தங்களது படங்களின் சென்சார் சான்றிதழ்களுக்கு என்றுமே முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் நிறுவனமான ஸ்ரீசாய்ராம் creations, விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்துள்ள படம் ‘கருப்பன்’.
இந்தப் படத்தை ‘ரேணுகுண்டா’ படத்தின் இயக்குநரான பன்னிர்செல்வம் இயக்கியிருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பெரிதும் கூடியுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ‘கருப்பன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஒரு படத்தை சினிமா ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்து பார்ப்பதில், எந்த மனநிலையில், எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வதில் அப்படத்தின் சென்சார் சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண் ரசிகர்கள் பெருகிக்கொண்டே வரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் இவர் நடித்திருக்கும் இந்தக் கருப்பன் படமும் அவருடைய பெண் ரசிகர்களிடத்தில் நிறைய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர், எந்தவித கட்டுகளும் சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் தந்துள்ளனர். இந்த செய்தி இப்படக் குழுவினரை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சான்றிதழ், இந்தப் படம் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய படம் என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.
படம் வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.