நடிகை கடத்தப்பட்ட வழக்கு – விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்ற கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு..!

நடிகை கடத்தப்பட்ட வழக்கு – விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்ற கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு..!

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபலமான நடிகையொருவர் நள்ளிரவில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி கேரள அரசுத் தரப்பு விடுத்த கோரிக்கையை, கேரள உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வரும் எர்ணாகுளம் அடிஷனல் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலேயே தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

பிரபல மலையாள நடிகரான திலீப், இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 84 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்பு தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் “திலீப் சில சாட்சிகளை கலைக்க முயல்கிறார் என்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்…” என்று சொல்லி அரசுத் தரப்பு விசாரணை நீதிமன்றத்தில் மனு அளித்தது. ஆனால், அந்த மனுவை நீதிபதி கிடப்பில் போட்டுவிட்டார்.

அதோடு ஒரு நாள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வராத சூழலில் அந்த வழக்கறிஞருக்கு எதிராக எழுதப்பட்ட மொட்டை கடிதத்தை நீதிபதி நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கே வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு மனுவை அளித்தார். ஆனால் அந்த மனுவை நிராகரித்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணை இதே நீதிமன்றத்தில் தொடர்ந்து நடக்கும். வரும் நவம்பர் 3-ம் தேதி முதல் குறுக்கு விசாரணை மீண்டும் துவங்கும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையும் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

“எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நான் சாட்சி சொல்ல வந்தபோது 20 வழக்கறிஞர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டார்கள். என்னால் தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசவோ, செயல்படவோ முடியவில்லை. என்னை அவமானப்படுத்துவதுபோல பல கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்..” என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் “வழக்கின் விசாரணையை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிமன்றமும், விசாரணை அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடுவார்கள் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு நீதி மறுக்கப்பட்டது போலாகிவிடும். இரு தரப்பினரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்…” என்று அறிவுரை கூறியிருக்கிறது கேரள உயர்நீதிமன்றம்.

Our Score