பழம் பெரும் இயக்குநரான ‘கே.பி.’ என்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாளை, வெகு விமரிசையான ஒரு நட்சத்திர விழாவாக கவிதாலயா நிறுவனம் கொண்டாடியது.
இந்த விழாவில் பெருந்திரளான திரை நட்சத்திரங்களும் ஊடகத் துறையினரும் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவிற்கு இயக்குநர் இரா.பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க, நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குநர்கள் வசந்த், சரண், ஆர்.எஸ்.பிரசன்னா, விக்னேஷ் சிவன், நாகா, நடிகர் ஆரவ், ராஜ் கமல், நடிகைகள் ஷைலஜா ஷெட்லூர், லதா ராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்கத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பேத்திகளான காவ்யா, விலாசினி மற்றும் பேரனான விஷ்ணு பாலா மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் பிரபல வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவின் ‘டூ யூ ஹேவ் அ மினிட்’ என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் கே.பி.யின் படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பாடல்கள் இசைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கவிதாலயா தங்களது அதிகாரப்பூர்வ யூ டியூப் இணையதள முன்னெடுப்பான ‘KavithaalayaaOff’ என்னும் சேனலை மகிழ்வோடு துவக்கியது.
அதன் இணைய முகவரி :
https://www.youtube.com/channel/UCFh0pybh9qQzw5iLKFFhqAw
இந்த சேனலின் லோகோவை இயக்குநர்-நடிகர் பார்த்திபனும், நடிகை சுஹாசினி மணிரத்னமும் இணைந்து வெளியிட்டனர்.
கவிதாலயா தங்கள் நிறுவன தயாரிப்புகளான புகழ் பெற்ற தொடர்கள், திரைத் துளிகள், முற்றிலும் புதிய படைப்புகள் அனைத்தையும் இனி வரும் காலங்களில் தனது யூ டியூப் சேனலில் வெளியிட முடிவு செய்திருக்கிறது.
ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மாபெரும் வெற்றி பெற்ற சின்னத்திரைத் தொடரான ‘மர்ம தேசம்’ சமீபத்தில் யூ டியூப் சேனலில் வெளியான நிலையில், கவிதாலயாவின் ரசிகர்களை அது தன்னகத்தே ஈர்த்து வருகிறது.
இந்நிறுவனம் குறிப்பாக OTT தளத்திற்கெனவே வேறுபட்ட வகைகளை சார்ந்த, வித்தியாசமான நான்கு படைப்புகளை உருவாக்கி வருகிறது.
முதல் படைப்பாக, இயக்குநர் சரணின் இயக்கத்தில் ’76 கட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள படைப்பு. கே.பி. தனது படைப்பான ‘மன்மத லீலை’ திரைப்படத்தை வெளியிட சந்தித்த சோதனைகளையும், சவால்களையும் சுவராஸ்யமாக படம் பிடித்துக் காட்டவிருக்கிறது.
அடுத்ததாக, இயக்குநர் வி.பிரியாவின் இயக்கத்தில், ‘ஆசை முகம் மறந்து போச்சே’ என்னும் தொடர். பெண்களை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இத்தொடர், நான்கு தலைமுறை பெண்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டும்.
மூன்றாவதாக, ‘மான்கள் ஜாக்கிரதை’ என்ற சமூக – அரசியல் தொடர், ஆர்.எஸ்.பிரசன்னாவுடன் இணைந்து, பிரவீன் ரகுபதி இயக்கத்தில் இத்தொடர் தயாராகி வருகிறது.
நான்காவதாக, ‘பிகைண்ட் உட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘யுவர்ஸ் ஷேம் ஃபுல்லி-3’ எனும் தொடர், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிகைண்ட் உட்ஸ்’ உடன் இணைந்து ‘கவிதாலயா’ ஒரு குறும்பட போட்டி நடத்தவிருக்கிறது. இதில் வெற்றி பெறுபவருக்கு கவிதாலயா பேனரில் ஒரு திரைப்படம் இயக்க வாய்ப்பளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, கே.பி. ஒவ்வொருவரது வாழ்விலும் ஏற்படுத்திய ஏற்றங்களை, மாற்றங்களை, அவர் இன்றும் அவரது ரசிகர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் எவ்வாறு ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்பதையும் பகிர்ந்து கொண்ட ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக நிறைவு பெற்றது.

















