full screen background image

குஷி – சினிமா விமர்சனம்

குஷி – சினிமா விமர்சனம்

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘குஷி’.

இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒப்பனை : பாஷா, ஆடை வடிவமைப்பாளர்கள் : ராஜேஷ், ஹார்மான் கௌர் மற்றும் பல்லவி சிங், கலை இயக்கம் : உத்தர் குமார், சந்திரிகா, சண்டை பயிற்சி இயக்கம் : பீட்டர் ஹெய்ன், வசன உதவி : நரேஷ் பாபு, பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ், தயாரிப்பு நிர்வாகி : தினேஷ் நரசிம்மன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், படத் தொகுப்பு : பிரவீன் புடி, இசை : ஹிஷம் அப்துல் வஹாப், தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி, ஒளிப்பதிவு : ஜி முரளி, தயாரிப்பாளர்கள் : நவீன் எர்னானி, ரவிசங்கர் யெலமஞ்சிலி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஷிவா நிர்வாணா.

அன்பை பசியோடு அலையவிடக் கூடாது என்பதுதான் இந்தக் ‘குஷி’யின் கதை.

பெரிய ட்விஸ்ட்டுகளும், திருப்பங்களும் எதுவுமில்லாத நார்மலான ஒரு காதல், குடும்பத் திரைக்கதையின் வடிவம்தான் இந்தப் படம்.

BSNL நிறுவனத்தில் பணியாற்றுகிறார் ஹீரோ விஜய் தேவரகொண்டா. இயற்கை சூழலில் வாழ விரும்பும் விஜய், காஷ்மீருக்கு பணி மாற்றம் வேண்டி தன் உயரதிகாரி ரோஹிணியிடம் கெஞ்சுகிறார். அவரும் பரிதாபப்பட்டு விஜய்க்கு, காஷ்மீருக்கு டிரான்ஸ்பர் செய்து கொடுக்கிறார்.

அங்கு செல்லும் விஜயதேவரகொண்டா முஸ்லீம் பெண் போல பர்தாவிலேயே வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவைக் காண்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். ஆனால் சமந்தா சம்பந்தமில்லாத ஒரு பொய்யைச் சொல்லி விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து தப்பிக்கிறார்.

சமந்தா சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பி  விஜயதேவரகொண்டா பல காரியங்களை துணிச்சலாகவும் காதலோடும் செய்கிறார். இதனால் மனம் இளகும் நமது பல்லாவரத்து செல்லக்குட்டி சமந்தா, விஜய் தேவரகொண்டா  மேல் காதல் கொள்கிறார்.

அதன் பின்னர்தான் இருவரும் தங்களது உண்மையான குடும்ப பின்புலத்தைச் சொல்கிறார்கள். அங்குதான் பெரிய சிக்கல் எழுகிறது.

ஏன் என்றால் சமந்தாவின் அப்பா திருச்செந்தூர் கோவிலில் வாசம் செய்யும் சாஸ்திரிகளில் ஒருவர். விஜய் தேவரகொண்டாவின் அப்பாவோ பரம நாத்திகர். சாஸ்திரியான முரளி சர்மாவிற்கும், நாத்திகரான சச்சின் கெடேகருக்கும் கண்டாலே ஆகாது.

ஆனால், இவர்களது காதல் சிமெண்ட் பூசினாற்போல்  உறுதியுடன் இருக்க.. மகளை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார் சாஸ்திரி முரளி சர்மா. இதனால் சமந்தா தனது காதலனிடம் வர.. காதலர்கள் இருவரும் தங்களது பெற்றோரின் கண் முன்பாக நன்றாய் வாழ்ந்து காட்டுவதாகச் சொல்லித் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

“சாஸ்திரப்படி இந்த திருமண வாழ்வு தோல்வியில்தான் முடியும்” என்று சாபமிடுகிறார் சாஸ்திரி முரளி சர்மா. அதையும் மீறி வாழ்வில் இணையும் இந்தக் காதல் ஜோடி, இல்லற வாழ்வில் வென்றார்களா..? தோற்றார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

“சூரியன் மேற்கே உதித்தாலும் என் நடிப்பு மாறாது…” என்ற மனநிலையில் நடித்துள்ளார் விஜயதேவரகொண்டா. சில எமோஷ்னல் காட்சிகளில் அவர் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். ஆனால், படத்தின் துவக்கத்தில் சமந்தாவை துரத்தி, துரத்தி காதலிக்கும் காட்சிகளில் மட்டுமே நம்மைக் கவர்கிறார். மேலும் சமந்தாவை முத்தமிடும் காட்சிகளில் எல்லாம் அளவுக்கு அதிகமாகவே நடித்து, நம்மைப் பொறாமைப்பட வைத்து வெறுப்பேற்றியிருக்கிறார்.

மைதா மாவினால் செய்த 60 கிலோ பொம்மையான சமந்தா, தன் பேசும் கண்களாலேயே இந்தப் படத்தை கரை சேர்த்திருக்கிறார். மொட்டை மாடி காட்சியில் ரோஹிணியோடு பேசும் காட்சி ஒன்றில் முத்திரை பதிக்கிறார் சமந்தா. சின்னச் சின்ன அசைவுகளில்கூட தெறிக்கும் சமந்தாவின் நடிப்பு நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.

இவரை அடுத்து படத்தில் அதீத கவனம் ஈர்க்கும் நட்சத்திரங்கள் ஜெயராமும், ரோஹிணியும்தான். இருவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களின் கேரக்டர்கள் ‘ஓ காதல் கண்மணி’ உள்பட  பல படங்களில் பார்த்தவையாக இருந்தாலும் நம்மை ஈர்க்கவே செய்கிறது. 

நாத்திகராக நடித்திருக்கும் சச்சின் கெடேகர் கேரக்டரைவிட, ஆத்திகராக நடித்திருக்கும் முரளி சர்மாவின் கேரக்டர், ஸ்ட்ராங்காக எழுதப்பட்டுள்ளது. இயக்குநர் சிவ நிர்வாணா இதில் ஏதும் மத, அரசியல் வைத்துள்ளாரோ என்னவோ?!

காமெடிகளுக்காக அவ்வப்போது வந்து போகும், பிரம்மானந்தம், அலி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோரும் படத்தில் கலகலப்பை கூட்டியுள்ளனர்.

 

விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனின் கடவுள் பக்தி நடிப்பும் கை தட்ட வைக்கிறது. சமந்தாவின் பாட்டியான லட்சுமியின் அட்வைஸ் அம்புஜம் கேரக்டரும் ரசிக்க வைத்துள்ளது.

 

ஒளிப்பதிவாளர் ஜி.முரளி ஒளிப்பதிவில் புகுந்து விளையாடியுள்ளார். காஷ்மீரை மிகத் துல்லியமாக படம் பிடித்துள்ளார். சில இடங்களில் வரைகலையும் நம் கண்களில் படுகிறது.

ஹிஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் ‘குஷி’, ‘என் ரோஜா’, ‘ஆராத்யா’ என மூன்று பாடல்களும் முணுமுணுக்க வைக்கின்றன. பல இடங்களில் மெதுவாக செல்லும் திரைக்கதையை தாங்கிப் பிடித்திருப்பதும் இவரது பின்னணி இசைதான்.

எடிட்டர் பிரவின் புடி படத்தை இன்னும் புடித்து வைத்து நறுக்கியிருக்கலாம். படம் ரொம்ப நேரம் கழித்துதான் கதைக்குள் செல்கிறது.

நாத்திகரான சச்சின் கெடேகரும் அவர் மகன் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து ஒரு யாகம் செய்தால்தான் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியின் வாழ்வில் குழந்தைப் பேறு நிகழும் என்று திரைக்கதையில் இயக்குநர் போட்ட முடிச்சு படத்தை இடைவேளைக்குப் பிறகு ஆர்வமாக பார்க்க வைக்க மிகவும் உதவியுள்ளது.

சமந்தா-விஜய்தேவரகொண்டா இடையே காதல் தோன்றுவதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. சமந்தா தான் பாகிஸ்தானில் இருந்து வந்தவள் என்றும் தன் தம்பியைத் தேடியே காஷ்மீர் வந்துள்ளேன் என்றும் விஜய் தேவரகொண்டாவிடம் பொய் சொல்லி, அவரை அலையும் விடும் காட்சி மட்டுமே ரசனையாவது.

ஆனால், படம் நிறைய இடங்களில் தேங்கி நிற்பதையும் குறிப்பிட வேண்டும். கதையும், திரைக்கதையும் ஏற்கெனவே பார்த்த பல படங்களை நினைவூட்டுகின்றன. முதல் பாதி முழுவதும் கலகலப்பான காதல் காட்சிகளாக நகர்ந்து நம்மை சோதிக்கும்படி இருந்தாலும், அழகான பாடல் காட்சிகளும், காஷ்மீரின் அழகும் அதையெல்லாம் மறக்கடிக்கச் செய்து நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

இரண்டாம் பாதியில் ஆத்திகம், நாத்திகம் என்ற பிரச்சனை எழும்போது படம் சூடு பிடிக்கத் துவங்குகிறது. தொடர்ந்து இவர்களின் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனைகளை, எளிதாகப் புரியும்படியும், நேர்த்தியாகவும் கூறிய இயக்குநர் அதற்கான சரியான தீர்வையும் கூறியிருக்கிறார்.

 

“பர்தா அணிந்த முஸ்லிம் பொண்ணுக ஹேண்ட் பேக்குல வெடிகுண்டு இருக்கும்ன்னு பயந்துட்டேன்” என்று வெண்ணிலா கிஷோர் பேசுவதையெல்லாம் பார்த்தால் படம் பற்றிய அரசியலை யோசிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் பீஃப் பிரியாணியை முன் வைத்து வரும் வசனங்களும்..!

சந்தித்து பழகிய இரண்டே நாட்களில் நாயகி காதலுக்கு ஓகே சொல்வதும், ஊருக்கு வந்து குடும்பத்தில் சண்டை வந்ததும், ஒரே வாரத்தில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்வதெல்லாம் அவசரத்தனமான காட்சிகளாகவே இருக்கின்றன. மேலும், பெண்களைத் திட்டி பாரில் பாடும் பாடலெல்லாம் தேவையா இயக்குநரே..?

கிளைமாக்ஸில் இரு தரப்பு பெற்றோர்களான சச்சின் கெட்கரும், முரளி சர்மாவும் சமாதானமாக பேசும் வசனங்களும், இதைத் தொடர்ந்த விஜய்தேவரகொண்டா -சமந்தா காட்சியும் சிறப்புதான்.

முத்தாய்ப்பாக படத்தின் நீளத்தை வெகுவாகக் குறைத்து கதாபாத்திரங்களை உணர்வுப்பூர்வமாக ரசிகர்களுடன் டச்’ செய்யும்விதமாக திரைக்கதையை எழுதியிருந்தால், இந்தக் குஷி’ நிச்சயமாக ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும்.!

Our Score