full screen background image

கோடை மழை – சினிமா விமர்சனம்

கோடை மழை – சினிமா விமர்சனம்

திருநெல்வேலி பக்கத்தில் சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆராய்ச்சிப்பட்டி என்றொரு கிராமம். முன்னொரு காலத்தில் வேறிடத்தில் அடித்து விரட்டப்பட்டு கூட்டம், கூட்டமாக வந்து சேர்ந்த மனிதக் கூட்டம் இங்கே கால் வைத்து ஒரு ஊரை உருவாக்கி குடியமர்ந்தது..

துவக்கக் காலத்தில் விளைந்ததை வைத்தும், விவசாயத்தையும் நம்பியும் இருந்த ஊர், வெள்ளாமை தவறியதாலும், மழையில்லாமல் வரண்ட ஊராக மாறியதால் பசி, பட்டினி ஏற்பட்டு பஞ்சமாகிப் போக வேறு வழியில்லாமல் பிழைப்புக்காக திருட்டுத் தொழிலில் இறங்கினார்கள்.

இப்போது அங்கேயிருப்பவர்கள் மூன்றாவது தலைமுறை என்றாலும் விட்டகுறை தொட்ட குறையாக திருட்டுத் தொழிலை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த ஊர்தான் கதையின் களம். ஹீரோவான கண்ணன் மிலிட்டரியில் இருப்பவர். அவருடைய பாட்டி மட்டுமே சொந்தம். இவருடைய கூட்டாளி பொடுங்கு ரகசியமாக திருட்டு தொழிலை செய்து வருகிறார். ஆனால் அதனை நண்பனிடத்தில் சொல்லாமல் மறைக்கிறார்.

இந்த பொடுங்குவின் பங்காளி முறையில் அண்ணனான இயக்குநர் களஞ்சியம்தான் அந்த ஊர் இன்ஸ்பெக்டர். கடும் கோபக்காரர். நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த ஊர்க்காரர்களின் திருட்டுப் புத்தியை நன்கு அறிந்தவர். உறவினர்கள் என்றுகூட பார்க்காமல் அவர்களில் பலரையும் கைது செய்திருக்கிறார்.

இவருக்கு ஒரு தங்கை. ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா. இப்போது பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். ஹீரோ கண்ணன் விடுமுறையில் ஊருக்கு வந்தவர் ஹீரோயினை பார்த்தவுடன் லவ்வாகிறார். பிரியங்கா வழக்கம்போல தனக்கு காதல் இல்லை என்று மறுத்தாலும் பின்பு மெல்ல, மெல்ல காதல்வயப்படுகிறார். ஆனாலும் தனது இன்ஸ்பெக்டர் அண்ணனை நினைத்து உள்ளுக்குள் பயந்து போயிருக்கிறார் பிரியங்கா.

ஒரு முறை கேரளாவில் கொள்ளையடித்த பொருளை எடுத்து வர நினைக்கும் பொடுங்கு, அதனை வெளியில் சொல்லாமல் “ஒருத்தரை பார்க்கணும்..” என்று சொல்லி ஹீரோவை அழைத்துக் கொண்டு கேரளா செல்கிறான்.

கொள்ளையடித்த நகைகளை பத்திரமாக ஊருக்குள் கொண்டு வந்துவிட்டாலும் கடைசி நிமிடத்தில் இது கண்ணனுக்கு தெரிந்துவிடுகிறது. “நான் சொல்லியும் கேட்காமல் திருடுகிறாயா..?” என்று கோபப்பட்டு பொடுங்குவுடனான நட்பை துண்டித்துக் கொள்கிறான் கண்ணன்.

இன்னொரு பக்கம் தனது காதலுக்காக வேண்டுமென்றே “கால் பிசகிருச்சு” என்று பொய் சொல்லி அடிக்கடி ஹீரோவின் வீட்டுக்கு வந்து அவனுடைய பாட்டியிடம் சிகிச்சை பெறுகிறாள் ஹீரோயின். பாட்டிக்கும் ஒரு நாள் இவர்களின் திருட்டுக் காதல் விஷயம் தெரிந்துவிட.. எப்படியும் பெண் கேட்டு கல்யாணத்தை முடிக்கலாம் என்று நினைக்கிறாள் பாட்டி.

அதற்குள்ளாக களஞ்சியத்தின் உறவுக்குள்ளேயே ஒரு அத்தை தனது மகனுக்கு வந்து பெண் கேட்க “அவ சின்னப் பொண்ணு.. படிச்சு முடிக்கட்டுமே…” என்கிறார் களஞ்சியம். அந்தப் பேச்சுவார்த்தை களேபரத்தில் முடிவடைய, அவர்கள் அவமானத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் காதலர்கள் சிறகடித்துப் பறக்க ஒரு நாள் இன்ஸ்பெக்டர் அண்ணன் பார்த்துவிடுகிறார். ஆத்திரப்படாமல், நிதானமாக யோசித்துப் பார்க்கிறார். “நல்ல பையன்தான்.. மிலிட்டரில இருக்கான். அது ஒண்ணுதான் பிரச்சினை..” என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்கிறார்.

இடையில் பொடுங்கு திருட்டுத் தொழிலை கைவிட்டுவிட்டதாக கண்ணனின் பாட்டியே சொல்லி சர்டிபிகேட் கொடுக்க கண்ணனுக்கும், அவனுக்குமான நட்பு மீண்டும் துளிர் விடுகிறது.  

இதைத் தொடர்ந்து பொடுங்குவுக்கும், அவன் காதலித்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுகிறது. அந்த நன்னாளிலேயே பொடுங்குவை திருட்டு வழக்கில் கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர் களஞ்சியம். ஸ்டேஷனில் வைத்து செய்யும் சித்ரவதையில் பொடுங்கு இறந்து போகிறான். தாலி ஏறிய முதல் நாளிலேயே தாலியறுக்க வைத்துவிட்ட இன்ஸ்பெக்டர் மீது கோபமாகும் கண்ணன் அவரை அடித்துவிடுகிறார். இருவருக்குள்ளும் பகை மூள்கிறது.

தன் மீது கை நீட்டிய மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கும் இன்ஸ்பெக்டர் களஞ்சியம்.. தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் துவங்குகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க..

புதுமுக ஹீரோ.. சின்ன பட்ஜெட் ஹீரோயின்.. மற்றவர்களும் அப்படியே.. கிராமத்துக் கதை.. விளம்பரப்படுத்த முடியாத அளவுக்கான பட்ஜெட் பற்றாக்குறை.. இது போன்ற பல குறைகளுடன் திரைக்கு வந்திருக்கும் இந்தப் படத்தினை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆதரித்து கை கொடுத்து தூக்கிவிட வேண்டும்..!

இயக்குநர் கதிரவன் தன்னால் முடிந்த அளவுக்கு மிக நேர்மையாக படத்தினை பதிவு செய்திருக்கிறார். உருவாக்கியிருக்கிறார். சேதாரமில்லை.. செய்கூலி இல்லை என்பதோடு படத்தில் செய்நேர்த்தியும் சிறப்பாக இருக்கிறது..!

நடித்தவர்கள் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு நடிப்பு தென்பட்டிருக்கிறது என்பதே இந்த இயக்குநருக்கு கிடைத்திருக்கும் வெற்றி. கண்ணனும், ஸ்ரீபிரியங்காவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ‘முள்ளும் மலரும்’ ஷோபா போலவே பல காட்சிகளில் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார் ஹீரோயின். “நான் முக்கியமா? உங்கண்ணன் முக்கியமா..?” என்று ஹீரோ கேட்கும்போது “எனக்கு பதில் சொல்லத் தெரியல..” என்கிற பதில் அங்கேயிருந்து வந்ததுதான்..!

அதென்ன எல்லா ஹீரோக்களும் இப்படியே காதலிகளை டாமினேட் செய்து புத்தியிழக்கச் செய்கிறார்கள். இதில் பிரியங்காவின் நடிப்பு குற்றம், குறையில்லாதது.. பல காட்சிகளில் பிரேமை அழகுபடுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.  சுத்த தமிழச்சியான இவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் இன்னமும் உரிய அங்கீகாரம் கிடைக்காதது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சாபக்கேடுதான்..!

படத்தில் அதிசயமாக ஆச்சரியப்பட வைத்திருப்பது சோலோ காமெடியனாக களம் இறங்கியிருக்கும் இமான் அண்ணாச்சி அண்ட் கோ-வின் காமெடி தர்பார்தான். இவருடைய 5 காமெடி தனி டிராக்குகளுமே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றன. அவருடைய டீமுக்கு நமது பாராட்டுக்கள்..!

எந்தக் காட்சியும் போரடிக்காத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். கிராமத்து யதார்த்த மக்களின் வாழ்வியலையும் நடிப்பே தெரியாமல் காட்டியிருக்கிறார். கால் சுளுக்குக்கு பாட்டி கொடுக்கும் பாரம்பரியமான வைத்திய முறையை இந்தப் படத்தில்தான் முதல் முதலாக பார்க்கிறோம். இதேபோல் பொடுங்குவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை அந்தச் சோகம் தணியாமல் கேமிராவில் பதிவாக்கியிருக்கிறார்கள். ஊருக்கு ரெண்டு பேர் வெட்டி ஆபீஸர்களாக இருப்பார்களே.. வெறும் வாயால் முழம் போடும் அரசியல்வாதிகள் சிலரையும் அடையாளம் காட்டியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரனாக இருக்கும் ஹீரோ.. ஊரில் இருந்து போனில் அழைப்பு வந்தவுடன் அங்கிருந்து கிளம்பி வருவதில் துவங்கும் கதை.. இடையிடையே பிளாஷ்பேக் உத்தியில் சொல்லப்பட்டு கிளைமாக்ஸில் வந்து நிற்கும்போது, அதுவரைக்கும் நடந்த விஷயங்களின் தொடர்ச்சியாகவே அது நடக்கிறது என்பதுபோலவே தோன்றுகிறது. படத்தொகுப்பாளரின் மெச்சத் தகுந்த இந்தப் பணி பாராட்டுக்குரியது..

வானம் பார்த்த பூமியாய்.. பொட்டல் வெளியையும், வயல் வெளியையும், ஊரின் சுற்றுப்புறத்தையும் அச்சு அசலாய் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிரவன். சாம்பசிவத்தின் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஏனோ மனதுக்குள் உட்காரவில்லை. ஆனால் தனியே கேட்டால் பிடிக்கும்போல..! படத்தின் இரண்டு பாடல்கள் மட்டுமே முணுமுணுக்க வைக்கும் ரகம்..!

கிளைமாக்ஸ் காட்சியில் ரத்தம் சொட்டும் என்று எதிர்பார்த்தால் அங்கே கிடைக்கும் எதிர்பாராத டிவிஸ்ட்டு மனதை பிசைய வைத்துவிட்டது.. குடும்பத் தலைவனுக்கு அளவுக்கதிகமான அவசரத்தனமும், ஆளுமைத்தனமும் இருந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அந்த இறுதிக் காட்சி காட்டுகிறது. அந்தக் காட்சியை ஒரு கவிதை வடிவில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். எழுந்து செல்பவர்களின் மனதுக்குள் ஒரு பாரம் அழுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறார் இயக்குநர். அது சரியாகவே இருந்திருக்கிறது.

நிறைய புதுமுகங்களை வைத்துக் கொண்டு, அதிக விளம்பரமில்லாமல், சிறந்த இயக்கத்தில் ஒரு தேர்ந்த கதையை படமாக்கியிருக்கும் இந்த ‘கோடை மழை’ படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

உணர்ந்து பார்த்தால் ‘கோடை மழை’ ஒரு அழகான சிறுகதை..!

Our Score