full screen background image

கிக் – சினிமா விமர்சனம்

கிக் – சினிமா விமர்சனம்

இப்படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நவீன் ராஜ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக,  ‘தாராள பிரபு’ ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகினி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை – அர்ஜூன் ஜன்யா, ஒளிப்பதிவு – சுதாகர் ராஜ், கலை இயக்கம் – மோகன் பி.கேர், படத் தொகுப்பு – நாகூரா ராமசந்த்ரா,  சண்டை பயிற்சி இயக்கம் – Dr.ரவி வர்மா, டேவிட் காஸ்டில்லோ,  நடனப் பயிற்சி இயக்கம் – குலபுஷா, சந்தோஷ் சேகர்,  பத்திரிக்கை தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு – நவீன் ராஜ்.

இப்படத்தின் மூலமாக, பிரபலமான கன்னட இயக்குநரான பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் இயக்குநராக உள்ளார்.

இது ஒரு அக்மார்க் சந்தானம் படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும்விதத்தில்தான் இதன் கதை உள்ளது.  ஆனால் கொண்டாட வைத்ததா என்பதுதான் கேள்விக்குறி..!

விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் சந்தானம் குறுக்கு வழியில்கூட ஜெயிக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர். இவருடைய நிறுவனத்தின் உரிமையாளர் தம்பி ராமையா. கம்பெனியில் ரப்பர் ஸ்டாம்ப் போன்றவர்.  

இந்த நிறுவனத்திற்கு போட்டியான வேறொரு விளம்பர நிறுவனத்தில்  வேலை செய்கிறார் நாயகி தான்யா ஹோப். இவரோ நேர்மையாய் உழைப்பு மற்றும் திறமையை வைத்து முன்னேற நினைப்பவர். இந்த இரண்டு பேரும் எலியும், பூனையுமாக மோதி கொள்வதுதான் இந்தப் படத்தின் சுருக்கமான கதை.

இவர்களுக்குள் நடக்கும் மெளன யுத்தத்தை முழு நீள நகைச்சுவை படம் என்று சொல்லி,  ‘சந்தானம்’ பாணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

ஒரு மிகப் பெரிய கான்ட்ராக்ட்டை மாமா’ வேலை பார்த்து கைப்பற்றுகிறார் சந்தானம். இதையறியும் நாயகி சந்தானத்தின் மீது கோபப்பட்டு டிரிப்யூனலில் புகார் செய்கிறார். அந்த ‘மாமா’ வேலையில் ‘மாதவி’ வேலை பார்த்த பெண்ணான ராகினி  இது குறித்த ரகசியங்களை வெளியிடப் போவதாக சந்தானத்தை மிரட்டுகிறார்.

இதையடுத்து இவரைச் சமாதானப்படுத்துவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி ராகினியை மையமாக வைத்து பிளாக் பஸ்டர்’ என்ற “ஆண்களுக்கான ஊக்க மருந்து” என்று சொல்லி ஒரு விளம்பரப் படத்தை எடுக்கிறார் சந்தானம். இந்த உண்மையை அறியும் நாயகி, இது குறித்தும் டிரிப்யூனலில் புகார் கொடுக்க 15 நாட்களுக்குள்ளாக அந்த புராடெக்ட்டை கண்ணில் காட்ட வேண்டும் என்று உத்தரவிடுகிறது டிரிப்யூனல்.

இதனால் தன் தொழில் பாதிக்கப்படும் என்று நினைக்கும் சந்தானம் தாய்லாந்துக்கு சென்று அங்கு இந்த கிக்கான ஊக்க மருந்து ஆராய்ச்சியில் பரம்பரை, பரம்பரையாக ஈடுபட்டிருக்கும் பிரம்மானந்தத்திடம் இருக்கும் அவரது குடும்ப ரகசிய கண்டுபிடிப்பை கேட்கிறார்.

இதே நேரம் சந்தானத்தை வேவு பார்க்க தாய்லாந்துக்கு வரும் நாயகியிடம் தான் பிரம்மானந்தத்தின் மகன் என்று சொல்லி அவரைக் காதலிக்கிறார் சந்தானம். இந்தக் காதல் தறிகெட்டு ஓடத் துவங்கும் நேரத்தில் கண்டுபிடிப்பு ரகசியமும் கைக்கு கிடைக்கிறது.

அதே நேரம் சந்தானம் யார் என்ற உண்மை நாயகிக்குத் தெரிய வர.. அடுத்தது என்ன..? இவர்களின் காதல் என்னவானது..? அந்த புராடெக்ட்டை சந்தானம் சப்மிட் செய்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘கிக்’ என்ற கதையின் கதைச் சுருக்கம்.

‘சந்தோஷ்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தானம் தனது வழக்கமான ஒன்வேர்டு டயலாக்குகளை படம் நெடுகிலும் பேசிக் கொண்டேதான் இருக்கிறார். ஆனால் நமக்குத்தான் சிரிப்பே வரவில்லை. சிரிப்பே வராத சந்தானம் படம் இதுவாகத்தான் இருக்கும்.

தான்யா ஹோப் அழகாய் இருக்கிறார். சிறப்பாய் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்புதான் படத்திலேயே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாய் அமைந்திருக்கிறது. தம்பி ராமையாவின் தடாலடி பேச்சுக்களும், ஓவர் ஆக்ட்டிங்கான  நடிப்பும், ‘கன்னி கழியாத கணவன்’ என்ற கதையுடன்கூடிய நடிப்பும் ரொம்பவே ஓவர்தான்.

படத்தின் பெயரே ‘கிக்’ என்பதால் இந்தக் கிக்கை ஏற்றுவதற்காக ‘வயக்ரா’ விஷயத்தையும், ராகினி திவேதி என்ற வயாக்ரா பெண்ணையும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர் ஆடும் அந்த ஒத்தைப் பாட்டு ரசிகர்களுக்கு கிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பிரம்மானந்தம் முற்கொண்டு முத்தக்காளை வரையிலும் அனைத்து வகை சிரிப்பு நடிகர்களையும் ஒன்றாய் நடிக்க வைத்து, ஏதோ ஒப்பேற்றியிருப்பது போலத்தான் தோன்றுகிறது.

சுதாகர் ராஜின் ஒளிப்பதிவு தாய்லாந்தில் பரம சுகம். ஆனாலும் தாய்லாந்துக்கே உரித்தான இடங்களையும், விஷயங்களையும் காட்டாததால் அதை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம்.

படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களுக்காக 12 விதமான செட்டுகள் அமைத்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்கள்.  சாட்டர்டே இஸ் கம்மிங்கு’(Saturday is cominguu) என்ற  பாடலை நடிகர் சந்தானமே சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். நல்லத்தான் இருக்கு!

படத்தில் இடம் பெறும் மற்றைய பாடல்களுமே கேட்கும் ரகம்தான். காதல் பாடல்களின் மெலடி ராகம் கவர்கிறது. பாடல் காட்சிகளை இளசுகளுக்குப் பிடித்தாற்போன்று படமாக்கியிருக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் படம் முழுக்க பல இடங்களில் ஆபாச சைகைகளும், ஆபாச அர்ச்சனைகளும், வசனங்களுமாய் ஜமாய்த்திருக்கிறார் இயக்குநர். நடன அசைவுகளில், நடனங்களில்கூட ஏ சமாச்சாரங்களை கொஞ்சம் தூக்கலாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

எப்படியாவது ஒரு காட்சியிலாவது ரசிகர்களை சிரிக்க வைத்துவிட இயக்குநரும் பெரும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அது கடைசிவரையிலும் முடியவில்லை என்பதுதான் சோகமான விஷயம்..!

கிக் – வயாக்ரா கிக்குதான் ஏறுது..!

RATING : 3 / 5

Our Score