full screen background image

அருண்ராஜா காமராஜ் இயக்கும் வெப் சீரீஸ் ‘லேபிள்’

அருண்ராஜா காமராஜ் இயக்கும் வெப் சீரீஸ் ‘லேபிள்’

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட் ஸ்டார், அடுத்த ஸ்பெஷல் வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தொடருக்கு ‘லேபிள்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளான ‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், மாறுபட்ட களத்தில் இந்த ‘லேபிள்’ வெப் சீரிஸை இயக்குகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாகத் துவங்கியது.

ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண்ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த ‘லேபிள்’ வெப் சீரிஸின் கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.  முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் C.S. இசையமைக்க, பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத் தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் என நான்கு பாடலாசிரியர்கள் இத்தொடருக்கான பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பு பணிகளை அசார் செய்கிறார், சண்டை பயிற்சியாளராக சக்தி சரவணன் பணியாற்றுகிறார்.

‘லேபிள்’ வெப் சீரிஸ் பற்றி இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசும்போது, “ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது.

இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒரு சிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும் …” என்றார்.

Our Score