full screen background image

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…?” – நடிகர் பிரபுவின் ஆவேசப் பேச்சு..!

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…?” – நடிகர் பிரபுவின் ஆவேசப் பேச்சு..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மறைந்து 16 ஆண்டுகளாகிறது. அவருடைய மறைவுக்கு பின்பு அவருடைய பிறந்த நாள் விழாவை அவருடைய குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் சிவாஜிகணேசனின் பெயரில் தமிழ்த் திரையுலகில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கிறார்கள் சிவாஜியின் குடும்பத்தினர்.

இந்த வருடத்திய சிவாஜியின் பிறந்த நாள் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகிவிட்டது. காரணம் சிவாஜியின் நினைவாக அமைக்கப்பட்ட மணி மண்டபத் திறப்பு விழாவில் ஏற்பட்ட குழப்பம்தான்.

மணி மண்டபத்தைக் கட்டித் தருகிறேன் என்று வாக்களித்த ஜெயல்லிதா இறந்துவிட்டதால், இப்போதைய அரசு அதனை அமைத்துத் தர முடிவு செய்து கட்டியது. அதோடு கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிவாஜியின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் அந்த சிலையை இட மாற்றம் செய்ய தமிழக அரசு ஒத்துக் கொண்டது. அந்தச் சிலையையும் மணி மண்டபத்துக்கு கொண்டு போய் வைக்கவும் முடிவு செய்திருந்தது.

IMG_9492

இந்த மணி மண்டபத்தை திறந்து வைக்க முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வராமல் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூவே திறந்து வைப்பார் என்று அரசு அறிவித்ததுதான் முதல் சர்ச்சையைக் கிளப்பியது.

இது சிவாஜிக்கு மரியாதை இல்லையே என்று சிவாஜியின் ரசிகர்களும், திரையுலகத்தினரும் நினைத்தார்கள். இதனால் நடிகர் பிரபுவே முதலமைச்சருக்கு அறிக்கை மூலமாக கோரிக்கை வைக்கும் அசிங்கமும் இதில் நடைபெற்றது.

இதன் பின்னர் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அந்த மணி மண்டபத்தைத் திறந்து வைப்பார் என்று அரசு தரப்பில் அறிவித்தார்கள்.

கூடவே இன்னொரு சர்ச்சையாக கடற்கரை சாலையில் இருந்து தூக்கி வரப்பட்ட சிவாஜியின் சிலையை மணி மண்டபத்தில் நிறுவியபோது அந்தச் சிலையின் கல்வெட்டில் இருந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை, அரசு அதிகாரிகள் இரவோடு இரவாக நீக்கிவிட்டார்கள்.

இதை எதிர்பார்க்காத திரையுலகத்தினர் இன்னமும் அதிர்ச்சியானார்கள். இது குறித்து தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

IMG_9491

மணி மண்டபத்தைத் திறக்க முதல்வரும், துணை முதல்வரும் முன் வராத காரணம் சிவாஜி ராசியில்லாதவர் என்று சொல்லப்பட்ட விஷயம்தான். சிவாஜிக்கு அரசியல் களத்தில் ஏற்பட்ட தோல்வியை அவருடைய ராசியே அதுதான் என்று குறிப்பிட்டு இன்றைக்கும் பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதிலும் அரசியல்வாதிகள்தான் அதிகம் இது பற்றி பேசுவார்கள். இதை முன் வைத்துதான் இந்த அசிங்கம் நடைபெற்றது.

இதோடு கூடவே அமைச்சர் கடம்பூர் ராஜூ “சிவாஜி அரசியலில் தோல்வியுற்றவர்…” என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தது தமிழ்த் திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை அவமரியாதையாக எடுத்துக் கொண்ட சிவாஜியின் குடும்பத்தினர் என்ன நடந்தாலும் மணி மண்டப திறப்பு விழாவை அமைதியாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

நேற்று காலையில் நடைபெற்ற மணி மண்டபத் திறப்பு விழாவில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நடத்தியது தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை.

sivaji mani mandapam-stills-7

அந்த மேடையில் நடிகர் பிரபு பேசும்போது, “சிவாஜியின் சிலை ஓரத்திலாவது அந்தச் சிலையை அமைத்துக் கொடுத்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இருக்க வேண்டும்..” என்று அரசுத் தரப்பினரை கேட்டுக் கொண்டார். ஆனால் இதற்கு பின்னர் மேடையில் பேசிய துணை முதல்வரோ, அமைச்சர்களோ பிரபுவின் இந்தக் கோரிக்கைக்கு பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலையில் வருடந்தோறும் நடைபெறும் சிவாஜி விருது வழங்கும் விழா மியூஸிக் அகாடமியில் நடைபெற்றது.

இந்த வருடத்திய விழாவில் நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், எஸ்.என்.பார்வதி, இயக்குநர்கள் விசு, வி.சி.குகநாதன், படத் தொகுப்பாளர் பி.லெனின் ஆகியோருக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய நடிகர் திலகத்தின் மகன்களான ராம்குமாரும், பிரபுவும் எல்லா பிரச்சினைகளையும் மனதில் வைத்து பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

sivaji-birthday function-1

நடிகர் ராம்குமார் பேசும்போது, “நடிகர் திலகத்தின் அருமை தெரியாமல் இப்போது சிலர் பேசுகிறார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பதைத்தான் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது..” என்றார் மிக கோபமாக.

இதே விழாவில் நடிகர் பிரபு பேசும்போது, “ரசிகர்களாகிய நீங்களெல்லாம் நல்லாயிருங்கன்னு எங்களை பார்த்து சொன்னாலே எங்களுக்கு போதும்யா. இன்னும் எத்தனையோ வருஷம் இருப்போம்.

ஆனால் ஒண்ணு மட்டும் சொல்றேன். ரொம்ப பொறுமையா இருந்ததெல்லாம் போதும். எவ்வளவு நாள்தான் இப்படி அப்பாவை ஏசிக்கிட்டே இருப்பாங்க. நாமளும் எவ்ளோதான் ச்சும்மா அடங்கி அடங்கிப் போறது..? சும்மா இருக்கக் கூடாது இனிமேல். கேள்வி கேளுங்கள். கம்ப்யூட்டர் இருக்கு. பத்திரிகை இருக்கு. எழுத்து இருக்கு. இனிமேல் சிவாஜியை பத்தி யாரையும் தப்பா பேச விடாதீங்க. பொறுத்தது போதும்.. அண்ணன் சொன்ன மாதிரி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை கதைதான்.. அதுக்காக யாரையும் காயப்படுத்தாதீங்க.

sivaji-birthday function-2

அப்பா மேல நீங்க அன்பு வைச்சிருக்கிறவரையிலும் நாங்க நல்லாவே இருப்போம். அப்பா விட்டுட்டுப் போன ஆக்சிஜன்தான் நீங்களெல்லாம். உங்களை சுவாசிச்சிட்டுத்தான் நாங்க இன்னும் உசிரோட இருக்கோம். இந்த விழாவுக்கு நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்பவும சந்தோஷம். அதுலேயும் மணிமண்டபம்ன்னு சொன்ன உடனேயே பல பேரு ஓடி வந்துட்டீங்க. அதுவே எங்களுக்கு போதும்..

நீங்க ஒற்றுமையா இருங்க. ஒற்றுமையா இருந்தால் நம்மை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. இந்த உணர்வு வந்ததுக்கு சந்தோஷம். உங்களுடைய ஆசி எங்களுடைய குடும்பத்துக்கு எப்பவும் இருக்கணும். காலை நிகழ்ச்சில உங்கள்ல பல பேர் உள்ள வர முடியலைன்னு கேள்விப்பட்டேன். அங்க நீங்க இல்லைன்னாலும் என் இதயத்துல நீங்க எப்போதும் இருக்கீங்க…” என்றார் நெகிழ்ச்சியாக..!

தற்போதைய ஆளும் கட்சிக்கு எதிரான சிவாஜி ரசிகர்களின் ஆவேசமான கோபம், இந்த விழாவில் தென்பட்டது.

இனி வரும் காலங்களில் பிரபு அரசியலில் இணைந்து சிவாஜியின் ரசிகர் மன்றத்தினருக்கு வழி காட்ட வேண்டும் என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கையாக இருக்கிறதாம்..!

Our Score