். படத்துக்கு ‘மைத்ரேயா’ என்றும் பெயர் வைத்தார் மிஷ்கின்.

இந்தப் படத்தை இயக்க இயக்குநர் மிஷ்கினுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் முன் பணமும் அளிக்கப்பட்டது.

அதன் பின்பு படத் தயாரிப்புப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இப்போது எங்களிடம் சொன்ன அதே கதையில் வேறொரு கதாநாயகனை வைத்து இயக்குநர் மிஷ்கின் படம் இயக்க ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

அந்தப் படத்தின் கதை எங்களது நிறுவனத்துடன் இயக்குநர் மிஷ்கின் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதைதான்.

எனவே எங்களிடம் கூறிய கதைபோல், அந்தக் கதையின் அடிப்படையில்.. வேறு படம் தயாரிக்க மிஷ்கினுக்கு தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரருடன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள கதைபோல் வேறு நிறுவனங்களுக்கு மிஷ்கின் படம் தயாரிக்கவோ, இயக்கவோ கூடாது…” என்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதனால் உதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ படம் அடுத்தக் கட்டத்துக்கு நகருமா என்று தெரியவில்லை.

Our Score