full screen background image

குடும்பஸ்தன் – சினிமா விமர்சனம்

குடும்பஸ்தன் – சினிமா விமர்சனம்

சினிமாக்காரன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ள புதிய திரைப்படம் குடும்பஸ்தன்’.

இந்தப் புதிய படத்தில் குட் நைட்’ & ’லவ்வர்படங்களின் நாயகனான நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வி மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹேபடப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்கம் ராஜேஷ்வர் காளிசாமிகதை பிரசன்னா பாலச்சந்திரன் & ராஜேஷ்வர் காளிசாமிதிரைக்கதை & வசனம் பிரசன்னா பாலசந்தரன்தயாரிப்பு எஸ்.வினோத் குமார்தயாரிப்பு நிறுவனம் சினிமாக்காரன்ஒளிப்பதிவு சுஜித் சுப்ரமணியம்இசை வைஷாக் பாபுராஜ், படத்தொகுப்பு – கண்ணன் பாலுகலை இயக்கம் சுரேஷ் கல்லேரி, சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன்ஆடை வடிவமைப்பு மீராவிளம்பர வடிவமைப்பு வின்சிராஜ், பத்திரிக்கை தொடர்பு சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட் பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே !

அப்படியொரு இளைஞன் தன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும், சாகசங்களும், பல இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக இந்தக் குடும்பஸ்தன் திரைப்படம் உருவாகியிருக்கிறது.

கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. குடும்பஸ்தன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேடிக்கையான தருணங்களை சுற்றியே இந்தக் கதை நடக்கிறது.

 

இது ஒரு அழகான குடும்பக் கதை. இன்றைய நவீன, நவநாகரீகவுலகில் காதல், கல்யாணம், குழந்தை, பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் இவ்வளவையும் சமாளித்து ஒரு ஆண் எப்படி தன்னுடைய சுயமரியாதை இழக்காமல், தன்மானத்தை இழக்காமல் வாழ முடியும் என்பதை இந்தப் படத்தின் ஹீரோ மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி.

ஹீரோ மணிகண்டன் இப்போது ஒரு அட்வர்டைஸ்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கோவை அருகில் அவர் சொந்த ஊரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். சொற்ப சம்பளம்தான். ஹீரோ மணிகண்டனும், ஹீரோயின் சான்வியும் காதலித்து வருகிறார்கள்.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களுடைய காதலுக்கு பெற்றோர்களிடையே ஒப்புதல் கிடைக்காது என்பது தெரிந்ததால் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இதை இரண்டு தரப்பு பெற்றோர்களும் எதிர்த்தாலும் வீட்டுக்கு ஒரே மகன் என்பதால் ஹீரோவின் அப்பாவும், அம்மாவும் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்.

நாயகியின் உடனான தன்னுடைய திருமண வாழ்க்கையை சந்தோஷமாக துவக்கும் மணிகண்டனுக்கு அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய எதிரியே அவருடைய சொந்த அக்காளின் கணவரான குரு சோமசுந்தரம்தான்.

கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்கின்ற திமிர். மிகப் பெரிய சொந்த வீடு வைத்திருக்கின்ற ஆணவம். தான் மட்டுமே மிகப் பெரிய படித்தவன்.. நல்ல வேலைக்கு போகிறேன் என்று என்ற ஒரு கர்வத்தில் எப்பொழுதுமே மணிகண்டனை மட்டம் தட்டியே பேசி வருகிறார்.

அலுவலகத்தில் நடந்த ஒரு சில பிரச்சனைகளினால் மணிகண்டன் திடீரென்று தன்னுடைய வேலையை இழக்கிறார். உடனடியாக வேறு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இதற்கிடையில் அவருடைய மனைவி கர்ப்பமாகிறார். அவருடைய அப்பாவோ இடிந்து விழும் நிலையில் இருக்கும் அவருடைய வீட்டு சொந்த வீட்டை சரி பண்ணித் தரும்படி சொல்கிறார். அவருடைய அம்மாவோ “50 ஆயிரம் ரூபாய் கொடு. நான் காசி மற்றும் புண்ணிய தளங்களுக்கு சுற்றுலா செல்கிறேன் என்கிறார்.

பணம் ஒரு பக்கம் நெருக்கடியாக இருப்பதால் தான் வேலையில்லாமல் இருப்பது தெரிந்தால் அனைவருக்கும் பிரச்சனையாகும் என்று நினைத்து அதை வீட்டினரிடம் சொல்லாமல் தவிர்க்கிறார் மணகண்டன். இன்னொரு பக்கம் நாயகி ஐ..எஸ். தேர்வுக்கு படித்து வருகிறார். அவருக்கு நிறைய செலவுகள் வருகிறது. இவ்வளவையும் ஒற்றையாளாக சமாளித்து வரும் மணிகண்டனுக்கு ஒரு கட்டத்தில் வீட்டில் சொல்ல முடியாத சூழலால் கடன்களை வாங்கிக் குவிக்க

இதற்குப் பின்பு என்ன நடக்கிறது? மணிகண்டன் வேறு வேலைக்கு போனாரா? அவருடைய பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்ததா? அவருடைய குடும்பத்தினர் அவரை புரிந்து கொண்டார்களா? என்பதுதான் இந்த படத்தின் சுவையான, சுவாரஸ்யமான திரைக்கதை.

குடும்பக் கதை என்றாலும் மிகவும் எமோஷனலாக பல காட்சிகள் இருந்தாலும் அதையும் இடையிடையே கொங்கு தமிழிலில் நகைச்சுவைக்கும் திரைக்கதையில் மனதை சாக்கும் கூடிய அளவுக்கான காமெடி வசனங்களினால் படத்தை முதலில் இருந்து கடைசி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி.

தொடர்ச்சியாக பல நல்ல கதைகளில் நடித்து வரும் மணிகண்டன் மிகவும் கெட்டிக்காரத்தனமாக கதைகளை தேர்வு செய்கிறார்போல தெரிகிறது. இந்தப் படமும் அவருடைய மிக சிறப்பான ஒரு தேர்வு என்று உறுதியாக நாம் சொல்லலாம்.

காதலியுடனான அவசர திருமணத்தில் நடக்கும் களேபரங்கள், அலுவலகத்தில் எழுகின்ற பிரச்சனையை சமாளிக்க முடியாமல் அதே சமயம் நண்பனையும் விட்டுக் கொடுக்க முடியாமல் கடைசியாக அந்த வேலையே பறிபோகின்ற அளவுக்கு பிரச்சனையை செய்து விட்டு வெளியில் வருகின்றவிதம் குடும்பத்தில் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக செலவுகளை கூட்டிக் கொண்டே போவதும் அதை சமாளிக்க முடியாமல் திணறுகின்ற நிலை இதையெல்லாம் தன்னுடைய சிறப்பான உடல் மொழியாலும், தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் படம் முழுவதும் நம்மை கவர்ந்து இழுக்கிறார் மணிகண்டன்.

பல இடங்களில் அவருடைய பாடி லாங்குவேஜே நம்மை சிரிக்க வைத்துவிட்டது. அதிலும் குரு சோமசுந்தரத்தை பாலாஜி சக்திவேலின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஆள் மாறாட்டம் செய்து பேச வைக்கின்ற காட்சியில் பத்து நிமிடங்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது அவருடைய அம்மா சாப்பாட்டு தட்டை எடுத்துப் போகும் காட்சியில் தன் முகத்தில் கட்டுகின்ற வேதனை மறக்க முடியாத காட்சி. அதேபோல் குடும்பத்தினரிடம் தன்னுடைய இயலாமையை எடுத்துச் சொல்லி இங்க பணம்தான் முக்கியம் என்பதை நான் புரிஞ்சுகிட்டேன். இனிமே எனக்கு பணம்தான் தேவை. பணத்தை தேடி நான் ஓடுகிறேன்..” என்று அவர் கத்துகின்ற கத்தில் நியாயம் இருக்கிறது. மிக மிக நியாயமாக தன்னுடைய கேரக்டருக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார் மணிகண்டன்.

இவருக்கு அப்படியே செம டப் கொடுத்திருக்கிறார் நாயகியாக நடித்திருக்கும் சாவ்னி மேகனா. முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் அவருடைய நடிப்பும் ஒரு பக்கம் இந்த படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அதிலும் ரொமான்ஸ் காட்சிகளில் உடலைக் காட்டாமல் முக பாவனைகளை வைத்தே நடித்திருப்பது அவ்வளவு அழகு.

கர்ப்பிணியான பின்பு வீட்டுப் பிரச்சினைகளை கணவர் சமாளிக்கின்றவிதத்தைப் பார்த்து வருந்துவதிலும் எப்பொழுதும் மாமியார் அவரை குத்தி காட்டிக்கொண்டே இருப்பதற்கு, அவரும் திருப்பி பதில் சொல்லிக்கொண்டே இருப்பதும் மருத்துவமனைக்கு செல்லும்போதுகூட அவருடைய மாமியாரை அவர் செய்ததெல்லாம் தவறு என்று சொல்கின்ற நேரத்திலும் தனது நடிப்பினால் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார் சாந்தி.

வில்லன் இல்லை. ஆனால் வில்லன் மாதிரிதான். இப்படியொரு வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் தனது மிகச் சிறந்த குணசித்திர நடிப்பை காண்பித்திருக்கிறார் குரு சோமசுந்தரம். அதிலும் அவருடைய ஸ்பெஷாலிட்டியான சிரிப்பை காட்டிவிட்டு அவர் மணிகண்டனை வெறுப்பேத்தும்போது அவருடைய நடிப்பு நமக்கே ஒரு கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தில் ஆழ்ந்து நடித்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.

அலுவலகத்தில் அவரை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்து இருப்பதை அடுத்து சீன நாட்டுக்காரனாவே தான் மாற வேண்டும் என்பதற்காக அவர் வீட்டில் செய்கின்ற அரைவேக்காட்டுத்தனமான செயல்களும், அலப்பறைகளும் சிரிப்பை வரவழைக்கிறது. அவருடைய மனைவியாக நடித்திருக்கும் நிவேதிதாவும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்து நம்மிடமிருந்து பரிதாபத்தை பெற்றுக் கொள்கிறார்.

கோயம்புத்தூர் தமிழில் பேசி நடித்திருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அழகான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். பதிவாளர் அலுவலக வாசலில் தன்னை ஏமாற்றியவரிடமிருந்து கமிஷன் தொகையைக் கேட்டு மணிகண்டன் சண்டையிடும் காட்சியில் இடையில் குறுக்கே புகுந்து சமாதானப்படுத்தும் காட்சியில் தனது உச்சப்பட்ச நடிப்பைக் காண்பித்திருக்கிறார் சுந்தர்ராஜன்.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் கனகமும் தன்னுடைய நடிப்பை அவருடைய உடல் மொழியிலேயே காண்பித்து ஓகே வாங்கியிருக்கிறார். ஒரு சிறந்த அம்மா, இன்னொரு பக்கம் சிறந்த வில்லி என்கின்ற இரண்டு கதாபாத்திரங்களையும் ஒன்றாகவே செய்து காட்டியிருக்கிறார் கனகம்.

மணிகண்டனின் முதலாளியாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் குணச்சித்திர நடிப்பை காண்பித்திருக்கிறார். அவருடைய அலுவலகத்தில் நடக்கும் களேபரத்தில் அவர் காட்டுகின்ற ஆக்சனில் தியேட்டரே அதிர்கிறது. பாராட்டுக்கள் சார்.

இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கும் பிரசன்னா பாலச்சந்திரனும், அவருடைய மகன் ஜென்சன் திவாகர், அனிருத் என்ற அந்த கூட்டணியும் இன்னொரு பக்கம் படத்தைக் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அதிலும் கடைசியாக மது பாட்டில் மூடியை முழுங்கிவிட்டதாக ஜென்சன் சொல்ல அவரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு இன்னொரு காரில் அவரை விரட்டிக் கொண்டு போகின்ற காட்சிகளில் வயிற்று வலி வரும் அளவுக்கு நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள் பிரசன்னாவும், ஜென்சனும்.

சுஜித் எம்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு மீடியம் பட்ஜெட் படங்களில் எப்படி இருக்குமோ அது போலவே கொஞ்சமும் மாறாமல் அதே சமயம் கொஞ்சமும் குறையாமல் அளவாக இருக்கிறது.

கோயம்புத்தூர் பகுதியில், சுற்று வட்டாரங்களில், சாலை பகுதிகளிலும் மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள் கேமரா கோணங்களும் மிக சிறப்பு என்றே சொல்ல வேண்டும். எந்தக் கோணத்தில் எந்தக் காட்சியைப் படமாக்கினால் சிறப்பாக வருமோ, அதே அளவுக்கு அதே காட்சி கோணங்களில் மிக நேர்த்தியாக படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் வைசாக்கின் இசையில் பாடல்களை ஒரு முறை கேட்கலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால், பாடல்களைவிடவும் பாடல் காட்சிகளின் மான்டேஜ் சாட்சிகள் கதையை நகர்த்தக் கூடிய காட்சிகளை வந்திருப்பதால் பாடல்களை இரண்டாம்பட்சமாக வைத்து மான்டேஜ் காட்சிகளையே நாம் ரசிக்க முடிந்திருக்கிறது. அதிலும் அந்தக் காதல் பாடல் ஒன்று மிக மிக ரசனையானது.

இன்னொரு பக்கம் பின்னணி இசையும் கொஞ்சம் நாடகத் தன்மையோடு இந்த இடத்தில் நீங்கள் சிரித்தே ஆக வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவது போல, நமக்குள்ளே இருக்கும் நகைச்சுவைகளை தட்டி எழுப்புவது போல இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். இதற்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.

நகைச்சுவை வசனங்களைவிட நகைச்சுவை காட்சிகள் மிகச் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மிக அழகாக கத்திரிக்கோல் போட்டு இருக்கிறார் படத் தொகுப்பாளர் கண்ணன் பாலு. அதிலும் பாலாஜி சக்திவேல் அலுவலகத்தில் நடக்கின்ற அந்த 15 நிமிட டிராமா தொகுப்பினை அட்டகாசம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு கனகச்சிதமாக கத்தரி போட்டு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருiக்கும் பாராட்டுக்கள்.

படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது வசனங்கள்தான். கொங்கு தமிழில் அவர்கள் பேசுகின்ற பல வசனங்களில் அதையும், அவர்கள் இழுத்துப் பேசுகின்றவிதமே நமக்கு ஒரு சிரிப்பை தருகிறது. அதிலும் நிறைய வசனங்கள் படத்தின் கதையோடு ஒன்றி போய் இருப்பதால் நாமும் அதை கேட்டு ரசிக்க முடிந்திருக்கிறது. பிரசன்னா பாலச்சந்திரனின் வசனங்கள் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பக்க பலமாக அமைந்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

இப்போதைய இளைஞர்கள், இப்போதைய குடும்ப தலைவர்கள், இப்போதைய ஆண்கள் பலரும் ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையில் தாங்கள் அனுபவித்து வரும் பல்வேறு பிரச்சனைகள், வலிகள், துயரங்கள், கஷ்டங்கள் அனைத்தையும் இந்தப் படத்தில் நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டி அவர்களுக்கு ஒரு வழியையும் இந்தப் படத்தில் காண்பித்து கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கதையை முழுக்க முழுக்க சோகமயமாக எமோஷனலாகவே காட்டி இருந்தால் படம் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்காது. ஆனால் இதில் நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பதால் நிச்சயமாக இந்த படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தில் குறையாக நாம் பார்ப்பது வேலை போய்விட்டது என்பதை குடும்பத்தில் சொன்னால் என்ன பிரச்சனை ஆகிவிடப் போகிறது? அடுத்த வேலை தேடுவோம். அதுவரைக்கும் பணம் இல்லை என்றால் செலவுகளை குறைத்து யாரும் எந்த பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்று சம்பாதிக்கின்ற மகன் கேட்டுக் கொண்டால் பெற்றவர்களும், மனைவியும் கேட்க மாட்டார்களா?

மணிகண்டனின் இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமே அவர் தன்னுடைய வேலை பறிபோனதை தன் வீட்டில் சொல்லாமல் இருப்பதுதான். சொல்லாமல் இருப்பதற்கு அழுத்தமான எந்த ஒரு காரணமும் இந்தப் படத்தில் இல்லை என்பது இத்திரைக்கதையில் இருக்கும் மிகப் பெரிய சறுக்கல்.

அதை வீட்டில் சொல்லிவிட்டு இவ்வளவுதான் இனிமேல் சம்பாதிக்க முடியும்.. இவ்வளவுதான் கொடுக்க முடியும்.. அதற்குள்ளாக குடும்பத்தை நடத்திக் கொள்வோம் என்று சொல்லிவிட்டால் அடுத்து என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது..?

இப்பொழுதும் பல குடும்பங்களில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமே யாரும் வெளிப்படையாக பேசாமல் இருப்பதுதான். பணம் இல்லை. கடன் வாங்கித்தான் குடும்பத்தை ஓட்டுகிறோம் என்று சொல்வதைக்கூட மிகப் பெரிய அசிங்கமாக பலரும் நினைக்கிறார்கள்.

தன்மானத்தைக் காக்கவும், கவுரவுத்திற்காகவும் பல குடும்பத் தலைவர்கள் கடனை வாங்கி, வாங்கிக் குவித்து விட்டு கடன் கழுத்தை பிடித்தவுடன் அப்போதுதான் அனைவரிடமும் அதைச் சொல்லி கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டுகிறார்கள். இப்பொழுதுதான் குடும்பத்தில் மொத்த பிரச்சனையும் எழுகிறது.

கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டும் என்று யாரும் சொல்லாதபொழுது குடும்பத் தலைவர் விருப்பப்படி வாழ்ந்துவிட்டு கடைசியாக அந்தப் பிரச்சனையை மொத்தத்தையும் குடும்பத்தினர் மீது சுமத்துவது குற்றம் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்..! இந்த திரைக்கதை இயக்குர் வலிந்து திணித்த திரைக்கதை என்றே நமக்குக் தெரிகிறது.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் வாழ்பவன் பிரச்சனைகள் வந்தால், என்ன செய்வான் என்பதாக நாம் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இந்தப் படம் பலருக்கும் ஒரு பல பாடமாக இருக்கும்.

அனைவரும் அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த குடும்பஸ்தன்’.

RATING : 4 / 5

Our Score