full screen background image

இலங்கை தமிழ் சினிமாவை உயிரூட்ட வரும் ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படம்

இலங்கை தமிழ் சினிமாவை உயிரூட்ட வரும் ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படம்

நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தமிழ் சினிமாவிற்கு இணையாக வளர்ந்து வந்த இலங்கை தமிழ் சினிமா, அந்த நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் முடக்கப்பட்டிருந்தது.

எனினும் சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் போல மீண்டும் இலங்கை தமிழ் சினிமா உயிர்த்தெழும் வண்ணம் வெளியாகவிருக்கிறது ‘கோமாளி கிங்ஸ்’ எனும் முழு நீள நகைச்சுவை திரில்லர் திரைப்படம்.

உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இலங்கை தமிழ் சினிமா கலைஞர்களால்  நல்ல கதைக் கரு உடைய, சிறந்த திறமைகளை வெளிப்படுத்துகின்ற, நேர்த்தியான தயாரிப்பு தரம் உடைய திரைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபிப்பதே ‘கோமாளி கிங்க்ஸ்’ படக் குழுவினருடைய இலக்கு ஆகும்.  

இலங்கையில் தமிழர் செறிந்துவாழும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ‘கிங் ரட்ணம்’.

இலங்கையில் பல்வேறுபட்ட விளம்பரங்கள், விவரணப் படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கியுள்ள கிங் ரட்ணத்தின் முதலாவது முழு நீளத் திரைப்படமான ‘கோமாளி கிங்ஸ்’ இலங்கையில் வழக்கிலிருக்கும் ஐந்து தமிழ்ப் பேச்சு வழக்குகளை உள்ளடக்கியதாகவும், இலங்கை தமிழ் சினிமாவின் தனித்துவத்தைப் பிரபலிப்பதாகவும் அமைந்திருக்கின்றது.

அண்மையில் ‘கலாபூசணம்’ விருது பெற்ற மூத்த கலைஞர் ராஜா கணேசன் உடன் இணைந்து,  2014-ம் ஆண்டின் சிறந்த  நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்ற தர்சன் தர்மராஜ் மற்றும் நிரஞ்சனி சண்முகராஜா, ‘பிரவேகய’ திரைப்படம் மூலம் இலங்கைத் திரைத்துறையில் புகழ் பெற்ற நடிகர் கஜன் கணேஷன் மற்றும் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சிப் பிரபலமான சத்யப்ப்ரியா ஆகியோர் இந்த ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களோடு இணைந்து இயக்குநர் கிங் ரட்ணமும் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.  இலங்கையில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் மையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதோடு இலங்கை மற்றும் இந்திய திரைத்துறையில் அனுபவம் பெற்ற அஞ்சலோ ஜோன்ஸின் படத் தொகுப்பிலும் ஸ்ரீராம் சச்சியின் மனம் கவரும் இசையிலும் இறுதிக்கட்ட தயாரிப்பு வேலைகளில் மும்மரமாக இடம் பெற்று வருகின்றன.

‘பிக்சர் திஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய குழாம் இந்த ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படத்தினைத் தயாரித்துள்ளது. ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் உப தலைவர் கணேஷ் தெய்வநாயகம், ஆரோக்யா இண்டர்நஷனல் நிறுவனத் தலைவர் திருமதி தாரணி மற்றும் சிலோன் தியட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் செல்வ ஸ்கந்தன் ஆகியோர் இத்தயாரிப்புக் குழாமைத் தலைமை தாங்குவதோடு 1976-ம் ஆண்டு இலங்கையில் வெளிவந்து அமோக வெற்றி பெற்ற ‘கோமாளிகள்’ திரைப்படத்தின் முன்னாள் நட்சத்திரமும், இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளருமாகிய பி.ஹெச்.அப்துல் ஹமீத் அவர்கள் இத்திரைப்படத்தின் கௌரவ வழிகாட்டியாகக் கை கோர்த்துள்ளார். 

”எனது வாழ்க்கை பொய்கள் நிறைந்தது, சுவாரஸ்யம் அற்றது, அதை சுவாரஸ்யமாக்க என்னை யாராவது கடத்தி சென்றால் நல்லதுதான்” எனும் கருவை மையமாகக் கொண்டு நகரும் ‘கோமாளி கிங்ஸ்’ திரைப்படமானது 2016-ம் ஆண்டின் இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் வெளியாகுமென படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score