“இயக்குநர் சிகரம், சினிமாவுக்கே சிகரமானவர்..” – கவிஞர் நெல்லை பாரதியின் புகழ் அஞ்சலி..!

“இயக்குநர் சிகரம், சினிமாவுக்கே சிகரமானவர்..” – கவிஞர் நெல்லை பாரதியின் புகழ் அஞ்சலி..!

கவிஞரும், பாடலாசிரியரும், பத்திரிகையாளருமான அண்ணன் நெல்லை பாரதி, ‘வண்ணத்திரை’ இதழில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றி எழுதியிருக்கும் அழகான நினைவஞ்சலி இது :

எதிர்நீச்சல் போட்டு வென்ற நீர்க்குமிழி!

கைலாசம் பெற்றெடுத்த கலைச்செல்வம், கைலாசத்துக்குச் சென்றுவிட்டார் என்பது இந்து மத நம்பிக்கையாளர்களின் கருத்து. அவர் கோடம்பாக்கத்தை மட்டுமே எப்போதும் சுற்றி வருவார் என்பது சினிமாவை நேசிப்பவர்களின் தீர்க்கம்.

அலுவலக நேரம் போக, மற்றவர்களுக்கு நேரம் போக.. நாடகம் போட்டவர் கே.பாலசந்தர். பண்பட்ட படைப்பு அவரை தெய்வத்தாய் படத்தின் மூலம் கலைத்தாய்க்குப் பிடித்த கோடம்பாக்கத்தில் குடியேற்றியது.

மற்றவர்கள் சொல்லத் தயங்கிய, சொல்லாமல் ஒதுக்கிய கதைகளையும் கதாபாத்திரங்களையும் கையிலெடுத்தார் கே.பி. தமிழ் சினிமா ரசிகர்கள் அவருக்கு சிவப்புக் கம்பளத்தையும் தாண்டி சிறப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்புப் பாடல் பாடினார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் என்ற கருத்தை ஆமோதிப்பவர்கள், குடி குடியை வாழ வைக்கும் என்ற நிதர்சனத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். நல்லமாங்குடியில் பிறந்த பாலசந்தர்தான் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசனுக்கு வாழ்வளித்தார்.

காமெடி நாகேஷை கதாநாயகனாக்கினார். கறுப்பு ரஜினியை வைரமாக்கியவர். சவால்விட்டு சரிதாவை நாயகியாக்கி ஜொலிக்க வைத்தவர். பிரகாஷ்ராஜை கண்டெடுத்தவர். ஏ.ஆர்.ரஹ்மானின் சினிமா வாழ்க்கையில் முதல் சம்பளம் கொடுத்தவர் என பாலசந்தரின் சினிமா சேவை சிறப்புக்குரியதாகவே இருந்துள்ளது.

அவரது வரவேற்புரைக்கு வந்து சேர்ந்த அத்தனை விருதுகளும் புண்ணியம் செய்தவை. அது தாம்பரம் நண்பர்கள் மன்றம் வழங்கியதானாலும், தாதா சாஹேப் என்றாலும் அவருக்கு ஒன்றுதான்.

வெற்றி பெற்ற இயக்குநர்கள் பட்டியில் உள்ள பலரும் விழா மேடைகளில் தங்களது மாணவர்களை ஒருமையில் விளித்து, தோளை நிமிர்த்திக் கொள்ளும் இந்தக் காலக்கட்டத்தில் கமல், ரஜினியை மரியாதையோடு அழைத்த மாண்புக்குரியவர் கே.பி.

காதல் படம் பார்த்துவிட்டு அதன் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அவரது இருப்பிடத்துக்கே சென்று வாழ்த்திய கலை உள்ளம்தான் அவர் சினிமாவின் சிகரம் என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டு.

நாடகம், சினிமா, தொலைக்காட்சி என விஞ்ஞானம் தனது ராட்சத சிறகுகளை விரித்தபோது, சற்றும் தளராமல் அதைப் பற்றியபடி, வானம் தொட்டவர் கே.பி.

அவரது பயணம், மருத்துவமனைக்குச் செல்லும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படாமல் இருந்தால், அந்த சிகரம் கிரகங்களையும் தொட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கும்.

– நெல்லை பாரதி

Our Score