full screen background image

ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்!

ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்!
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப் படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி,  சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக  தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கிரியேட்டிவ் புரொடியூசராக தினேஷ் குணாவும், நிர்வாக தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகமும் பணியாற்றுகிறார்கள்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத் தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கையாள, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார்.‌

இந்தப் படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், ”என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு ‘கிங்ஸ்டன்’ போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்து கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  திறமையான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளரானது குறித்து நடிகர் ஜீ.வி.பிரகாஷ் பேசும்போது, “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். இந்த “கிங்ஸ்டன்” படத்தின் கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் இத்திரைப்படம் முழுமையாகக் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது. உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன்.

எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தினை என்னுடன் கை கோர்த்து தயாரிக்கவிருக்கும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்றார்.

Our Score