full screen background image

“இளையராஜா ராயல்டி கேட்பது தவறு…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து..!

“இளையராஜா ராயல்டி கேட்பது தவறு…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து..!

இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வெளியிட்ட வீடியோ பதிவு, தாமதமாக தமிழ்ச் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 4 தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.

இப்போது தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாரின் குருநாதரும், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநர், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் “இளையராஜா ராயல்டி கேட்பது தவறு…” என்று கூறியுள்ளார்.

நேற்று கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கே பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இது பற்றிப் பேசுகையில், “இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல. என்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கினாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமாகும். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

படம் தயாரிப்பது கடினமான தொழில். வீட்டை விற்று, நிலத்தை விற்று, அவமானங்களை சந்தித்து படங்களை தயாரிக்கிறார்கள். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதிக படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன. அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குத்தான் பாடல் உரிமை சென்றடைய வேண்டும்.

படத்தில் பணிபுரியும் இயக்குநர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குநர், கலை இயக்குநர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை. அதுபோல்தான் இசையமைப்பாளர்களும்.

அவர்களுடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர். எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score