ஜெ.கே. மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.ஜெயகுமார் தயாரித்துள்ள படம் ’88.’ இந்தப் படத்தில் மதன் என்கிற புதுமுகம் கதாநாயகனாக நடித்து, படத்தையும் இயக்கியிருக்கிறார். இவர் பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். இவர் ‘மிஸ் இண்டியா’ ‘ஏசியா 2015’-ல் பட்டம் வென்றவர். மற்றும் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீரா கிருஷ்ணன், பவர் ஸ்டார், சாம்ஸ், அப்புகுட்டி, சாப்ளின் பாலு, சிசர் மனோகர், சேரன் ராஜ், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வெற்றி, இசை – தயாரத்னம், கலை –ஆரோக்கியராஜ், பாடல்கள் -அறிவுமதி, மதன் கார்க்கி, நடனம்- காதல் கந்தாஸ், சண்டை பயிற்சி – சக்தி சரவணன், படத் தொகுப்பு – அவினாஷ் ஓட்டேரி, தயாரிப்பு மேற்பார்வை – ராம்பூபால், தயாரிப்பு -A.ஜெயகுமார், எழுத்து, இயக்கம் – மதன்.
படம் பற்றி பேசிய இயக்குநர் மதன், “இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் தொழில் நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாகவும் உயர்ந்திருக்கிறது. இந்த இரு வேறு குணாதிசயம் கொண்ட தொழில் நுட்ப வளர்ச்சி நமது கலாச்சாரத்தில் எவ்வாறு சீர்கேட்டை உருவாக்குகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை..!
சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மறைத்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் பகிரங்கப்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சனைகளையும் இதில் பேசியுள்ளோம். ஒரு நல்ல கருத்தை கமர்ஷியலாகக் கையாண்டுள்ளோம். படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம், கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது..” என்றார்.









