‘கண்ணும் கண்ணும்’ பாடலில் ஆடி நடித்திருக்கும் ‘தங்க மீன்கள்’ சாதனா

‘கண்ணும் கண்ணும்’ பாடலில் ஆடி நடித்திருக்கும் ‘தங்க மீன்கள்’ சாதனா

‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும்’ காவியப் பாடலை சரிகமாவுக்காக ‘தங்க மீன்கள்’ சாதனா மீண்டும் உருவாக்கியுள்ளார்.

தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் இயக்குநர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்.

முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே மூத்த நடிகரான பி.எஸ்.வீரப்பா பேசும், ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் இறவாப் புகழ் பெற்றவையாகும்.

சி.ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்புவின் பாடல் வரிகளில் பி.லீலா, ஜிக்கி ஆகியோர் பாடி பத்மினி, வைஜெயந்திமாலா பாலி இருவரும் நடனமாடியிருந்த இப்பாடலை தமிழகத்து மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 

இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத முயற்சி இதுவாகும்.

பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சி.ஜி. விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் சரிகமா தமிழ் யூடியூப் சேனல் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

காலத்தால் அழியாத பாடலுக்கு செய்யப்படும் பொருத்தமான மரியாதையாக புதிய பதிப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் சாதனா மிகப் பெரிய உயரத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Our Score