உலகளவில் சினிமா துறைக்கென்று வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியின் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் போட்டியிட ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் தேர்வு செய்து அனுப்பப்படும். அந்த வகையில் இந்த முறை முதல் கட்டமாக 14 இந்திய படங்களை தேர்வு செய்தனர்.
அந்த லிஸ்டில் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம், மலையாள மொழியில் வெளியான ‘நாயாட்டு’, ஹிந்தியில் வெளியான ‘ஷெர்னி’, ‘சர்தார் உதாம் சிங்’ என்ற மற்றொரு ஹிந்தி திரைப்படம், ‘பிரிட்ஜ்’ என்ற அசாமி திரைப்படம் இப்படி 14 திரைப்படங்கள் போட்டியிட்டன.
இந்தப் பட்டியலில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு ஒரு படத்தினை பரிந்துரை செய்ய ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் போட்டிக்கு வந்த 14 படங்களில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வினோத் இயக்கிய ’கூழாங்கல்’ என்ற தமிழ்த் திரைப்படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வறுமை, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வாழ்வியல் திரைப்படமாக உருவாகி உள்ளது.
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வந்த ‘கூழாங்கல்’ திரைப்படம், தற்பொழுது சிறந்த இந்திய திரைப்படமாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை தொடர்ந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பை இந்த ‘கூழாங்கல்’ திரைப்படம் பெற்றுள்ளது.
இது குறித்து பேசியுள்ள இந்த திரைப்படத்தின் இயக்குநரான வினோத், “எங்களது ‘கூழாங்கல்’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ள எதிர்பாராத கவுரவம்…” இது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு சுற்று பரிசீலனை எஞ்சியுள்ள நிலையில் உலகம் முழுக்க உள்ள ஜுரிக்களின் வாக்குகளை பெறும் பட்சத்தில் ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெறக்கூடும்.
இதற்காக இன்னும் சில நாட்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.









