full screen background image

“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..!

“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 90-வது பிறந்த தினத்தையொட்டி ‘கலைஞானி’, ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது குருநாதரை வாழ்த்தி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ செய்தி கவிதாலயா நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியது இது :

“வாஹினி படப்பிடிப்பு தளத்தில் ஜெமினி மாமாதான் என்னை முதன்முதலில் கே.பி.ஐயா அவர்களிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். அது ‘வெள்ளி விழா’ படப்பிடிப்பு என்று நினைக்கிறேன். ரொம்பவும் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தவர், சற்று நின்று என்னை கவனித்தார். அந்தக் கவனிப்பு பிற்பாடு இவ்வளவு பெரிய உறவாக வலுக்கும் என்று நான் கனவுகூட காணவில்லை.

அதற்குப் பிறகு 16 வயது சிறுவனாக அவரிடம் வந்து சேர்ந்தேன். அவர் வாழ்வில், எனக்கு அவர் கொடுத்த இடமும், என் வாழ்வில் நான் அவருக்கு கொடுத்த இடமும் நாங்கள் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. இயற்கையாய் நிகழ்ந்த ஒன்று. இப்போது அது அப்பா – மகன் உறவாகவே மாறிவிட்டது.

வீட்டிற்கு வரும் பிள்ளையாக அவர் என்னை நினைக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டன. என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். அறிவுரை சொல்வதற்காகவும், வசனங்களைச் சொல்லிக் கொடுப்பதற்காகவும், கதைகளைப் பற்றியும் பேசுவார். என்னை நல்வழிப்படுத்துவதற்காகத் திட்டியும் இருக்கிறார்.

ஆனால், நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட உரையாடல்களில், என் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து பதிவு செய்தால் அது 3 பக்க பேப்பர்களில் அடங்கிவிடும். என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய கெட்டிக்காரத்தனம் என்னவென்றால் அவருடன் கலந்து உரையாடாமல், அவர் செல்வதை எல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டேன். அதனால்தான் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையப் பெற்றது என்று சொல்லலாம்.

இப்போதுகூட அவர் இருந்திருந்தால் 90-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றால், நாங்கள் முதலில் போய் அனுமதி கேட்டிருப்போம். அதை எப்படியெல்லாம் செய்யணும்.. எது செய்யக் கூடாது என்பதை விளக்கி பட்டியல் போட்டு கையில் கொடுத்திருப்பார்.

என் கதையில் அவர் நடிக்க வேண்டுமென்று நெடுநாள் ஆசை. அதை ‘உத்தம வில்லன்’ படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் போனார். என்னுடைய வசனங்களைப் பார்க்கும்போது, விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பார். ஒரு ரசிகனாகப் பார்த்து ‘எப்படிடா உனக்கு இப்படி தோணுச்சு’ என்பார்.

அவருடைய கடைசி காலங்களில் மேடைகளில் பேசும்போது என்னை ஒருமையில் பேசுவதா, அவர், இவர் என்று பேசுவதா என அவருக்கு குழப்பமே வந்துவிட்டது. அவருக்கு என்றுமே நான் 16 வயது பையன்தான்.

இன்று அவர் மாதிரியான ஒரு வழிகாட்டி எத்தனை நடிகர்களுக்குக் கிடைப்பார்கள் என்று யோசித்து பார்த்தால், எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தின் ஆழம், வரத்தின் மகிமை இன்று எனக்கு புரிகிறது.

கே.பாலசந்தர் என்பவர் எங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை, எங்கள் புகழ் வாழும் வரை அவருடைய புகழும் வாழும். ஏனென்றால் நாங்கள் எல்லாம் அவர் பிடித்து வைத்த பொம்மைகள். பிற்பாடு பேச ஆரம்பித்துவிட்டோம் அவ்வளவே.

ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். நட்சத்திரங்களாக மட்டுமல்ல இயக்குநர்களாக, இசையமைப்பாளர்களாக என்று ஒவ்வொரு துறையிலும் ஆள் விட்டுச் சென்றிருக்கிறார்.

ஒரு விழாவுக்கு அவரைப் பற்றி பாராட்டி எழுதி, அது பத்திரிகையில் அச்சிடுவதாக இருந்தது. அதில் சிலவற்றை தன் பேனாவால் அடித்து, ‘இதெல்லாம் எழுதக் கூடாது’ என்றார். ‘சினிமாத் துறைக்கு நீர் கொடுத்த கொடை போல், நான் யார் கொடுத்தும் பார்த்ததில்லை என் வாழ்நாளில்’ என்று எழுதியிருந்தேன். அதை அன்று அவர் பிரசுரிக்க அனுமதிக்கவில்லை. இன்று அவர் இல்லை என்ற தைரியத்தில் அதைச் சொல்லி பதிவு செய்கிறேன்.

எனக்கு கிடைத்த குருமார்களே அற்புதமானவர்கள், அதில் அற்புதமானவர் கே.பி அவர்கள். இப்போது எல்லாம் பொறியாளர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்றால் ஃபீஸ் கட்டி வரிசையில் நிற்க வேண்டியதுள்ளது.

எங்களை எல்லாம் கோடீஸ்வரனாக்கிவிட்டு, அதில் என் பங்கு என்று கொஞ்சம் கூடக் கேட்காமல் சிரித்துக் கொண்டிருந்த அந்த மாதிரி குருக்கள் வணக்கத்துக்குரியவர்கள். குருவை வணங்கும் நாள் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே, எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வேலை செய்யும் நாளெல்லாம் அந்த நாட்களாகவே இருக்கிறது. அவர் புகழ் வாழும், வாழ வேண்டும்..” என்று தெரிவித்துள்ளார்.

Our Score