சூப்பர் ஸ்டார் ரஜியின் கோச்சடையானுக்கு மறுபடியும் ஒரு சோதனை..!
தயாரிப்பாளர் முரளிமனோகர் முன்பு தயாரித்து, வெளியிட்ட வகையில் தங்களுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையில் புல் செட்டில்மெண்ட் செய்யாததால் படத்தினை நிறுத்துவதாக விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று மாலை அறிவித்துள்ளது.
இதனால் படு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று கொண்டிருந்த கோச்சடையான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குள்ளாக முதல் 3 நாட்களுக்கான ஷோக்கள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகிவிட்டதாகத் தகவல்..
விநியோகஸ்தர்கள் தரப்பிடம், தயாரிப்பாளர்கள் சார்பில் இப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஏதாவது ஒரு முடிவாகும் என்றும் சொல்கிறார்கள். இல்லையெனில் படம் நிச்சயமாக மே 23 வெள்ளியன்றுதான் வெளியாகும் என்று தெரிகிறது. இன்னமும் அதிகாரப்பூர்வமாக இந்தச் செய்தி வெளியிடப்படவில்லை.
இதற்காகவே காத்திருந்தாற்போல் ‘யாமிருக்க பயமே’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் ரீலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை கிரீன் ஸ்டூடியோ பெற்றுள்ளது.
கோச்சடையான் தயாரிப்பாளர் முரளி மனோகர், விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையே 36 கோடி என்கிறார்கள். இதனை பணமாகத் தர வாய்ப்பில்லை என்று சொல்லி பல இடங்களில் கோச்சடையான் பெட்டியை அவர்கள் தலையில் கட்டினார் தயாரிப்பாளர். விநியோகஸ்தர்கள் இதனை ஏற்க மறுத்து நேற்றே எதிர்க்குரல் எழுப்பியிருந்தார்கள். இன்று அது பூதாகரமாக வெடித்துள்ளது.
இதோடு கூடவே தியேட்டர் உரிமையாளர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் கிடைக்கும் வசூல் தொகையில் தங்களுக்கான பங்கீட்டை 75 சதவிகிதமாக உயர்த்தும்படி திடீர் போர்க்கொடியைத் தூக்கியிருக்கிறார்கள். இப்படி எந்தப் படத்துக்கும் இதுவரையில் யாரும் கே்ட்டதில்லையாம்.. அதிகப்பட்சம் 60-40 சதவிகிதம் ம்டடுமே நடந்திருக்கிறது. இப்போது தியேட்டர் உரிமையாளர்கள் இப்படி கேட்பது அநியாய கொள்ளை என்கிறது கோச்சடையான் தயாரிப்பு டீம்..
படத்தின் அனிமேஷன் காட்சிகளுக்காக கோடிகளில் நிறையவே செலவுகளைச் செய்துவிட்டதால் இத்தனை சதவிகித பங்கீட்டை விட்டுக் கொடுத்தால் தங்களுக்கு பெருத்த நஷ்டமாகும் என்பதை தயாரிப்பாளர் தரப்பு தியேட்டர்காரர்களிடம் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் தரப்பில் இன்னமும் மசியவில்லையாம்..
சில பிரச்சினைகளை அன்றைக்கே தீர்க்காவிட்டால் அது பின்னாளில் நமக்குத் தேவையான நேரத்தில் தீர்வைக் கொடுக்காமல் இழுத்தடிக்கும். சினிமா துறையில் நீண்ட வருடங்களாக இருக்கும் முரளி மனோகர் போன்றவர்களே இதனை புரிந்து கொள்ளாமல்.. செயல்படாமல் இருந்தது முட்டாள்தனம்..
இதனால் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோச்சடையான் பட டீம்தான்..!
பாவம்.. சூப்பர் ஸ்டார் படத்துக்கே இந்த கதியென்றால் மற்றவர்களையெல்லாம் என்னவென்று சொல்வது..?