full screen background image

கருப்பன் – சினிமா விமர்சனம்

கருப்பன் – சினிமா விமர்சனம்

ஸ்ரீசாய்ராம்  கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், தனது மருமகள் ஐஸ்வர்யாவின் பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி ஹீரோவாகவும், தான்யா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் காவேரி, பசுபதி, பாபி சிம்ஹா, சிங்கம் புலி, சரத் லோகிதஸ்வா, ரேணுகா, ஸிங்கா, ஆறுபாலா  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, கலை – லால்குடி என்.இளையராஜா, நடனம் – கல்யாண், சண்டை காட்சி – ராஜசேகர், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், லைன் புரொடியூஸர் – ஏ.ரகுராம், தயாரிப்பு நிர்வாகம் – டி.வி.சசி, தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.ஐஸ்வர்யா, எழுத்து, இயக்கம் – ஆர்.பன்னீர்செல்வம்.

கொஞ்சம் அண்ணன்-தங்கை பாசம், அம்மா-மகன் பாசம், கணவன்-மனைவி பாசம், இன்னும் கொஞ்சம் சாதிப் பாசம்.. இப்படி ‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கொம்பன்’, ‘தர்மதுரை’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்.’ என்று பல தரப்பட்ட படங்களின் திரைக்கதையையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்.

‘மண் வாசனை’ படத்தின் கதைக் கருதான் இந்தப் படத்தின் கதைக் கரு. தான் ஆசையாக வளர்த்திருக்கும் மாட்டை அடக்கினால் தனது தங்கையை விஜய் சேதுபதிக்கு கல்யாணம் செய்து தருவதாக வாக்களிக்கிறார் அண்ணன் பசுபதி. ‘மண் வாசனை’யில் விஜயன். இங்கே பசுபதி. அவ்வளவுதான் வித்தியாசம்.

நிச்சயம் தோற்பார் என்று பசுபதி காத்திருக்க.. ஜெயித்துக் காட்டுகிறார் விஜய் சேதுபதி. ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்து தனது தங்கையிடம் இது பற்றிப் பேசுகிறார் பசுபதி. தங்கையான ஹீரோயின் தான்யாவோ கல்யாணத்திற்கு முதலில் ஒத்துக் கொள்ள மறுக்கிறார். பின்பு மாப்பிள்ளை யார் என்று தெரிந்த பின்பு ஒத்துக் கொள்ள.. இருவரின் திருமணமும் நடந்தேறுகிறது.

ஆனால் அதே வீட்டில் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த பசுபதியின் மைத்துனர் பாபி சிம்ஹாவுக்கு இது கோபத்தையும், தீராத ஆத்திரத்தையும் தருகிறது. இந்தப் புகைச்சல் அவருக்குள் வன்மமாக உருவெடுக்கிறது. எப்படியாவது விஜய் சேதுபதி – தன்யா தம்பதிகளுக்குள் பிரச்சினையை உருவாக்கி, தன்யாவை பிரித்துவிட நினைக்கிறார்.

இதற்கேற்ப பல திட்டங்களைத் தீட்டுகிறார் பாபி சிம்ஹா. இந்த வஞ்சக சூழ்ச்சியில் சிக்கும் விஜய் சேதுபதியும், பசுபதியும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு பகையாளியாகிறார்கள். கூடவே அதே ஊரில் கந்து வட்டி பிஸினஸ் செய்து பெரிய ரவுடியாக இருக்கும் சரத் லோகிதஸ்தாவையும் பகைத்துக் கொள்கிறார் விஜய் சேதுபதி.

தன் வயிற்றில் இரட்டைக் குழந்தையைத் தாங்கியிருக்கும் நிலையில் தன்யா, பாபி சிம்ஹாவின் சூழ்ச்சியால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அவர் காப்பாற்றப்பட்டாலும், அவர் வயிற்றில் வளர்ந்த குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் போகிறது. இதனால் தன்யாவும், விஜய் சேதுபதியும் பிரிகிறார்கள்.

எப்படியாவது தனது மனைவியுடன் சேர நினைக்கிறார் விஜய் சேதுபதி, எப்படியாவது இவர்களைப் பிரித்துவிட்டு தன்யாவை தான் மீண்டும் மணமுடிக்க நினைக்கிறார் பாபி சிம்ஹா. இந்த சதியில் இருந்து விஜய் சேதுபதி எப்படி தனது மனைவியை மீட்டெடுத்தார் என்பதுதான் மீதமான திரைக்கதை.

விஜய் சேதுபதியின் சமீபத்திய திரைப்படங்களான ‘தர்மதுரை’ மற்றும் ‘சேதுபதி’யில் காதலிகள் மற்றும் மனைவியுடன் அவர் கொண்ட ஊடல், கூடல், கொஞ்சல் இவைகள்தான் பெண்கள் மத்தியில் அவருக்கான மதிப்பைக் கூட்டியிருப்பதை அவர் உணர்ந்தாரோ இல்லையோ இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அந்தப் படங்களின் திரைக்கதையின் சாயலிலேயே, இந்தப் படத்தின் திரைக்கதையும் கொஞ்சம் வடிவமைத்திருக்கிறார்கள்.

தனது மனைவியான தான்யாவை கொஞ்சுவதும், கெஞ்சுவதும், மிரட்டுவதும், அரவணைப்பதும், சண்டையிடுவதுமாக விஜய் சேதுபதி செய்யும் அத்தனை சேட்டைகளும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கின்றன.

தண்ணியடித்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு போதை தெளிந்தவுடன் மனைவியை பார்க்க வெட்கப்பட்டு சந்து, பொந்துகளில் ஒளிந்திருக்கும் விஜய் வீடு திரும்பியவுடன் “இனிமேல் செய்ய மாட்டேன். மன்னிச்சுக்க…” என்று மன்னிப்பு கேட்பதும், தனது அம்மாவை கவனமாக பார்ப்பதாலேயே மனைவியை தனக்கு மிகவும் பிடிக்கிறது என்று சொல்வதும் ஒரு அக்மார்க் அப்பாவி கணவனை அப்படியே உரித்துக் காட்டுகிறார் விஜய் சேதுபதி.

அந்த முறுக்கு மீசை, தினவெடுத்த உடம்பு, பட், பட்டென்று முடிவெடுக்கும் ரகம்.. கோபம் வந்தால் புரட்டியெடுக்கும் ஆவேசம்.. எந்த இடத்திலும் தனது மனைவியை விட்டுக் கொடுக்காத குணம், தனது அம்மாவின் மன நல பாதிப்பை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் அவளைக் கொஞ்சும் பாசம்.. எல்லாமும் சேர்ந்து இப்படியொரு புருஷன் கிடைக்க மாட்டானா..? மகன் கிடைக்க மாட்டானா..? மருமகன் கிடைக்க மாட்டானா என்று படம் பார்க்க வந்த ரசிகர்களின் மனதில் ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார். எதிர்பார்த்த அந்த ரியாக்ஷனை சரியாக படத்தில் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.

தான்யாவுக்கு அழகுடன் நடிப்பும் மிக இயல்பாகவே வருகிறது. கணவரின் கொஞ்சலில் மாட்டிக் கொண்டு திணறுவதும், பேசியே சமாளிப்பதும், அண்ணன்-கணவன் முரண்பாட்டை நீக்க முயற்சிப்பதுமாக தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார். இன்னமும் முனைந்து முயன்றால் தேவயானி போல தான்யாவும் ஒரு கேரக்டர் ஹீரோயினாக வலம் வர வாய்ப்புண்டு.

பாபி சிம்ஹா அசல் வில்லனாகவே நடித்திருக்கிறார். சஸ்பென்ஸெல்லாம் வைக்காமல் தான்தான் செய்கிறேன் என்பதை சொல்லிவிட்டே செய்கிறார் சிம்ஹா. கிளைமாக்ஸில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி ஒரு வரி, இரண்டு வரிகளில் தனது சதி வேலையை செய்து முடிக்கிறார். இவருக்கு ஒத்து ஊதும் தவசியும் குறிப்பிடத்தக்க அளவில் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

எப்போதோ சினிமாவில் நடித்துவிட்டு போன காவேரி மீண்டும் இதில் தலையைக் காட்டியிருக்கிறார் பசுபதியின் மனைவியாக. கிளைமாக்ஸில் பாபியின் குட்டை உடைப்பது இவர்தான். பசுபதி பாசமுள்ள அண்ணனாக நடித்திருக்கிறார். ஆனால் திரைக்கதையின் குளறுபடியால் எதையும் யோசிக்க முடியாத அண்ணனாகவும் மாறியிருக்கிறார்.

வில்லன் சரத் லோகிதஸ்வா எதற்கு என்று தெரியவில்லை. இப்படியொரு பெரிய நடிகரை எதற்கு இந்த தக்கனூண்டு கேரக்டருக்கு கொண்டு வந்தார்கள்..? பசுபதியை வைத்து ஏதோ பெரிய காரியம் ஆக வேண்டியிருக்கு என்கிறார் சரத். ஆனால் கடைசிவரையிலும் அது என்ன என்பதை அவர் சொல்லவேயில்லை. ஆனால் பசுபதிதான் சரத்திடம் வந்து கை கட்டி நிற்கிறார்..!

இதேபோல் ரேணுகாவின் கேரக்டர் ஒரு பச்சாபதத்தை உண்டாக்கவில்லை. இவருக்கான காட்சிகள் குறைவு. வசனங்களே இல்லை. மன நலம் பாதிப்புக்குள்ளானவர் என்பதை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம்.

தாய் மாமனான சிங்கம் புலியுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையில் போடும் ஆட்டமும், சண்டையும், அங்கே ஒலிக்கும் பாடல்களும் படத்தை கொஞ்சம் தொய்வடையச் செய்திருக்கின்றன. சிங்கம் புலி கடைசியாக வந்து செண்டிமெண்ட் பேசுகிறார். ஆனால் கடைசிவரையிலும் தண்ணியடிப்பது தவறு என்று சிங்கம் புலி ஒத்துக் கொள்ளாமலேயே தப்பிப்பது ரொம்பவே தப்புதான்..!

கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவுக்கு ஒரு ஜே. பாடல் காட்சிகளிலும், சில காட்சிகளிலும் தேனி, திண்டுக்கல் மாவட்ட அழகை, வயல்வெளிகளின் பரப்பை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். சண்டை காட்சியிலும், மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு காட்சியையும் பரபரப்பாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். இதற்கு ஒளிப்பதிவாளர் உறுதுணையாய் இருந்திருக்கிறார். பாராட்டுக்கள்.

டி.இமானின் பாடல்கள் மூன்றுமே கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் இருந்தன. பெரிய ஏமாற்றமளித்திருக்கிறார் இமான்.

விலங்குகளை கொடுமைப்படுத்தக் கூடாது என்கிற முட்டாள்தனமான கட்டுப்பாடு காரணமாய் ஜல்லிக்கட்டை அழகாய் எடுக்க முடியாமல் தவித்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதையே படத்தில் சொல்ல முடியாத சூழலும் வரப் போகிறது. முட்டாள் அரசுகள்.. முட்டாள் ஆட்சியாளர்கள்.. முட்டாள்தனமான சட்டங்கள்..!

சிற்சில லாஜிக் எல்லை மீறல்களையும், அடுத்தக் காட்சி என்ன என்பதை நாமளே யூகித்துவிடக் கூடியதுமான திரைக்கதையும் படத்தின் பலவீனங்கள். இருந்தாலும் காட்சிக்குக் காட்சி விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பும், தான்யாவின் அழகும், இது குடும்பப் படம் என்கிற எச்சரிக்கை உணர்வும் சேர்ந்து இந்தப் படத்தை பார்க்க வைத்திருக்கின்றன.

கருப்பன் – நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்தான்..!

Our Score