full screen background image

“ஈழ அகதி மக்களின் சோகக் கதையைக் கேட்டு தூக்கம் வராமல் தவித்தேன் – நடிகை ரூபா மஞ்சரியின் கண்ணீர் பேச்சு..!

“ஈழ அகதி மக்களின் சோகக் கதையைக் கேட்டு தூக்கம் வராமல் தவித்தேன் – நடிகை ரூபா மஞ்சரியின் கண்ணீர் பேச்சு..!

பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா எண்ட்டர்டெயின்மென்ட்(பி) லிட்  மற்றும்  ‘புன்னகை பூ’ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் ஆகிய பட நிறுவனங்கள் இணைத்து தயாரித்திருக்கும் படம் சிவப்பு. ‘கழுகு’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

IMG_3279

இந்தப் படத்தில் நாயகனாக நவீன் சந்திராவும் கதாநாயகியாக ரூபா மஞ்சரியும் நடித்திருக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு, பூ  ராம், சோனா  ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள். நடிகர் ராஜ்கிரண் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் கோனார் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். 

ஒளிப்பதிவு – மது அம்பாட், இசை  – என்.ஆர். ரகுநந்தன், எடிட்டிங்  –  மு. காசி விஸ்வநாதன், ஸ்டண்ட்  – விஸ்வரூபம்  டி. ரமேஷ், நடனம் – தினா, கலை  – தேவா, பாடல்கள் – சினேகன், தயாரிப்பு மேற்பார்வை -டி.ஆர். வாசுதேவன், பி.பாண்டியன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  சத்யசிவா. தயாரிப்பு  –  முக்தா ஆர்.கோவிந்த், புன்னகைப் பூ கீதா.

இந்தப் படம் சென்ற வருடமே தயாராகிவிட்டாலும் தயாரிப்பாளர் முக்தா கோவிந்தின் திடீர் மரணம் மற்றும் பல்வேறு காரணங்களினால் திரைக்கு வராமல் காத்திருந்தது.

கடைசியாக எஸ்.எஸ். பிலிம்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் தேசிகன் இப்படத்தை வாங்கித் திரையிட முன் வந்திருப்பதால் படம் அடுத்த மாதம் திரைக்கு வர ஆயத்தமாகியிருக்கிறது.

இதையொட்டி இப்படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள் முக்தா ரவி, நடிகர் ராஜ்கிரண், நடிகை ரூபா மஞ்சரி, இயக்குனர் சத்யசிவா, இசையமைப்பாளர் ரகுநந்தன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

படத்தின் கதை ஈழத்தில் இருந்து அகதியாக தமிழகம் வந்த குடும்பத்தினர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்குப் பயணப்பட விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த வசதி உடனடியாகக் கிடைக்கப்படாமல் போகிறது.

இடைப்பட்ட காலத்தில் அந்தக் குடும்பத்தினர் எந்த அளவுக்கு வாழ்க்கைப் போராட்டத்தில் தள்ளப்படுகின்றனர் என்பதை காதலுடன் சேர்த்து சொல்கிறதாம்.

IMG_5700

படத்தில் நாயகியாக, ஈழத்தமிழ் அகதியாக நடித்திருக்கிறார் நடிகை ரூபா மஞ்சரி. எப்போதும் விழாக்களில் தொகு்பபாளினியாக யாராவது ஒரு டிவி காம்ப்யர் வருவார். ஆனால் நேற்றைய விழாவுக்கு அப்படி யாரையும் ஏற்பாடு செய்யாததால் துவ்ககத்தில் காம்பயரிங் வேலையையும் ரூபா மஞ்சரியே கவுரவம் பார்க்காமல் செய்தார்.

ரூபா மஞ்சரி பேசுகையில், “படத்தில் நான் ஈழத் தமிழ் பேச வேண்டும். இதற்காக எனக்கு ஈழத் தமிழ் சொல்லித் தருவதற்காக ஒரு ஈழத் தமிழ் பெண்ணை நியமித்திருந்தார்கள். அவரோடு பேசிக் கொண்டிந்தபோதுதான் நம் தமிழ் மக்கள் ஈழத்தில் எவ்வளவு கொடுமைகளையும், துயரங்களையும் அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

குடும்பத்தாரையும், உற்றார் உறவினர்களையும், வீடு வாசல்களையும் பறி கொடுத்துவிட்டு அவர்கள் இப்போது நிர்க்கதியாய் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அந்தப் பெண்.

ஷூட்டிங் முடிந்து அறைக்குத் திரும்பிய பின்பு படுத்தால் எனக்குத் தூக்கமே வராது. அந்த பெண் கூறிய கதைகளே நினைவுக்கு வந்து அம்மக்கள் பட்ட பாடுகளே என்னை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்தன. சினிமா துறைக்காக இல்லையென்றாலும், நம் தமிழ் மக்களுக்காகவாவது இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்வியல் பதிவுகளைக் கொண்ட இது போன்ற படங்கள் நிறைய வெளிவரும்..” என்றார் ரூபா மஞ்சரி.

அருமையான பேச்சு..! தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசியிருந்தாலும் உண்மையான உணர்வோடு பேசியதை அவரது முகமே காட்டியது..! பாராட்டுக்கள் ரூபா மேடம்..!

Our Score