இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கும் ‘ஜெயில்’ படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது.
இதையொட்டி இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளது இது :
“17 வயது ஜீவியுடன் ‘வெயில்’ திரைப்படத்தில் என் இசைப் பயணம் துவங்கியது.
‘வெயிலோடு விளையாடி’ பாடலையும் ‘உருகுதே மருகுதே’ பாடலையும் நேர்த்தியாக உருவாக்கினால்தான் மேற்கொண்டு ஜீவி உடன் நான் பயணிக்க முடியும் என்று ஒரு மாபெரும் சவால் எங்கள் முன் இருந்தது.
எப்பாடு பட்டேனும் இந்த இரண்டு பாடல்களையும், மகத்தான வெற்றிப் பாடல்களாக உருவாக்க வேண்டும் என்று பகலிரவாக நானும் ஜீ.வி.யும், நா.மு-வும் இடைவிடாது அழித்தழித்து யோசித்து அந்தப் பாடல்களை உருவாக்கி வெற்றி கண்டோம்.
இன்று திரும்பிப் பார்க்கும்போது ‘வெயிலோடு’ பாடலும், ‘உருகுதே’ பாடலும் ரசிகர்களால் ஒரு கிளாசிக்காக பார்க்கப்படுவதைக் காணும்போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜீ.வி.யின் மாபெரும் பலமாக நான் நினைப்பது இதயத்தை உருக்கும் மெலடி. ‘கதைகளை பேசும் விழியருகே’ பாடலும், ‘உன் பெயரைச் சொல்லும்போதே’ என்ற பாடலும் ‘அங்காடித் தெரு’வில் இன்னும் காதலர்களின் கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
‘ஜெயில்’ திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணையும்போது முன்னிருக்கும் பாடலின் சாதனையை இலக்காக வைத்துக் கொண்டு ‘ஜெயில்’ திரைப்படத்தில் பாடல்களை உருவாக்க அமர்ந்தோம்.
‘உருகுதே’ பாடலுக்கு அருகில் செல்லக் கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் ‘காத்தோடு காத்தானேன்’ பாடல்.
6 பாடல்களைக் கொண்ட ‘ஜெயில்’ திரைப்படத்தின் இசை ஆல்பம் மிக அழகாக வந்துள்ளது. உங்கள் இசை ரசனை மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.
உங்களின் பேரன்பை எதிர்நோக்கி
அன்புடன்
G.வசந்த பாலன்