“தில் இருந்தால் நேரா வந்து பேசு…” – குஷ்பு ஆவேசம்..!

“தில் இருந்தால் நேரா வந்து பேசு…” – குஷ்பு ஆவேசம்..!

நடிகை குஷ்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனின் தீவிர ஆதரவாளராகிவிட்டார்.

மற்ற கட்சிகளைப் போல கட்டுப்பாடுகள், கட்டுக்கோப்புகள்.. காங்கிரஸ் கட்சியில் இல்லை. அங்கே தலைமையை எதிர்த்துகூட கருத்து சொல்லிவிட்டு கட்சியிலேயே நீடிக்கலாம். கேட்டாலும் “தலைமையிடமே நான் பதில் சொல்லிக் கொள்கிறேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு சொந்த வேலை பார்க்கப் போகலாம். இதுதான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு வசதி.

சமீபத்தில் இளங்கோவனை மாற்றியே தீர வேண்டும் என்கிற வெறியோடு டெல்லிக்கு காவெடி எடுத்துக் கிளம்பிச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தமிழக மாஜி தலைவர்களை “தேர்தல்வரைக்கும் மாற்றமில்லை” என்று சொல்லி தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டது தலைமை.

இந்த நேரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் “நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை…” என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டார்.

இதைக் கேட்டு சீற்றமான குஷ்பு, “ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் கட்சியை நம்பித்தான் அவர்களே இருக்கிறார்கள்..” என்று தைரியமாக கருத்து தெரிவித்தார்.

நேற்றைக்கு கட்சிக்குள் வந்த குஷ்பு, ப.சிதம்பரத்தைப் பற்றி பேசுவதா என்று கொதிப்பான கார்த்தி சிதம்பரம் மேலிடத்தில் இது பற்றி புகார் செய்தார். வழக்கம்போல இந்தப் பஞ்சாயத்து தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விஷயம் இதோடு முடியவில்லை.. குஷ்புவின் அந்த ‘சிதம்பர’ எதிர்ப்புக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருரான ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்து பேட்டியளித்தார்.

”காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது..” என்றார் ஹசீனா சையத்.

அகில இந்திய செயலாளராகவே இருத்தாலென்ன..? நேற்றைக்கு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஹசீனாவுக்கு பதிலடி கொடுத்தார் குஷ்பு.

“தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து இப்போது நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்லகூட விரும்பவில்லை.

நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை. ஆனால், நான் ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார்.

உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும் பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன்..” என்று எச்சரித்திருக்கிறார்.

சபாஷ்.. சரியான போட்டி..! 

Our Score