full screen background image

கிங் ஆஃப் கொத்தா – சினிமா விமர்சனம்

கிங் ஆஃப் கொத்தா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெஷ்மி, ‘டான்ஸிங் ரோஸ்’ சபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வடசென்னை சரண், அனைகா சுரேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – அபிலாஷ் ஜோஷி, எழுத்து – அபிலாஷ் என்.சந்திரன், ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி, இசை – ஜேக்ஸ் பிஜாய், படத் தொகுப்பு – சிவம் சசிதரன், பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.

இந்தப் படம் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படத்தின் கதை 1985 மற்றும் 1995 ஆண்டுகளில் நடைபெறுகிறது.

கேரளாவில் கடலோரம் இருக்கும் சின்னஞ்சிறு நகரம் ‘கொத்தா’. போதை பொருட்கள் நடமாட்டம் அதிகம். ஊர் முழுவதும் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

இந்த ஊரை தற்போது தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் மிகப் பெரிய போதைப் பொருள் வியாபாரியான கண்ணன் பாய். இதுவரையிலும் அந்த ஊரில் இருந்த போலீஸ் உயரதிகாரிகளெல்லாம் வந்த வேகத்தில் ஓடிவிட்டதால், புதிதாக இன்ஸ்பெக்டர் பணிக்கு வந்து சேர்கிறார் ஷாகுல்.

ஷாகுல் வந்த வேகத்திலேயே கண்ணன் பாயுடன் சண்டைக்குப் போக, அவன் ஷாகுலை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறான். கண்ணன் பாயை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியாது என்ற உண்மையை உணரும் ஷாகுலுக்கு, கண்ணன் பாயின் பழைய வரலாறு தெரிகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பாக இதே ஊரின் டானாக இருந்த ராஜூ பாயிடம் உதவியாளராக கண்ணன் பாய் இருந்ததும், ராஜூ பாயை எதிர்த்து தனிக் கடை போட்டு கஞ்சா விற்க முனைந்த தகராறில் ராஜூ பாய் ஊரைவிட்டு ஓடி தற்போது உத்தரப்பிரதேசத்தில் வாழ்வதும் ஷாகுலுக்கு தெரிய வருகிறது.

உடனடியாக ராஜூ பாயை ‘கொத்தா’வுக்கு வரவழைத்து அவர் மூலமாகவே கண்ணன் பாயை அடக்க நினைக்கிறார் ஷாகுல். இதற்குத் தோதாக கண்ணன் பாயின் மைத்துனன், ராஜூ பாயின் தங்கையைக் காதலித்து வருவது தெரிய வர.. தங்கையின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி ராஜூ பாயை ‘கொத்தா’வுக்கு வரவழைக்கிறார் ஷாகுல்.

வந்த வேகத்திலேயே கண்ணன் பாயுடன் மோதும் ராஜூ பாய், இன்ஸ்பெக்டர் ஷாகுல்தான் திட்டமிட்டு தன்னை இங்கே மீண்டும் வரவழைத்திருப்பதையும், தன்னையும், கண்ணன் பாயையும் மோதவிடுவதே அவரது நோக்கம் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.

ஆனாலும் அதிலிருந்து தப்பிக்க வழியில்லாமல் தொடர்ச்சியாக கண்ணன் பாய்-ராஜூ பாய் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்து இரு தரப்பிலும் வெட்டுக் குத்து, சாவு என்று நடந்து கொண்டேயிருக்கிறது.

இறுதியில் ஷாகுலின் திட்டம் பலித்ததா..? கண்ணன் பாய்-ராஜூ பாய் இருவரில் யார் பிழைத்தது..? கொத்தாவின் புதிய டான் யார்..? என்கிற கேள்விக்கெல்லாம் விடைதான் இந்த ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தின் 3 மணி நேர திரைக்கதை.

துல்கர் சல்மானை இதுவரையிலும் சாக்லெட் பாயாக.. கல்லூரி மாணவனாக.. ஐடி இளைஞனாக என்று நாகரிக பாணியிலேயே பார்த்துப் பழகிவிட்ட அவரது ரசிகர்களுக்கு, அதே துல்கரை வேறொரு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி.

வாயில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்.. எதைப் பற்றியும் கவலைப்படாத குடிகார இளைஞன், அப்பா, அம்மாவுடன் பிணக்கு என்றாலும் தனது தங்கை மீது பாசம் கொண்ட அண்ணன் என்று தனது ராஜூ பாய்’ கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் துல்கர்.

வேகமான அசத்தல் ரவுடியாக மட்டுமிலலாமல், ஒரு நல்ல அண்ணனாகவும், சிறந்த காதலனாகவும் இருக்க வேண்டிய உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அழகாகப் பொருந்திப் போகிறார் துல்கர்.

1985-ம் வருடத்திய காட்சிகளில் “காதலிச்சுப் பார்.. அந்த அவஸ்தை தெரியும்” என்று ஷபீரிடம் சொல்லும் அளவுக்கு காதலால் படும் அவஸ்தையை, தனது ரவுடியிஸத்திற்கு இடையே காட்டும் துல்கரை ரசிக்க முடிகிறது.

அதேபோல் தான் தலைவான வாழ்ந்த நகரத்திற்கு பத்தாண்டுகள் கழித்து மீண்டும் வரும் முன்னாள் டானின் இழந்து போன வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்விதத்தில் துல்கரின் நடிப்பு ரசிக்கக் கூடியதாக இருந்தது.

1995-ம் ஆண்டுகளில் நடக்கும் காட்சிகளில் அப்படியே உல்டாவாக.. கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து செயல்படும் ஹீரோவாகவும், டானாகவும் இயல்பாக நடித்திருக்கிறார் துல்கர். அழகிலும், நடிப்பிலும் கிங்’ என்று சொல்ல முடியாவிட்டாலும் ‘இளவரசர்’ என்றாவது அவரை சொல்லலாம்தான்..!

‘ராஜூ பாய்’க்கு ஈடு இணை காட்டும் இன்னொரு டான் ‘கண்ணன் பாயாக’ நடித்திருக்கும் ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனுக்குரிய லுக்கை தனது தோற்றத்திலும், உடல் மொழியிலும் கொண்டு வந்து பலரையும் மிரட்டும் அவரது நடிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.

பிரசன்னாவை மிரட்டும்போதும், திரும்பி வந்திருக்கும் துல்கரை பப்பில் சந்தித்துப் பேசும்போதும் அந்த டான் கெத்தை விட்டுக் கொடுக்காமல் நடித்து அசத்தியிருக்கிறார் ஷபீர். துல்கரின் கதையைவிடவும், ஷபீரின் கதையில்தான் அவரது கேரக்டருக்கு உரிய நியாயத்தை இயக்குநர் செய்திருக்கிறார். அதை அழகாக நடித்தும் காண்பித்திருக்கிறார் ஷபீர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரசன்னா துவக்கத்தில் ஏதோ செய்யப் போகிறார் என்ற ஆர்வத்தை உண்டாக்கி.. பின்பு அவமானப்பட்டு.. கடைசியில் தந்திரத்தை செய்து இரண்டு டான்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று உண்மையான வில்லனாகவே படத்தில் தெரிகிறார்.

துல்கரின் நண்பராகவும், சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் கோகுல் சுரேஷ், தன் கதாப்பாத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்து சமாளித்திருக்கிறார்.

அம்மாவாக சாந்தி கிருஷ்ணா.. மகளை கண்டிக்கும்போதும்.. தண்டிக்கும்போதும்… துல்கர் மீதான வெறுப்பை நமக்கு உணர்த்துகிறார்.

முன்னாள் டானான அப்பா ஷம்மி திலகன் இரண்டு சண்டை காட்சிகளில் தனது ஆக்ரோஷத்தைக் காட்டும்போது “கரெக்ட்டுப்பா” என்று சொல்ல வைக்கிறார்.

காதலியான ஐஸ்வர்யா லட்சுமியின் கதாப்பாத்திரம் குழப்பமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் உருவாக்கப்பட்டிருப்பதால், அவருடைய நடிப்பைத் தவிர அவருடைய இருப்பை நம்மால் ஏற்க முடியவில்லை.

நைலா உஷாவின் வில்லித்தனமான அந்த நடிப்பும், கெத்தான பொம்பள டான் ஸ்டைலும் இன்னொரு பக்கம் கவர்ந்திழுக்கிறது.

செம்பன் விநோத் சில காட்சிகளே ஆனாலும் தனது அழுத்தமான நடிப்பினாலும், கதாப்பாத்திரத்தினாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாயின் கூட்டணிதான் இந்த ‘கிங்ஸ் ஆஃப் கொத்தா’ படத்தில் நிஜமான டானாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. இரவு நேரக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் தனது பணியினால் அழுத்தமாகத் தன் பெயரைப் பதித்திருக்கிறார் நிமிஷ் ரவி. படம் நெடுகிலும் இரவு நேரக் காட்சி சிவப்பாகவே ஒளிர்கிறது. சிவப்பு ரத்தமும் சிதறிக் கிடக்க… திரையும் சிவப்பாய் காட்சியளிப்பது நமக்கொரு வித்தியாசமான உணர்வைத் தந்திருக்கிறது.

ஜாக்ஸ் பிஜாயின் டான்களுக்கே உரித்தான பின்னணி இசை படத்தின் காட்சிகளை தூக்கலாக கொடுத்திருக்கிறது. பாடல்களைவிடவும் பாடல் காட்சிகளே சிறப்பு. அதிலும் ரித்திகா சிங் ஆடும் அயிட்டம் சாங் டான்ஸூம், அதைப் படமாக்கியவிதமும் சூப்பரப்பு..!

படம் மொத்தமாக 3 மணி நேரம் என்பதால் படத் தொகுப்பாளரான உமாசங்கர் கொஞ்சம் மனம் வைத்து இயக்குநரிடம் பேசி சில நீளம், நீளமான காட்சிகளையும், பில்டப் காட்சிகளையும் கத்தரி போட்டிருந்தால் இன்னும் நிறைவாக இந்தப் படத்தை ரசித்திருக்கலாம்.

கொத்தா’ என்கிற அந்த மொத்த ஊரையுமே கலை இயக்குநர் அழகாக வடிவமைத்திருக்கிறார். இருந்தாலும் அது மொத்தமுமே செட்டப்புதான் என்பது தெளிவாகத் தெரிவதுபோல் அமைத்திருப்பதும் பெரிய மைனஸ்தான்.

மாரடோனா கடவுளின் கோல்’ என்று சொல்லி ஒரு கோலை கூடுதலாகப் போட்டு உலகக் கோப்பையை வென்ற தருணத்தையும் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் 1985, 1995-ம் ஆண்டுக்காக மெனக்கெட்டு அந்தக் காலத்திய கலைப் பொருட்களையும், சினிமா போஸ்டர்களையும் படத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

ஒரு நகரம்… இரண்டு டான்களின் மோதலால் எப்படி அல்லல்படுகிறது என்பதைச் சொல்ல வந்தவர்கள் டான்களின் குடும்ப வாழ்க்கை.. அவர்கள் சந்திக்கும் நட்பு, காட்டும் அன்பு, செய்யும் துரோகம், காதலிக்கும் தருணம் என்று அனைத்தையும் நீட்டி, முழுக்க, முழுக்க 2 டான்களின் பயோகிராபிபோல மாற்றிவிட்டார்கள்.

படத்தின் முற்பாதியில் ராஜூ பாய்க்காகவும், கண்ணன் பாய்க்காகவும் பில்டப் காட்சிகளை வைத்து நகர்த்திக் கொண்டே போவதால் ஒரு கட்டத்தில் நமக்கே சலிப்பாகிவிட்டது.

படத்தின் முதல் பாதியில் 25 நிமிடம் கழித்து ராஜூ பாய் அறிமுகமானாலும் அந்தக் கதைக்குள்ளும் பில்டப்ப்பாக வைத்து கதையை நகர்த்தியிருப்பதுதான் திரைக்கதைக்கு உள்ள பஞ்சத்தை உணர்த்துகிறது.

1985-லும் துல்கர் கஞ்சாதான் விற்கிறார். 1995-லும் துல்கர் கஞ்சாதான் விற்கப் போகிறார். இதையேதான் ஷபீரும் செய்து கொண்டிருந்தார். இவர்கள் இருவருக்குமான வித்தியாசம்தான் என்ன..? எதனால் ஷபீரைவிடவும் துல்கர் மீது நமக்கு பாசமும், ரசிப்புத் தன்மையும்கூட வேண்டும்..? இதற்கெல்லாம் எந்த விளக்கத்தையும் காட்சிகளின் வாயிலாக இயக்குநர் விவரிக்கவில்லை.

முதல் பாதியின் நீளமே ஒரு முழு படத்தைப் பார்க்கும் அலுப்பை நமக்குத் தந்துவிட்டது. பின்பு அடுத்த பாதியில் என்ன மாதிரியான மன நிலை ரசிகனுக்குள் இருக்கும்..?

அந்த ஊரே இப்படி அல்லலோகப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் அந்த ஊர் போலீஸாரும், அரசியல்வாதிகளும் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி படம் முடிந்த பின்னும் நமக்குள் குடைந்து கொண்டிருக்கிறது.

இரண்டாம் பாதியில் கதை முடிவை நோக்கிச் செல்லும்போது திரும்பவும் கூடுதல் பில்டப்பை கொடுத்து நம்மைத் தாளித்துவிட்டார் இயக்குநர். இதனாலேயே படத்தின் இரண்டாம் பாதி நமக்கு சோதனையாக அமைந்துவிட்டது.

துல்கர் சல்மான் படங்களில் இருக்கவே கூடாத.. அதிகப்படியான சிகரெட் புகைக்கும் காட்சிகள், கஞ்சா உபயோகிக்கும் காட்சிகள், வன்முறை காட்சிகள், சண்டை காட்சிகள், பெண்களுக்கு எதிரான வசனங்கள் என்று பலவும் இந்தப் படத்தில் அணி வகுத்திருப்பது அவரது தீவிர ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கிறது.

நம்முடைய துல்கர் சல்மானிடம் நாம் எதிர்பார்ப்பது டான் கதாப்பாத்திரம் அல்ல. எளிய மனிதர்களிடையே வாழும் நம்மில் ஒருவன்தான் என்பதை அவர் புரிந்து கொண்டால் அவருக்கும் நல்லது.. மலையாள சினிமாவுலகத்துக்கும் நல்லது..!

Our Score