full screen background image

கும்பாரி – சினிமா விமர்சனம்

கும்பாரி – சினிமா விமர்சனம்

இப்படத்தை ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் விஷ்வா, மஹானா சஞ்சீவி, பருத்திவீரன் சரவணன், நலீப் ஜியா, ஜான் விஜய், சாம்ஸ், மதுமிதா, மீனாள், ராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியிருப்பவர் கெவின் ஜோசப், இசை – ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, ஒளிப்பதிவு – பிரசாத் ஆறுமுகம், படத்தொகுப்பு – T.S.ஜெய், கலை இயக்கம் – சந்தோஷ் பாப்பனங்கோடு, சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், நடன இயக்கம் – ராஜுமுருகன், பாடல்கள்- வினோதன் ,அருண் பாரதி, சீர்காழி சிற்பி.

இந்தப் படத்தை 9Vஸ்டுடியோஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதை முழுக்க, முழுக்க கன்னியாகுமரிப் பகுதியில் நடக்கிறது.

‘கும்பாரி’ என்பது ‘நண்பன்’ என்கிற பொருள்படும் சொல்லாகப் படத்தில் கூறப்படுகிறது.

கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும், மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.

பெற்றோர்கள் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள்.

ஒரு நாள் நாயகி மஹானாவை துரத்தி வரும் சில ரவுடிகளிடமிருந்து விஜய் விஷ்வா காப்பற்றுகிறார். 

அதன் பிறகுதான் அது மஹானா நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று விஷ்வாவுக்கு தெரிகிறது.

இதை அறிந்து கடுப்பாகும் விஜய் விஷ்வா  மஹானாவை திட்டிவிட்டு போகிறார்.

விஜய் விஷ்வாவின் துணிவும், குணமும் பிடித்துப் போய் மஹானா, வழக்கமான காதலில் விழுகிறார்.

ஆனால் திருமணம் செய்து கொள்வதில் ஒரு சிக்கல் உண்டு. நாயகி மஹானாவுக்குத் திருமண வயது 21 ஆகவேண்டுமென்றால் 7 நாட்கள் மீதம் உள்ளன.

அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள்.

அதனால் வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

இருவரையும் சேர்த்து வைக்க நண்பர் ஜியா உதவுகிறார்.

நாயகியின் அண்ணன் ஜான் விஜய் அடியாட்களை வைத்துத் துரத்துகிறார். காதலுக்கு உதவிய நண்பனையும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜியா காணாமல் போகிறார்.

நண்பன் காணாமல் போனதால் ஜான் விஜய் கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதாக விஜய் விஷ்வா நம்புகிறார். அதற்காக நீதிமன்றம் சொல்கிறார். ஆனால் அவர் கொலை செய்யப்படவில்லை. நடந்தது வேறு என்று காட்சிகள் வருகின்றன.

அவருக்கு என்ன ஆயிற்று? விஜய் விஷ்வா காதல் என்னானது? காதலர்களை வெறியோடு துரத்தும் ஜான் விஜய் கும்பல் என்ன செய்கிறது? முடிவு என்ன? என்பதுதான் இந்தக் ‘கும்பாரி’யின் கதை.

படம் ப்ளாஷ் பேக் எனப்படும் முன் கதை சொல்வதுபோல் ஆரம்பித்து கடந்த காலத்தில் பயணித்து நகர்கிறது.

இதில் ஒரு காதல் கதையும், அண்ணன், தங்கை பாசக் கதையும் பின்னி பிணைந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.

அருண் பாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வாவும், அவரது நண்பனாக ஜோசப் பாத்திரத்தில் நடித்துள்ள நலீப் ஜியாவும் நன்றாக நடித்துள்ளார்கள். குறிப்பாக நண்பன் ஜியா பாத்திரத்திற்கு நடிப்புத் தருணங்கள் அதிகம்.

தர்ஷினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அளவான அழகுடன் அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை நடிகையாக அறியப்பட்ட மதுமிதா ஆர்த்தி கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் மிகை ரகம்.

குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட மீனாள் இதில் காமெடி என்ற பெயரில் நம்மைச் சோதிக்கிறார்.

ஒரு பரபரப்பான காதல் கதையாக இருக்க வேண்டியதை ஆங்காங்கே அறுவை ஜோக்குகளுடன் அசட்டுத்தனமான காட்சிகளை வைத்து அலுப்பூட்டி விடுகிறார்கள்.

குறிப்பாக ஜான் விஜய் தனது தங்கையிடம் பாசம் காட்டுவதாக அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் நாடகத்தனமானவை. மிகை நடிப்பின் உச்சமாக உள்ளன.

வீரத்துக்கும், வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்ற ‘பருத்தி வீரன்’ சரவணனை ஒரு காமெடியன் ஆக்கி வெறுப்பேற்றி உள்ளார்கள்.

ஜான் விஜய்யின் அல்லக்கையாக காமெடி நடிகர் சாம்ஸ் வருகிறார். தன்னால் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஒல்லியான குடிகாரன் பாத்திரத்தில் வரும் ராயன்கூட சிரிப்பு மூட்டுகிறார்.

படத்தின் பெரிய பலமாக இருப்பது பிரசாத் ஆறுமுகம் செய்துள்ள ஒளிப்பதிவு என்று கூறலாம்.

கன்னியாகுமரி மண்ணின் அழகு, அருவி, ஆறு, கடல் என்றும் பச்சைப் பசேல் இயற்கைப் பிரதேசங்களையும் தன் கேமராவுக்குள் சிறைப்படுத்திக் காட்சிப்படுத்தியுள்ளார்.

நடுக்கடலில் கதாநாயகனை வில்லனின் படகுகள் சுற்றி வளைப்பதை ட்ரோன் மூலம் படம் ஆக்கி உள்ளது நன்றாக உள்ளது.

இசையமைப்பாளர்களும் தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்துள்ளனர்.

குமரி மாவட்ட வட்டார வழக்குகளைக் கோர்த்து படத்தின் ஆரம்பத்தில் குமரித் தமிழில் ஒலிக்கும் ‘அவியே இவியே எல்லாரும் நில்லுங்க’ பாடல் கவனிக்க வைக்கிறது. அதைக் காட்சிப்படுத்தியவிதமும் பொருத்தம்.

இரண்டாவது பாதியில் ஒலிக்கும் ‘நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே’ பாடல் இனிமை ரகம்.

115 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தில் நட்பு, காதல், அண்ணன், தங்கை பாசம் என மூன்றையும் சொல்ல முயன்றுள்ளார்கள். ஆனால், காட்சிப்படுத்தல்களில், பாத்திரச் சித்தரிப்புகளில் இன்னமும் ஆழம் இருந்திருக்கலாம்.

சிறிய பட்ஜெட்டில் அவர்களால் முடிந்த அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்துள்ளார்கள்.

RATING : 2 / 5

Our Score