full screen background image

“ஈழத்து மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றே இந்திய அரசு நினைக்கிறது..” – கவிஞர் சினேகனின் கோபம்..!

“ஈழத்து மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றே இந்திய அரசு நினைக்கிறது..” – கவிஞர் சினேகனின் கோபம்..!

‘சிவப்பு’ படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் சினேகன், “ஈழப் போராட்டம் தமிழகத்தில் மறக்கடிக்கப்பட்டுவிட்டது..” என்று பெரிதும் வருத்தப்பட்டார்.

அவர் பேசும்போது, “ஈழப் போராட்டத்தைப் பற்றி பல திரைப்படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் அவையெல்லாம் எந்தவித உணர்வையும் தமிழகத்திலும், திரைப்படத் துறையிலும் பாதிக்கவில்லை. ஆனால் இந்தப் படம் நிச்சயமாக பாதிப்பினைத் தரும்.

இந்தப் படத்தில் அரசியல் வசனங்கள் இல்லை. காட்சிகள் இல்லை. இருந்திருந்தால் இவ்ளோ சீக்கிரம் சென்சார் ஆகியிருக்காது. அனைத்து இடங்களிலும்தான் உளவு பிரிவினர் இருக்கிறார்களே. எல்லா நிகழ்ச்சிகளுக்கும்தான் வருகிறார்களே.. படத்தில் அது போன்ற காட்சிகள் இருந்தால் இந்நேரம் தகவலை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி படத்தை முடக்கியிருப்பார்களே.. அதெல்லாம் இதில் இல்லை. இது சுத்தமான காதல் படம். அகதியாக வருபவரின் காதல் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

இந்தியாவைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். ஈழத்து மக்கள் அனைவருமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள். ஆகவே அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்.. இப்படியொரு மன நிலையோடுதான் இந்திய அரசும் பல காலமாக ஈழத்து பிரச்சினையையும், அகதி மக்களையும் எதிர்கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வரும்வரையில் இருந்த உணர்வு அன்றைய தினத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது. இப்போது தமிழகத்து மக்களிடையே அந்த உணர்வு இல்லை. இல்லாமல் செய்தது யார் என்று நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி..” என்றார் முத்தாய்ப்பாக.

நியாயமான கேள்விதான்..! உணர வேண்டியது நம் மக்கள்தான்..! ஆனால் அவர்களுக்குத்தான் தங்களது பொழைப்பே பெரும்பாடாக இருக்கிறதே..? இதில் அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்க இவர்களுக்கெங்கே நேரம் இருக்கிறது..?

Our Score