கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 13-வது நாள் அஞ்சலி நிகழ்ச்சி இன்று காலை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.
கமல்ஹாசனும், ரஜினியும் வருவதால் ராகவேந்திரா மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், கலையுலக புள்ளிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர்கள் சாருஹாசன், சிவக்குமார், விவேக், ராஜேஷ், யூகிசேது, தாமு, லாரன்ஸ், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, குயிலி, ரேணுகா, ல்லிதாகுமாரி, காவ்யா, சின்னத்திரை நடிகர்கள் டி.வி.வரதராஜன், ஆகாஷ், பூவிலங்கு மோகன், அஜய்ராஜ், ஓவியர் ஏ.பி,ஸ்ரீதர், இயக்குநர்கள் மணிரத்னம், விக்ரமன், சரண், சுரேஷ் கிருஷ்ணா, வீ.சேகர், செல்வமணி, விஜய், சுந்தர் கே.விஜயன், தயாரிப்பாளர்கள் பிரமிட் நடராஜன், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், எடிட்டர் மோகன், கணேஷ்குமார், ஹெச்.முரளி, தனஞ்செயன், வெங்கட், வசனகர்த்தா கோபுபாபு, அகில இந்திய பெப்சியின் தலைவரான பெப்சி சிவா, நல்லி குப்புச்சாமி செட்டி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, எழுத்தாளர்கள் பாலகுமாரன், சுபா வெங்கட், வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, மதன் கார்க்கி, பின்னணி பாடகி வாணி ஜெயராம் மற்றும் இயக்குநர் சிகரத்தினர் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் திருமதி வாணி ஜெயராம் தனக்கு தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ பாடலை கண்களில் நீர் வழிந்தபடியே இருக்க.. உருக்கமாக பாடினார்.
அடுத்து இயக்குநர் சிகரத்தின் இளைய மகன் திரு.பிரசன்னா வரவேற்புரையாற்றினார். தனக்கும், தன் தந்தைக்குமான உறவு மற்றும் திரையுலகத்தினர் கே.பி. மீது வைத்திருக்கும் பாசம்.. இறுதிச் சடங்கில் திரையுலகத்தினர் செய்த உதவிகள்.. அவர் தனக்குக் காட்டிய வழிகள் என்று பலவற்றையும் தழுதழுத்த குரலில் பேசினார்.
அவர் மேலும் பேசுகையில், “அப்பா என்னை எப்போதும் ‘பாஸு’ன்னுதான் கூப்பிடுவார். மருத்துவமனையில் ஒரு நாள் என்னை அழைத்து, ‘ஏன் பாஸ் பேக்கை தூக்கிக்கிட்டு இங்கிட்டும், அங்கிட்டுமா சுத்துறீங்க. பக்கத்துல வந்து உக்காருங்க..’ என்றார். ‘நான் உங்களைவிட்டு எங்கயும் போகலப்பா.. இங்கதான் இருக்கேன்னு சொன்னேன்..’ என்று சொன்னவர் அதற்கு மேல் தொடர முடியாமல் அழுதே விட்டார்.
அடுத்து இயக்குநர் சிகரம் பற்றி 2010-ம் ஆண்டு தூர்தர்ஷன் நிறுவனம் தயாரித்த ஒரு செய்தித் தொகுப்பை திரையிட்டார்கள். மேலும் 2011-ம் ஆண்டுக்கான ‘தாதாசாஹேப் பால்கே’ விருதினை கே.பாலசந்தர் பெற்ற அந்த தருணத்தையும் வீடியோவில் ஒளிபரப்பினார்கள்.
தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.வி.ரமணன் பேச அழைக்கப்பட்டார். இயக்குநர் சிகரத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான ‘சிகரம்’ புத்தகத்தை தொகுத்து எழுதியவர் இவர்தான். தான் ‘சிகரம்’ புத்தகத்தை எழுதிய காலத்தில் இயக்குநர் சிகரம் தன்னை எப்படி மரியாதையுடன் நடத்தினார்.. எப்படியெல்லாம் பேசினார்.? அவருடைய குடும்பத்தினர் எப்படி ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பதையெல்லாம் அழகு தமிழில் கொஞ்சமும் தடுமாற்றமில்லாமல் பேசினார்.
ரமணன் தன் பேச்சில் இரண்டு கோரிக்கைகளை அங்கே முன் வைத்தார்.
“கே.பி. ஸாருக்கு ஒரு பெரிய ஆசை இருந்தது. தனது வாழ்க்கை வரலாற்று நூலான ‘சிகரம்’ என்ற அந்தப் புத்தகத்தை கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மேடையில் இருக்க பெரிய அளவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில்தான் வெளியிட வேண்டும் என்று அவர் மிகவும் ஆசை கொண்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஏதேதோ பிரச்சினையால் அது முடியாமல் போனது. இனிமேல் யாரேனும் ஒருவர் அதை பொறுப்பெடுத்து அந்தப் புத்தகத்தை மீண்டும் பெரிய அளவில் அவர் நினைத்ததுபோல வெளியிட்டு சிறப்பிக்க வேண்டும்.
இன்னொன்று.. கே.பி. ஸார் தமிழ்த் திரையுலகத்திற்குள் கால் வைத்து சென்ற ஆண்டுடன் 50 ஆண்டுகள் முடிவடைந்த்து. இதையொட்டி அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அது பற்றி ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளியிடம் நாங்கள் பேசியபோது சட்டென்று அவர் ஒத்துக் கொண்டார். கே.பி.யிடம் இது பற்றி சொன்னபோது மிகுந்த சந்தோஷமாக ஒத்துக் கொண்டவர்.. ‘ரொம்ப தூரம் தள்ளி வைக்காதீங்கப்பா.. இங்க பக்கத்துல பாரதீய வித்யா பவன்ல வைங்க. நான் வருகிறேன்..’ என்றார். ஆனால் அதற்குள்ளாக இப்படியாகிவிட்டது. இந்த விழாவையும் அவர் இல்லாத சூழலிலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..” என்றும் கேட்டுக் கொண்டார் ரமணன்.
அடுத்து பேசிய கே.பி.யின் மருமகன் கந்தசாமி, நான் கே.பி.க்கு மருமகனாக இருந்தும் கே.பி.யை எப்போதும் ‘ஸார்’ என்று அழைத்தே பழக்கப்பட்டவன். அவருடைய கடைசி காலத்தில்தான் ஒரு முறை அவரது காதோரம் ‘மாமா’ என்று அழைத்தேன். அந்த ஒரு கணம் என்ன நினைத்தாரோ.. அவருக்கே உரித்தான ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தார். இது என்னால் மறக்க முடியாதது..” என்றார்.
கடைசியாக பேசிய கே.பி.யின் மகள் புஷ்பா கந்தசாமி, தன்னுடைய தந்தையாரின் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கும் திரையுலகத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டவர். அனைவரும் இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார்.
கமல், ரஜினி, சிவக்குமார், மணிரத்னம் என்று பெரும் புள்ளிகள் வந்திருந்தும் யாரும் பேச அழைக்கப்படவில்லை. இது இறப்பின் பின்பு நடக்கும் சடங்கு நிகழ்ச்சி என்பதால் இதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்து நிகழ்ச்சியை முடித்துவிட்டார்கள் கே.பி.யின் குடும்பத்தினர். ஆனாலும் வந்தவர்களை நாலு வார்த்தை பேச வைத்திருக்கலாமே என்கிற ஆதங்கம் திரண்டு வந்திருந்த நண்பர்களுக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.
ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டுதான் இனிமேல் கே.பாலசந்தருக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டும். ஆனால் முக்கியமான தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த மாதம் முடியாது என்றார்கள். இயக்குநர்கள் சங்கமோ பிப்ரவரி, மார்ச்சையும் தாண்டி ஏப்ரல் மாத்த்தில் தங்களுடைய ஏற்பாட்டில் மிகப் பெரிய நினைவஞ்சலி கூட்டத்தை காமராஜர் அரங்கத்தில் நடத்தவிருப்பதாக சொல்லியிருக்கிறது.
ஒரு நினைவஞ்சலிக்கு எதற்கு மூன்று மாத இடைவெளி என்றுதான் புரியவில்லை..!