இந்தப் படத்தை V.R.டெல்லா பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் V.R.மணிகண்டராமன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சுந்தர் சி. நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மணி பெருமாள், இசை – சந்தோஷ் தயாநிதி, கலை இயக்கம் – சக்தி வெங்கட்ராஜ், எக்ஸிகியூடிவ் புரொட்யூசர் – அசோக் சேகர், நடன இயக்கம் – கல்யாண், சந்தோஷ், சண்டை இயக்கம் – விக்கி நந்தகோபால், புகைப்படங்கள் – ராஜேந்திரன், பத்திரிக்கை தொடர்பு – சதிஷ் (AIM), எழுத்து, இயக்கம் – மணி சேயோன்.
மற்றைய ஹீரோக்களை போலவே இயக்குநர் சுந்தர்.சி.யும் தனது நடிப்புப் பணியைக் கைவிடாமல் தொடர்ச்சியாக கிடைத்த படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படமும் அப்படியொன்று.. 4 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.
பெரும் தொழில் அதிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் முறையாக விசாரிக்காததால் இந்த வழக்கை ஏற்கனவே சஸ்பெண்டில் இருக்கும் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி–யிடம் ஒப்படைக்கிறார் உயர் போலீஸ அதிகாரி.
சுந்தர்.சி இந்த வழக்கை விசாரிக்கும்பொழுது அவருடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு துயரத்திற்கும் இந்தக் கொலைக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்.
அதற்குப் பிறகு அதில் இருக்கும் முடிச்சுகளை அவிழ்த்து கொண்டே போக எதிர்பாராத பல கதைகளும், சம்பவங்களும் வெளியில் வருகிறது. இதற்கு அடுத்து மேலும் சில கொலைகள் நடந்துவிட இப்பொழுது சுந்தர்.சி–யை சுற்றிலும் மர்மங்கள் நிகழ்கின்றன. அந்த மர்மங்கள்தான் என்ன..? அந்த கொலைகளை யார் செய்தது..? அந்த தொழிலதிபரை கொலை செய்த்து யார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்தப் புத்தாண்டின் துவக்கத்திலேயே மதகஜராஜா என்கின்ற படத்தின் மூலம் பம்பர் ஹிட்டு அடித்திருக்கும் நிலையில், அதிகமாக சுந்தர்.சி–யின் பெயர் அடிபடுவதால் சூட்டோடு சூட்டாக இந்தப் படத்தைத் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு கெத்தான, ஒரு மிடுக்கான தோற்றத்தில் படம் முழுவதும் வலம் சுந்தர்.சி அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். தான்யாவுடனான நட்பு உருவாகும் காட்சியிலும் அதற்குப் பிறகு அவரை சந்தித்து பேசுகின்ற காட்சிகளிலும், அவருடைய அந்த காதல் வளர்கின்ற காட்சியிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார் சுந்தர் சி.
தான்யாவுக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி கேள்விப்படும்பொழுது அவர் காட்டுகின்ற அந்த அழுகையும் சோகமும் மட்டும்தான் பார்க்க, நமக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. இனிமேல் சுந்தர்.சி–யை இப்படி யாரும் அழுக வைத்து விடாதீர்கள் என்று இயக்குநர்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் வருகின்ற காட்சிகளில் எல்லாம் நம்மை பெரிதும் கவர்கிறார் தான்யா ஹோப். கேமராவுக்கு ஏற்ற முகம். திருமணம் சம்பந்தமான தன்னுடைய விருப்பு, வெறுப்புகளை அவர் சுந்தர்.சி–யிடம் சொல்கின்ற காட்சிகளும் தன்னை அறியாமலே அவர் காதலில் விழுகின்ற திரைக்கதைகளும் பெரிதும் கவர்கிறது.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் ஹெபா படேல் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார் என்றாலும் அவருடைய முகமே நம்மை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. கொஞ்சமே அவரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
தொழிலதிபரின் அப்பாவாக நடித்த ஜெயக்குமாரும், மனைவியாக நடித்த அபிராமி வெங்கடாசலமும் சோகத்தைக் கூட்டியிருக்கிறார்கள். மேலும் சாந்தினி தமிழரசன் அருள் டி.சங்கர், ‘தலைவாசல்’ விஜய், டி.எஸ்.கே. என்ற மற்ற வேடங்களில் நடித்தவர்களும் மிக சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர், தேடுதல் வேட்டை என்பதால் கதாபாத்திரங்கள் வசனங்களை பேசியே படத்தை நகர்த்தியுள்ளனர். அதிகமாக நடிப்பு தேவைப்படவில்லை என்பது இன்னொரு விஷயம்.
ஒளிப்பதிவாளர் மணி பெருமாள் இன்னும் கொஞ்சம் அழகாக படத்தை எடுத்திருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது. ஊட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டும் அந்த அழகு மாறாமல் அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதைப்போல் சுந்தர்.சி–யும், தான்யா ஹோப்பும் சந்திக்கின்ற காட்சிகளையும், இருவருக்குமிடையில் காதல் உருவாகின்ற காட்சிகளையும் அழகான ஒளிப்பதிவில் படமாக்கியிருக்கிறார்கள்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான். இரண்டு கிளப் டான்ஸ் பாடல்களும் ரசிக்கும்படியாக இருந்தாலும் ஹெபா பட்டேலின் நடனமும், அந்த துள்ளலும் வசீகரிக்கிறது.
மர்டர், மிஸ்டரி, சஸ்பென்ஸ், திரில்லர் என்கின்ற கதை என்பதால் அதற்குப் பொருத்தமான அளவுக்கான படத் தொகுப்பினை படத் தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் கொடுத்திருக்கிறார்.
அடுத்தடுத்த காட்சிகள் நகருகின்ற பொழுது அது இன்னொரு சஸ்பென்சை கூட்டிக் கொண்டே போவதுபோல திரைக்கதை அமைத்திருப்பதால் அதை ரசிக்கும்படியாகவே படத் தொகுப்பு செய்து இருக்கிறார்.
ஒரு கொலை நடந்து அந்த கொலையைச் சுற்றிலும் விசாரணையில் இன்னும் சில கொலைகள் நடந்து ஏற்கனவே நடந்த கொலைகளுக்கும் இதற்குமான தொடர்புகள், சட்ட விரோத செயல்கள், இதை எப்படி கண்டுபிடிப்பது..? எப்படி முடிச்சுகளை அவிழ்ப்பது..? என்கின்ற ரீதியில் கதை திரைக்கதையை கச்சிதமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் மணி சேயோன்.
கொலை வழக்கில் இன்வெஸ்டிகேஷன் செய்கின்ற திரைக்கதையாக இருந்தாலும் கடைசிவரையில் பார்க்க வைப்பதுபோல திரைக்கதையில் அவ்வப்பொழுது டிவிஸ்ட்டுகளை கொடுத்துக் கொண்டே வந்து கடைசியாக முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறார் இயக்குநர்.
அந்த வகையில் இந்தப் படம் ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்றே சொல்லலாம்.
RATING : 2.5 / 5