full screen background image

ஹிந்தி ஆசிரியையை ஏன் கத்தியால் குத்தினேன்..? – மாணவன் தரும் பளீச் விளக்கம்..!

ஹிந்தி ஆசிரியையை ஏன் கத்தியால் குத்தினேன்..? – மாணவன் தரும் பளீச் விளக்கம்..!

‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று தலைப்பு வைத்துவிட்டு காதலைவிடவும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையொன்றை தொட்டிருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி.

‘பிரியமானவளே’, ‘நினைத்தேன் வந்தாய்’ உள்ளிட்ட 8 படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் செல்வபாரதியின் 9-வது திரைப்படம் இது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. வழக்கம்போல பாடல் காட்சிகளும், டிரெயிலரும் காட்டப்படும் என்று நினைத்தோம். கூடவே படத்தில் இடம் பெறும் முக்கியமான ஒரு காட்சியும் திரையிடப்பட்டது. அந்தக் காட்சிதான் வந்திருந்த பத்திரிகையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஹிந்தி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு போலீஸிடம் பிடிபட்டு விசாரணையில் இருக்கிறான் சிறுவன். இன்ஸ்பெக்டர் ஏன் இந்தச் செயலைச் செய்தாய் என்று அவனைக் கேட்க ஒவ்வொரு கேள்விக்கும் அந்தச் சிறுவன் சொல்லும் பதில் அனைத்தும் சரவெடி..

“எனக்கு அறிவியல் நன்றாக வரும். அதில் 100 மதிப்பெண் எடுப்பேன். தமிழும் நன்றாகவே வரும். அதிலும் நல்ல ஸ்கோர் செய்வேன். ஆனால் வரவே வராத ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் ‘படி’,  ‘படி’ என்று உயிரை எடுக்கிறார்கள். எல்லா ஆசிரியர்களும் திட்டுகிறார்கள்.. வெறும் படிப்பு மட்டுமே ஒருத்தனுக்கு அடையாளமா ஸார்..? எல்லா பாடத்துலேயும் எல்லா மாணவர்களாலும் 100 மதிப்பெண்கள் எடுக்க முடியுமா..? ஏன் டீச்சர்ஸ் இதை யோசிக்கவே மாட்டேன்றாங்க..” என்கிறான் சிறுவன்.

தான் செய்தது தவறு என்பது உணர்ந்து கொண்டாலும், தன் வீடு, பள்ளிக்கூடம் அனைத்திலும் தன்னைப் படிக்க வைக்க முயலவில்லை. மாறாக தனக்குப் பிடிக்காத ஒன்றை தன்னிடம் திணித்து தன்னை டார்ச்சர் செய்வதாகக் கூறுகிறான் சிறுவன். நிச்சயமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது. நச்சென்று ஒரேயொரு காட்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்க வைக்கும்விதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கூடவே இன்னொரு விஷயத்தையும் சொல்கிறான் சிறுவன். “3 கிலோ எடைல இருக்கு ஸார் எல்லா புத்தகங்களும்.. வீட்ல இருந்து ஸ்கூலுக்குத் தூக்கிட்டு போறதுக்குள்ள உயிர் போவுது..! அதுலேயும் ஸ்கூல்ல என் கிளாஸ் 3-வது மாடி.. அங்கே ஏறி.. திரும்பவும் இறங்கி.. எத்தனை கஷ்டம் பாருங்க.. இதுக்குப் பதிலா ஸ்கூல்லயேும் ஒரு செட் புத்தகங்கள்.. வீட்லேயும் ஒரு செட் புத்தகங்கள் வைச்சுக்கிட்டா எவ்ளோ ஈஸியா இருக்கும்.. இதைச் சொன்னா ஹெட்மிஸ்ட்ரஸ் என்னை இரண்டு மணி நேரம் முட்டி போட வைச்சுட்டாங்க..” என்கிறான்..!

எல்லா பெற்றோர்களும் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்தான் இது. படத்தில் இந்தச் சிறுவன்தான் வளர்ந்து ஹீரோவாகிறான். இவனது வாழ்க்கையில் வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளும்தான் படமே..!

அந்தப் பையனின் யதார்த்தமான பேச்சில் இருந்த ஒரு நகைச்சுவை.. இப்போதைய மாணவர்களுக்கு மிகவும் பிடித்த நபர் ரமணன்தானாம்.. “யார் அந்த ரமணன்…?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க.. “அதான் ஸார்.. டிவில வானிலை அறிக்கையெல்லாம் சொல்வாரே.. அவர்தான்.. அவர் இன்னிக்கு மழை வரும்னு சொன்னா கண்டிப்பா மழை வரும். அன்னிக்கு எங்களுக்கும் கண்டிப்பா லீவு கிடைக்கும். அதுனாலதான் ஸார் அவரை எங்களுக்கு ரொம்பப் புடிக்கும்.” என்கிறான் பையன்..

ரமணன் ஸார்.. உங்க பெயரும், புகழும் சினிமாவரைக்கும் வந்தாச்சு..!

Our Score