கோடம்பாக்கத்தில் ஏற்கெனவே 600-க்கும் மேற்பட்ட சென்சார் சர்பிடிகேட் வாங்கிய சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள், ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன..
இந்த லட்சணத்தில் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ என்கிற சின்ன பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளருக்கு நேர்ந்த இந்தக் கதி இன்றைக்கு கோடம்பாக்கத்தை கொஞ்சம் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு டார்ச்சரை கொடுத்தால் அவர் எப்படித்தான் தாங்கிக் கொள்வார்..?
அவருடைய கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்..!
“அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் கஸாஸி. நான் H3 சினிமாஸ் சார்பாக ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’என்ற தமிழ் திரைப்படம் எழுதி, தயாரித்து, இயக்கிக்கொண்டிருக்கிறேன். அடிப்படையில் நானொரு பி.எஸ்.ஸி அக்ரி பட்டதாரி. 15 வருடங்கள் துபாயில் சொந்தமாகக் கம்பெனி நடத்திவிட்டு, சினிமா மேல் உள்ள ஆர்வத்தினால் சென்னைக்கு வந்து, சிறிது காலம், சில படங்களில் நட்பு ரீதியில் பணியாற்றி, தொழில்நுட்பம் தெரிந்து கொண்டு அனுவப்பட்டு, சமீபத்தில் மேற்சொன்ன சாய்ந்தாடு சாய்ந்தாடு என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்.
எனது படத்தில் திரு கந்தவேல் என்பவரை புரடக்சன் எக்சிகியூட்டிவாக நியமித்தேன். அவர் சரியானபடி கொடுத்த வேலையைச் செய்யவில்லை. செலவினத்தில் நிறைய கையாடல் செய்தார். கேட்டதற்கு, ‘அப்படித்தான் செய்வேன், ஏதாவது தகராறு செய்தால் யூனியனிடம் சொல்லி படத்தை எடுக்க முடியாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டினார். போஸ்ட் புரடக்ஷன் வேலைக்கு எந்தவொரு தகவலும், உதவியும் செய்யவில்லை. கேட்டால், சில கம்பெனிகள் கொடுத்த பட்ஜெட்டை அதிகப்படுத்திக் கூறி மலைக்க வைத்தார். டப்பிங் பேசுவதற்கு நடிகரின் தொடர்பு எண் கேட்டேன். தர மறுத்துவிட்டார். எனவே எனக்கு தெரிந்த வரையில் சொந்த முயற்சியில் அந்த வேலைகளைச் செய்தேன். கடந்த டிசம்பர் மாதம் பாடல் வெளியிட்டோம். அதற்கும் வராமல், மற்றவர்களையும் வராமல் தடுக்க முயன்றார்.
இதுவரை கிட்டத்தட்ட 90% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தற்சமயம் படங்களுக்கு புரமோசன் மிக அவசியம் என்பதை உணர்ந்து, டீஸர், டிரெய்லர் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்று நிகழ்த்தி படத்தினை உயர்த்துவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.
ஏற்கெனவே உடன் வேலை பார்த்த திரு. கந்தவேல் & அவரது குழு ஒழுங்காக செயல்படாமல் நிறைய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். மீண்டும் இவர்களை வைத்து செயல்பட்டால், செலவு மிக அதிகமாகி என்னால் முழுமையாக படம் முடித்து வெளிவரமுடியாத நிலை ஏற்படும். எனவே, ப்ரமோஷன் படப்பிடிப்புக்கு, வேறு சிறிய டீமை ஏற்பாடு செய்தேன்.
நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு டூரிசம் ரிசார்ட்டில் படத்தின் புரமோசனுக்காக, முறையான அனுமதி பெற்று, ஒரு சிறிய குழுவை வைத்து படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்தேன். படப்பிடிப்பை ஆரம்பித்த சிறிது நேரத்தில் புரடக்சன் எக்சிகியூட்டிவ் தங்கவேலுவும், துணை இயக்குநரான எஸ். சரவணனும் படத்தின் ஒளிப்பதிவாளரான சிவாவும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னை மிரட்ட ஆரம்பித்தனர்.
அப்போது திரு.கந்தவேல் ‘ஏற்கெனவே சொன்னது காதில் ஏறவில்லையா? படம் முடிவது பற்றிக் கவலை இல்லை. எனக்கு மீதம் கொடுக்க வேண்டிய எல்லா பணத்தையும் இப்போதே கொடுக்கவேண்டும்…’ என்றார். நானோ, ‘ஏற்கெனவே நீங்கள் பேசிய தொகையைவிட அதிகம் எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் பரவாயில்லை, இப்போது கொஞ்சம் பணம் தருகிறேன். மீதம் கொஞ்சம் கொஞ்சமாக படம் வெளியிடும் முன்பு தந்து உங்களது கணக்கை முடித்து விடுகிறேன்’ என்று சொன்னேன். அவர் மறுத்துவிட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதனால் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது. பிரச்சனை நீண்டு கொண்டே சென்று நேரம் விரயமாகிக் கொண்டிருந்தது. ‘நீங்கள் முறைப்படி சங்கத்தில் புகார் கொடுங்கள், அங்கு பேசி முடித்துக் கொள்ளலாம், இப்போது படப்பிடிப்புத் தளத்தில் தகராறு செய்வதால் எனக்கு பணம் விரயமாகிறது’ என்றேன். அதற்கு அவர் ‘அதுதானே எனக்கு வேண்டும், உங்களை மாதிரி சின்ன தயாரிப்பாளர்கள் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்..’ என்றார். நான் ‘ஃபெஃப்ஸி’யின் தலைவர் திரு. அமீரிடம் முறையிடுவேன்’ என்றேன். அதற்கு அவர், தலைவரைப் பற்றி சொன்ன வார்த்தைகளை இங்கு எழுதுவது நாகரீகமாக இருக்காது.
வேறு வழியில்லாமல் நான் காவல் நிலையம் சென்றேன். காவலர்கள் வந்தார்கள். அதற்குள்ளாக நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது. ஏற்கெனவே படப்பிடிப்பு நடக்கவில்லை, செலவு செய்த பணமெல்லாம் விரயமாகிவிட்டதே என்று மனம் வெம்பிப்போய் இருந்த நான், அப்படியே படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பிவிட்டேன்.
நேற்று என்னை தரக்குறைவாகப் பேசியவர், இன்றும் மதியம் 12.42 மணிக்கு மீண்டும் போனில் அழைத்து தகாத வார்த்தைகளில் மிகக் கேவலமாகப் பேசினார். நான் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறேன்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வேறு எந்தத் துறையிலாவது பெரும் பணம் முதலீடு செய்த முதலாளிகள்(தயாரிப்பாளர்கள்) இப்படிப்பட்ட கேவலமான பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு சும்மா இருப்பார்களா? இந்நேரம் வீணாக தொந்தரவு செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்க மாட்டார்களா?
பெரிய அளவுக்கு பணத்தைப் போட்டுவிட்டு மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘எரிகிற வீட்டில் பிடுங்குகிறவரை லாபம்’ என்று இருக்கும் இந்த சினிமா துறைக்கு வந்து, என் உழைப்பு, நேரம், பணம் இவற்றையெல்லாம் கொட்டியதற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.
நான் அடிப்படையில் ‘லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்’. கல்பாக்கம் அணுமின் நிலையம் முதற்கொண்டு நிறைய இடங்களில் லேண்ட்ஸ்கேப் டிசைன் & புராஜக்ட் செய்து கொடுத்திருக்கிறேன். நிறைய சிறுகதைகள் எழுதி அவை ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்’, ‘தேவி’, ‘பாக்யா’, ‘இதயம் பேசுகிறது’ போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. ‘அவனுக்கென்றொரு மனம்’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறேன். தோட்டக்கலை பற்றிய தகவல்களை கலைஞர் டிவி, மக்கள் தொலைக்காட்சி மற்றும் சில வாரப் பத்திரிகைகளில் பேட்டிகளாகவும், கட்டுரைகளாகவும் கொடுத்திருக்கிறேன். ஒரு படைப்பாளியாய் சினிமாவுக்கு வந்து, இப்படிப்பட்டவர்களுடன் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணி வருத்தப்படுகிறேன்.
இந்த ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ திரைப்படம் தயாரிப்பதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டிருக்கிறேன். விருதுநகரில் நான் குடியிருந்த வீட்டை விற்றிருக்கிறேன். தங்க நகைகளை அடமானம் வைத்திருக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். மாதா மாதம் வட்டி கட்ட முடியாமலும், படத்தை முடித்து வெளியே கொண்டு வர முடியாமலும் திணறிக் கொண்டிருக்கிறேன். இந்த புரமோசனுக்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறேன். இந்த விபரங்கள் எல்லாம் அந்த மூன்று பேருக்கும் தெரியும். இவையெல்லாம் தெரிந்தும் அவர்கள் இப்படி நடந்துகொண்டால் அவர்களைப் பற்றி நான் என்ன நினைப்பது? அவர்களின் மேற்படி செயல்பாட்டை நான் எப்படி எதிர்கொள்வது?
ஏற்கெனவே கோடியில் முதலீடு செய்து, இதுவரை ஒரு ரூபாய்கூட வரவு இல்லாத நிலையில், மேலும் நேற்று இவர்கள் எனக்கு ஏற்படுத்திய ரூபாய் 95,000/- வரை நஷ்டத்தை நான் எப்படி பொறுத்துக் கொள்வது?
இதனால் எனக்கேற்பட்ட பண விரயம், குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முடியாமல் ஏற்படும் தாமதம், மனக் குழப்பம், எனக்குக் கடன் கொடுத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் என்னைப் பற்றிய அவ நம்பிக்கை… இவையெல்லாம் சேர்ந்து இப்போது எனது எதிர்காலம் பற்றிய பயத்துடனும், மனக் கலக்கத்திலும் இருக்கிறேன். படைப்பாளிக்கும் மரியாதை இல்லை.. போட்ட பணத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் இப்போது நான் என்ன செய்ய..?
எனக்கோ, என்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மேற்சொன்ன மூவரும்தான் காரணம்.
ஃபெஃப்ஸி அமைப்பு இதனை விசாரித்து, படைப்பாளியும் சிறிய தயாரிப்பாளருமான எனக்கு நல்லதொரு தீர்வைத் தரும் என்று மனமார நம்புகிறேன்….”
——————————————
சங்கங்கள் அவசியம்தான். ஆனால் அவைகள் அத்துறையையே நசுக்குவதுபோல இருக்கக் கூடாது.. தாய் அமைப்பான பெப்சி உடனடியாகச் செயல்பட்டு இந்தத் தயாரிப்பாளரின் குறையைத் தீர்க்குமா என்று பார்ப்போம்..!