full screen background image

“பாடல் என்னுடையது..” – கவிஞர் பா.விஜயக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்..

“பாடல் என்னுடையது..” – கவிஞர் பா.விஜயக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்..

இதுவரையிலும் ‘படத்தின் கதை தன்னுடையது. நான் எழுதியது.. அதைத் திருடித்தான் அவர் படமெடுத்திருக்கிறார்’ என்றுதான் புகார்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இதில் சிலர் உண்மையாக சொல்ல.. பலர் பொய்யாகச் சொல்லி பணம் பறிக்க ஆரம்பித்தார்கள். இப்போது பாடல்களுக்கும் இது போன்ற மிரட்டல்கள் வந்திருக்கிறது.

கவிஞர் பா.விஜய்க்கு, பாலு ஆசாரி என்பவர் தொலைபேசியில் இது போன்று தொடர்ச்சியான மிரட்டல்களை கொடுத்து கொண்டிருக்கிறாராம்.

“நீ எழுதிய பாடல்கள் எல்லாம் நான் எழுதியவை என்று பகிரங்கமாக சொல்லப் போகிறேன். முக்கியமாக நீ தேசிய விருது வாங்கிய ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலையும் இதில் இழுப்பேன்.. ஒழுங்காக நான் கேட்கும் பணத்தைக் கொடு.”  என்று மிரட்டியிருக்கிறாராம்.

இது பற்றி கவிஞர் பா.விஜய் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளாராம். 

இது பற்றி கவிஞர் பா.விஜய் அளித்த பேட்டியில், “அப்படியொரு புகாரை கொடுத்திருப்பது உண்மைதான். அந்த பாலு ஆசாரியை நான் பார்த்ததுகூட கிடையாது. எல்லா போன் கால்களுமே என் வீட்டு தொலைபேசிக்குத்தான் வந்துள்ளன. தொடர்ந்து தொலைபேசியில் தொல்லை கொடுத்தார். ஆள் அலெர்ட்டாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் வெளிப்படையாக பேசாமல் இருக்கிறேன்..

காவல்துறையினர் என் மனுவை விசாரித்து வருகின்றனர். இப்போது நான் எதுவும் சொன்னால் அது அந்த விசாரணையைப் பாதிக்கும். எனக்கு வந்த மிரட்டல்கள் பற்றி அதில் நான் விளக்கமாக எழுதிக் கொடுத்துள்ளேன். அவர்கள் ‘இரண்டு நாள் பொறுமையாக இருங்கள். எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுகிறோம்’ என்றார்கள்.

இது எனக்கு மட்டுமா அல்லது மற்ற கவிஞர்களுக்கும் இது போன்ற மிரட்டல்கள் வந்தனவா என்பது இனிமேல்தான் தெரியும். இதுபோல மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயம்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score