“தமிழ்ச் சினிமா இருக்கும்வரையிலும் கே.பி.யின் புகழ் மறையாது” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..!

“தமிழ்ச் சினிமா இருக்கும்வரையிலும் கே.பி.யின் புகழ் மறையாது” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..!

மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து அவர் பெயரில்  'கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்'  ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கத்தின் துவக்க விழா இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 5-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று மாலை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரசாமி ராஜா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், ராஜேஷ், நாசர், கே.ராஜன், 'அவர்கள்' ரவிக்குமார், 'பூவிலங்கு' மோகன், இசாக் ஹூசைனி, ரமேஷ் கண்ணா, கலா மாஸ்டர், இயக்குநர் கண்மணி சுப்பு, ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, பாபு, இயக்குநர்கள் சரண், டி.பி.கஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி மற்றும் கவிதாலயா, மின் பிம்பங்கள் நிறுவன ஊழியர்கள்.. இயக்குநர் சிகரம் கே.பி.யின் ரசிகர்கள் என்று பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

kb-death-anniversary-2019-7

இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் பேசும்போது, "இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினி நடிக்கும்போது ‘நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே… நீ ஒரு கருப்பு வைரம். தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய்’ என்று அன்றைக்கே கூறியவர் கே.பி.

sivakumar-5

அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர்.

கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான 5 முக்கியமான படங்களில் நான் நடித்த ‘அக்னி சாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கை தட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது…" என்றார்.

kb-death-anniversary-2019-23

இயக்குநர் சரண் பேசும்போது, "இயக்குநர் பாலசந்தர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பி. இந்தத் தமிழ்த் திரையுலகத்தில் பலரது வாழ்க்கையை ஜொலிக்க வைத்தவர். நாங்கள் அனைவரும் அவருடைய பக்தர்கள். பக்தர்கள் ஒன்றுகூடி அவருக்காக ரசிகர்கள் சங்கத்தை துவக்கியிருக்கிறோம்…" என்றார்.

rajan-rajesh

நடிகர் ராஜேஷ் பேசும்போது, "1974-ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் எடுக்கும்போதுதான் கே.பி. ஸாரை முதன்முதலாக நான் சந்தித்தேன். நேரம் தவறாமையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மையான மனிதர்.

நான் சினிமாத் துறைக்கு வரும்போது தயாரிப்பாளர் யாசின் என்னிடம் ‘பாலாஜி, கே.பாலசந்தர் ஆகிய மூவரை மட்டும் நம்பு. ஸ்ரீதர், சேதுமாதவன் மற்றும் கே.பாலசந்தர் ஆகிய மூன்று இயக்குநர்களிடம்தான் நான் தைரியமாகப் பேசுவேன். நீ சினிமாவை நேசிப்பவன், சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று வந்திருக்கிறாய். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்’ என்றார்.

‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்காக குற்றாலத்தில் நானும், சரிதாவும் நடித்துக் கொண்டிருக்கும்போது குற்றாலத்தில் வெள்ளம் வந்துவிட்டது. உடனே, கிளைமாக்ஸை மாற்றி வெள்ளத்தைப் படமெடுத்தார் கே.பி. அவர் அனைவரின் நடிப்பையும் ரசித்து மனமுவந்து பாராட்டுவார். இவரைப் போன்ற ஒரு ஒப்பற்ற மனிதரைப் பார்க்க முடியாது.

மறந்து போன சினிமாத்துறையில் ஒப்பற்ற இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரசிகர்கள் மன்றம் அமைத்ததில் மகிழ்ச்சி. நான் அதற்கு தலைவனாக இல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன். அவருக்கு சிலை வைப்பதற்கு முயற்சி எடுப்பேன்.

1984-1985, 1985-1986, 1986-1987 ஆகிய மூன்று வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகள் இன்னமும் தரப்படாமலேயே இருக்கிறது. அதில் ‘சிறை’ படத்திற்காக எனக்குத் தரப்பட வேண்டிய விருதும் இருக்கிறது. இது பற்றி ஒரு நாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் கூறினேன். ‘அப்போது இருந்தவர்கள் ஏன் அந்த விருதுகளை கொடுக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை…" என்றார்.

naasar-4

நடிகர் நாசர் பேசும்போது, "எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணம் மரணம்தான். ஆனால், சில மனிதர்கள்தான் தாங்கள் வாழ்ந்து காட்டியவிதத்தில், மரணமில்லாமல் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய முதல் படம் ‘கல்யாண அகதிகள்’ அவருடைய இயக்கத்தில்தான் உருவானது. அப்படத்தில் எனக்கு ஏற்பட்ட முக்கிய நிகழ்வால் இன்னும் ஒரு பழக்கத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை ஒரு நாள்கூட நான் காலதாமதமாக படப்பிடிப்பிற்கு சென்றதில்லை. என்னால், ஒரு படப்பிடிப்புகூட தடைபட்டதுமில்லை. இதற்குக் காரணம் இயக்குநர் கே.பாலசந்தர்தான். நேரத்தை தன்னைவிட அதிகமாக மதிக்கக் கூடியவர். என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயக்குநர் கே.பாலசந்தர்.

கே.பாலசந்தருக்கு சிலை வைப்பதைவிட அவருடைய பழக்க வழக்கங்களையும், படமெடுக்கும் பாணியையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை. ஏனென்றால், அவர் படப்பிடிப்புத் தளத்தில் ‘சைலன்ஸ்’ என்று கூறிவிட்டால் யாரும் பேச மாட்டார்கள். ஒரே இடத்தில் செட்டை மாற்றிவிட்டு பொருளாதாரத்தையும் குறைப்பார். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவையெல்லாம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.

‘கே.பாலசந்தர்’ என்று கூறியவுடன் நினைவிற்கு வருவது அறிவு சார்ந்த சினிமா என்பதுதான். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும். மேலும், இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘கவிதாலயா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் கட்டமைப்பு போல வேறு எந்த நிறுவனத்தையும் பார்த்ததில்லை…" என்றார்.

ramesh kanna

இயக்குநர் ரமேஷ் கண்ணா பேசும்போது, "1980-களில் சினிமாவில் இயக்குநர் பணியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பாரதிராஜா மற்றும் கே.பாலசந்தர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். அதற்காக நான் தினமும் அவர்கள் வீட்டிற்குச் செல்வேன். ஒரு நாள் கே.பி. என்னை வீட்டிற்கு அழைத்தார்.  ‘கதையைப் பற்றி கலந்துரையாடுவதற்கு நீதான் சரியான ஆள்’ என்றார். அப்போது கார்த்தியை வைத்து கவிதாலயா சார்பில் ஒரு படம் எடுத்தோம். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. பிறகுதான் ‘முத்து’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். அந்த மகானுடன் இருந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.." என்றார்.

t.p.kajendiran

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் பேசும்போது, "தண்ணீர் தண்ணீர்’ படத்தின்போது நான் துணை இயக்குநராக அவரிடத்தில் பணியாற்றி வந்தேன். அந்தப் படப்பிடிப்பில் பாடல் கேசட்டை தண்ணீருக்குள் தவறுதலாகப் போட்டுவிட்டேன். அதற்காக அவர் என்னை அடிப்பார் என்று பயந்துபோய் இருந்தேன். ஆனால், அவர் என்னை அடிக்கவில்லை. கண்டித்தார். அவ்வளவுதான்.. அவருடன் வாழ்ந்த நாட்கள் எனக்குக் கிடைத்த புண்ணியமான நாட்கள்…" என்றார்.

ravikumar

நடிகர் ரவிக்குமார் பேசும்போது, "நான் கே.பி. ஸாரின் இயக்கத்தில் அவர்கள்’ படத்தில்தான் முதன்முதலில் நடித்தேன். கண்மணி சுப்பு, ரெட்டி இருவரும் அப்போது அந்தப் படத்தில் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

கே.பாலசந்தர் நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன், அவர் திட்டுவார், அடிப்பார் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், எப்படியாவது அப்படத்தில் நடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால், எனது அப்பா ‘நேரில் சென்று பார்த்துவிட்டு வா’ என்று அனுப்பி வைத்தார்.

கே.பியிடம் வந்த நான், ‘தற்போது நான் மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன், தேதி பிரச்னை வருமே’ என்றேன். ‘அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். இந்தப் படத்தி்ல நீ நடி..’ என்று கூறிவிட்டார். அவரால்தான் எனக்கு அந்தப் படத்தில் ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு ‘மரபு கவிதைகள்’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் அவருடைய இயக்கத்தில் நடிக்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது.

அவருடைய இயக்கத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நாம் நடித்து முடித்து பார்த்தால் நாம்தான் நடித்தோமா…? என்று ஆச்சரியப்பட வைக்கும். அந்த அளவுக்கு அவர் என்னை நடிக்க வைத்தார்…" என்றார்.

hussaini-1

'கராத்தே' ஹூசைனி பேசும்போது, "நாம் சினிமாவில் நடித்தால் அது கே.பாலசந்தரின் இயக்கத்தில்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். நான் அடிப்படையில் ஒரு சிற்பி. நான் கே.பி.யின் சிலையை செதுக்குவேன் என்று தொலைபேசியில் கூறினேன். உடனே வர சொல்லி அழைத்தார்கள். என்னிடம் பேசிவிட்டு, ‘நாளை முதல் ஆரம்பித்துவிடலாம்’ என்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அப்போது அரசு ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் பேராசியராக இருந்த தனபால் ஸாரின் காலில் விழுந்து, ‘நான் சிலை செதுக்க வேண்டும்’ என்று கூறினேன். ‘5 வருடங்கள் பயிற்சி எடு’ என்று கூறினார். ‘அவ்வளவு நாட்கள் எனக்கு அவகாசமில்லை. நாளைக்கே சிலை வடிக்க வேண்டும்’ என்றும், ‘கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று என் நிலைமையை விளக்கியதும், இரவு நேரத்தில் அவரிடம் கற்றுக் கொண்டு 20 நாட்களில் கே.பாலசந்தரின் சிலையை வடித்து முடித்தேன்.

அந்த சிலை அப்போதைய முன்னணி பத்திரிகைகளின் அட்டைப் படத்தில் பிரசுரமாகின. அதன் பின் கே.பி.யிடம் ‘நான் நடிக்க வாய்ப்புக் கேட்டுத்தான் வந்தேன். நான் சிற்பி அல்ல’ என்றேன். ‘புன்னகை மன்னன்’ படத்தில் எனக்கு முக்கிய வேடம் கொடுத்து என்னையும் நடிகனாக்கினார். அதன் விளைவால் என்னை இலங்கை அகதி என்று நினைத்து 19 நாட்கள் சிறையில் அடைத்தார்கள்.

பிறகு, ‘நீ என்னை தத்ரூபமாக சிலை வடிக்கிறாய், ஆகையால் சிற்பக் கலை கற்றுக் கொள்’ என்று என்னை அனுப்பி வைத்தார். இன்று சிற்ப கலையில் நான் பல தங்க பதக்கங்களோடு பி.எச்.டி. படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய சிலையை செதுக்குவதற்கு எனக்கு மட்டும்தான் முழு தகுதி இருக்கிறது என்று கூறுவேன். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் என் பணியைத் துவங்குவேன். உலகத்திலேயே யாரும் செய்யாத அளவுக்கு தத்ரூபமாகவும், உயிரோட்டமாகவும் கே.பி.யின் சிலையை வடிப்பேன் என்று சத்தியம் செய்கிறேன்…" என்றார்.

kannadasan-1

இயக்குநர் கண்மணி சுப்பு பேசும்போது, "தமிழ்ச் சினிமாவுலகத்திற்குள் பாட்டு எழுத வந்த நான் இயக்குநராக ஆக வேண்டும். அதிலும் கே.பாலசந்தர் மாதிரி இயக்குநராக வேண்டும் என்று என் தந்தையிடம் கூறினேன். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.

எனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் கே.பி.யிடம்தான் கூறினேன். முதலில் ‘நீ போகணுமா..?’ என்றவர், பின்பு, ‘போ.. நன்றாக இயக்கு..’ என்றார். ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை. இருப்பினும் ‘படப்பிடிப்பில் நீங்கள் கே.பாலச்சந்தர் போலவே கற்றுக் கொடுக்குறீர்கள்’ என்று என் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கூறினார்கள். அதையே எனது வெற்றியாக கருதுகிறேன்…" என்றார்.

poovilangu mohan

நடிகர் 'பூவிலங்கு' மோகன் பேசும்போது, "கே.பாலசந்தரின் ரசிகன் நான். இன்றும் அவருடைய ரசிகனாகத்தான் இருக்கிறேன். அவருடைய திரைப்படங்களில் திருவள்ளுவர் இல்லாமல் இருக்க மாட்டார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எங்களுடைய ஆசான் கே.பாலசந்தர்…" என்றார்.

மேலும், மறைந்த கே.பாலசந்தருக்கு சிலை வைக்க பலரும் பல மேடைகளிலும் பேசினாலும், பாபுவும், பழனியும் முறையாக அரசாங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதன்படி அடுத்த ஆண்டு கே.பாலச்சந்தரின் சிலை சென்னையில் நிறுவப்படும். மேலும், கராத்தே ஹூசைனி அவரின் சிலையை வெண்கலத்தில் தன் சொந்த செலவில் தானே உருவாக்கித் தருவதாகவும் சத்தியம் செய்துள்ளார்.