நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் துவங்கியிருக்கிறது.
படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி.
‘கொம்பன்’, ‘தோழா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டிச் சிங்கம்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார் நடிகர் கார்த்தி.
கார்த்தியின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த ‘கைதி’ பட டீஸரை திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் வெளியீட்டு வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்போது கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார். ‘ரெமோ’ படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணனின் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.
இந்தப் படத்தில் ‘கீதா கோவிந்தம்’ என்கிற தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், மலையாள நடிகரான லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இசை – விவேக் மெர்வீன், ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – ஜெயச்சந்திரன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன் நம்பியார், நிர்வாக தயாரிப்பு : அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பு – Dream warrior Pictures S.R.Prakashbabu, S.R.Prabhu, எழுத்து, இயக்கம் – பாக்யராஜ் கண்ணன்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் திண்டுக்கல்லில் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்.
கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி வருகிறது.