டி.என். பிலிம்ஸ் சார்பில் எம்.ஏழுமலை தயாரிக்கும் புதிய படம் ’கொஞ்சம் நடிங்க பாஸ்’.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் வசந்த், ஜெயசிம்மா, ராஜேஷ், ஐயப்பா பைஜு, ரஞ்சனா மிஸ்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, பிரமானந்தம், மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ’கயல்’ தேவராஜ், ஆர்த்தி, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்க, இவர்களுடன் மலையாள பிரபல நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சார மூடு முதல் முறையாக தமிழில் நடிக்கிறார். மலையாளத்தில் நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு, நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர்.
இந்தப் படத்திற்கு டி.எம்.ஏ.அஜிஸ் இசையமைக்க, சம்சாது ஒளிப்பதிவு செய்கிறார். ’பாலக்காட்டு மாதவன்’ வெற்றிப் படத்தை இயக்கிய எம்.சந்திரமோஹன், கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் இது.
உழைப்பாளியின் வியர்வை காயும் முன் அவரது கூலியை கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் தமிழ் பண்பாடு. ஆனால், அந்த உழைப்பை சுரண்டி ஏமாற்ற நினைக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் சிக்கி தவிக்கும் நான்கு இளைஞர்களின் கதைதான் இந்த ’கொஞ்சம் நடிங்க பாஸ்’ திரைப்படம். நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.
கலை இயக்குநர் ராபர்ட் பால்ராஜ் தலைமையில் பொள்ளாச்சியில் பிரமாண்ட பங்களா செட் அமைத்து வருகிற 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத், கேரளா ஆகிய இடங்களில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.