இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி, ரவிந்திரா விஜய், பிரதீப் K.விஜயன், K.S.G.வெங்கடேஷ், S.D.பாலகுமாரன், ஸ்வேதா டோரதி, அன்னபூரணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வெளியீடு – நீலம் ப்ரொடக்சன்ஸ் – பா.இரஞ்சித், தயாரிப்பு – யாழி பிலிம்ஸ், தயாரிப்பாளர் – விக்னேஷ் சுந்தரேசன், இயக்குநர்கள் – மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர், கதை, திரைக்கதை, வசனம் – G. இராஜேஷ், ஒளிப்பதிவாளர் – கார்த்திக் முத்துகுமார், படத் தொகுப்பு – M.K.P.கிரிதரன், பின்னணி இசை – பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர், பாடல்கள் இசை – பிரதீப் குமார், ஒலி வடிவமைப்பாளர் – அந்தோனி B.J.ரூபன், கலை இயக்குனர் – ராமு தங்கராஜ், மக்கள் தொடர்பு – குணா, விளம்பர வடிவமைப்பு – தண்டோரா.
கனவுலகத்திற்கும், நிஜவுலகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைச் சொல்வதாக நினைத்து எது கனவு.. எது நிஜம் என்பதைக்கூட சொல்லத் தெரியாமல் பாதி கனவு, பாதி நிஜ வாழ்க்கை என்பதைப் போல காட்சிகளை குழப்பமாக வரிசைப்படுத்தி தியேட்டருக்கு வந்த ரசிகர்களை “இனிமேல் படம் பார்க்க வருவியா.. வருவியா.. வருவியா.. என்று அடித்து, உதைத்து, விரட்டியிருக்கிறார்கள்” இந்தப் படத்தின் இரட்டை இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாஸன் மற்றும் ஷ்யாம் சுந்தர்.
ஒரு வங்கியில் அலுவலராக வேலை செய்து வரும் கலையரசன் தனிமையில் வாழ்பவர். தனியே வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார். அலுவலகத்திற்குச் செல்லும்போதே சரக்கு அடித்துவிட்டுத்தான் செல்பவர். சிகரெட்டை புகைத்துக் கொண்டேயிருப்பவர். பெண் சகவாசமே இல்லை. ஆனால் மன நோயாளி போன்ற தோற்றமும், குணமும் உடையவர்.
இவர் ஒரு நாள் காலையில் கண் முழிக்கும்போது அவரது பின்புறத்தில் குதிரையின் வால் முளைத்திருக்கிறது. அதை நீக்க பெரிதும் முயல்கிறார். முடியவில்லை. தனக்கு மட்டும் வால் முளைத்திருக்கும் காரணத்தை அறிய முற்படுகிறார்.
இதற்காக அவர் மருத்துவமனைக்கு ஓடுகிறார் என்று நீங்களாக நினைத்தால் அது உங்களுடைய முட்டாள்தனம். இதுவொரு பின் நவீனத்துவ படம். சர்ரியலிஸத்தை முன் வைத்து தமிழ்ச் சினிமாவைத் தலைகீழாகப் புரட்டியெடுக்க வந்த திரைக்கதை.
அதனால் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு குறி சொல்லும் பாட்டி, ஒரு ஜோதிடர், ஒரு கணக்கு வாத்தியார் என்று மூவரிடமும் மாறி, மாறி தனக்கு வால் முளைத்ததற்கான காரணத்தைத் தேடி செல்கிறார் நாயகன் கலையரசன்.
ஜோதிடரும், கணக்கு வாத்தியாரும் “குதிரை என்பதே ஒரு செக்ஸ் சிம்பல்”தான் என்கிறார்கள். பாட்டியோ “நீ காணும் கனவுகளிலேயே இதற்கான விடையும் இருக்கிறது. நீ கண்ட கனவை மறுபடியும் நினைத்துப் பார்…” என்கிறார். இதற்காகத் தான் தினமும் காணும் கனவை முழுமையாக காண்பதற்காக முயல்கிறார் கலையரசன். அது முடிந்ததா..? இல்லையா…? அந்த வால் என்ன ஆனது..? என்பதுதான் இந்தக் ‘குதிரை வால்’ படத்தில் இருந்து நாம் புரிந்து கொண்ட கதை.
வீட்டில் பிரச்சினை.. அலுவலகத்தில் பிரச்சினை.. வெளியில் பிரச்சினை.. பணப் பிரச்சினை.. என்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்த ஒருவன், சினிமா தியேட்டரிலாவது அனைத்துக் கவலைகளையும் மறந்து, மனதை இளைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்று நினைத்துத் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தால்… வந்தவனின் டென்ஷனை இன்னும் கொஞ்சம் உயர்த்தி.. இரத்த அழுத்தத்தை உண்டாக்கி.. ஏற்கெனவே இருப்பவனுக்கு அதை உயர்த்திவிட்டால் என்னவாகும்..? அதைத்தான் இந்தப் படக் குழுவினர் செய்திருக்கிறார்கள்.
ஒரு சினிமாவின் உருவாக்கம் என்றால் என்ன..? அதன் உள்ளடக்கம் எப்படியிருக்க வேண்டும்..? அதனை எப்படி ரசிகனுக்குப் பிடித்தாற்போல் வழங்க வேண்டும்..? என்பதையெல்லாம் தெரிந்தவன்தான் இயக்குநராக இருக்க முடியும்.
வெறுமனே இலக்கியம் என்ற பெயரில் மக்களுக்குத் தெரியாத, தேவையில்லாத விஷயங்களையெல்லாம் படித்தவன் தானும் ஒரு சினிமா இயக்குநர் என்று சொல்லிக் கொண்டு படமெடுக்க வந்தால் அது இந்தப் படம் போலத்தான் இருக்கும்..
“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…” என்ற வாசகத்தையாவது இந்த இயக்குநர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை…?
“சினிமா தியேட்டருக்கு வருகின்ற ஒரு ரசிகன் யார்..? அவனது பின்னணி என்ன..? அவன் எதற்காக சினிமா தியேட்டருக்கு வருகிறான்..? அவன் சினிமாவில் எதிர்பார்ப்பது என்னென்ன..?” என்பதுகூட தெரியாமல் படமெடுத்த இந்தப் படத்தின் தயாரிப்பாளரை என்னவென்று சொல்வது..?
நடிப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளின் கீழ் படம் பாராட்டைப் பெறும் என்றாலும், “எதற்காக இப்படி நடித்திருக்கிறார்கள்..? ஏன் அழுதார்கள்..? கோபப்பட்டார்கள்..? அடித்துக் கொண்டார்கள்..? திட்டினார்கள்…?” என்பதே புரியாமல் நாம் எப்படி அதை நடிப்பென்று ஏற்றுக் கொள்வது..?
எப்போதும் அக்குகளில் சொரிந்து கொண்டு அதை மூக்கில் வைத்து முகர்ந்து பார்க்கும் ஒரு அசிங்கம் பிடித்த கடைக்காரன்.. தான் வளர்த்து வரும் நாய் போலவே சாப்பிட நினைக்கும் நாயின் உரிமையாளன், வீடு முழுக்க கூட்டல், கழித்தல் கணக்குகளை கிறுக்கி வைத்துக் கொண்டு தத்துவம் பேசும் கணக்கு வாத்தியார், பைத்தியம் என்று தெரிந்தும் அவனையும் இன்ஸூரன்ஸ் போடச் சொல்லும் ஒரு ஏஜெண்ட்.. திடீர், திடீரென்று வந்து சவுண்டு கொடுக்கும் நாயகி.. இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதினால் எவ்வளவு கேவலமாக இருக்கும்..!? அதைத்தான் இதில் செய்திருக்கிறார்கள்.
சம்பந்தம், சம்பந்தமில்லாத காட்சிகள்.. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத திரைக்கதை.. வழக்கத்திற்கு மாறான காட்சியமைப்புகள்.. சற்றும் பொருந்தாத கேரக்டர் ஸ்கெட்ச்.. ஏன், எதற்கு என்ற கேள்விக்கே இடமளிக்காத காட்சிகள்.. சற்றும் புரியவே புரியாத வசனங்கள்.. என்று இதுவொரு டாக்குமெண்ட்ரி படமாகக்கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது இந்தப் படம்.
கலையரசனின் இள வயது பிராயத்தைச் சொல்லும் கதையாக விரியும் அந்தக் கிராமத்துக் கதையில்தான் முடிச்சே இருக்கிறது. இதையும் வருடக்கணக்காகத் தொடர்ந்து சினிமாக்களை பார்த்து வருவதால் அந்த வகையில் நாமாக.. தாமாக உணர்ந்துதான் இதைச் சொல்கிறோம்.
இந்தக் கதையையாவது உருப்படியாக எடு்த்து இந்தச் சிறுவன்தான் இந்தக் கலையரசன் என்றாவது இணைப்பை ஏற்படுத்தி ஒரேயொரு உருப்படியான விஷயத்தையாவது இயக்குநர் செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
அவர்கள், அவர்கள் பாணியில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்களாம்.. கதையென்ன என்பதை நாமளாகவே புரிந்து கொள்ள வேண்டுமாம்…!
தயாரிப்பாளரிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால் இதற்காக இத்தனை வீணாகக் கோடிகளைக் கொட்டியிருக்க வேண்டாம். இப்படியொரு முட்டாள்தனமான படத்தை உருவாக்கி இந்தக் கர்மத்தை நம்மிடம் காட்டி.. இதற்காக நம்முடைய பொன்னான நேரத்தையும் வீணாக்கியிருக்க வேண்டாம்..!
படக் குழுவினருக்கு நமது வன்மையான கண்டங்கள்..!!!
RATING : இதற்குக்கூட தகுதியில்லாத படம் இது..!