பொதுவாக வெளிநாட்டுத் திரைப்படங்களை முறைப்படி அனுமதி பெறாமல் காப்பியடித்து, தங்களுடைய சொந்தக் கதைபோல் அப்படியே எடுத்துக் கொடுப்பார்கள் நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்.
இன்னும் சில இயக்குநர்கள் முறைப்படி அனுமதி வாங்கினால்கூட அந்த அனுமதி வாங்கிய விவகாரத்தையே வெளியில் சொல்லாமல், கதையே தன்னுடையதுதான் என்பதாக வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
ஆனால் முதல்முறையாக ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தை முறையாக அனுமதி வாங்கி அதையும் வெளிப்படையாகத் தெரிவித்து, அந்தப் படத்தைத் தாங்கள் தமிழில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது கெனன்யா பிலிம்ஸ்.
‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘புருஸ்லீ’, ‘உள்குத்து’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டது கெனன்யா பிலிம்ஸ்.
இந்த நிறுவனம் தயாரித்து தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ள திரைப்படம் சந்தானம் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’. மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் ‘வான்’ என்ற படத்தையும் தற்போது தயாரித்து வருகிறது.
இந்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம்தான் ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தை முறைப்படி அனுமதி வாங்கித் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கவிருக்கும் திரைப்படம் தென் கொரியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவான திரைப்படம். படத்தின் பெயர் ‘Final Recipe’. இந்தப் படத்தை Gine Kim என்பவர் இயக்கியிருந்தார்.
இப்போது இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறது. இந்தப் படத்தை CRYPTON STUDIOS ASIA – SINGAPORE என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும், சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடனும் இந்தப் படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்திற்கு தமிழில் ‘மிஸ்டர் செஃப்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘அள்ளித் தந்த வானம்’, ‘வெள்ளித்திரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், ‘அழகிய தீயே’, ‘எம்.குமரன் அ/பெ மகாலட்சுமி’, ‘மாயாவி’, ‘மொழி’, ‘கெளரவம்’, ‘36 வயதினிலே’, ‘60 வயது மாநிறம்’ போன்ற பல முன்னணி திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவருமான விஜி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவக்குமார் பொன்பாண்டியன், பாலசுப்ரமணியம் என்ற இயக்குநருடன் இணைந்து இரட்டை இயக்குநர்களாக படத்தை இயக்கவிருக்கிறார்.
படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் ஆகியோர் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.