மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’.
இந்தப்படத்தின் இயக்குநர் தியா, ‘நாளைய இயக்குநர்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். தியா இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். திருமணம் செய்தால் அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்து கொள்வேன் என அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் ஒரு நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.
இந்த அக்மார்க் காமெடி படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெற போராடி வருகிறார்.
இது பற்றி இயக்குநர் தியா கூறும்போது, “ஜனரஞ்சகமான காமெடி படத்தைதான் நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான் உருவாக்கியுள்ளேன். ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்தான் தருவேன் என கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்க வைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார்.
தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்க வந்த விஷக் கிருமி என்று அதிகாரி மதியழகனை சொன்னால் அதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். நியாயமான என்னுடைய எந்த கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒருதலைபட்சமாகவே அவர் நடந்துகொள்கிறார்..
அதனால் எனக்கு நியாயம் கேட்டும், தணிக்கை அதிகாரி மதியழகனின் இந்த அராஜாக போக்கைக் கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதத்துக்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டும், எனக்கு கிடைக்கவில்லை..
இது பற்றி தயாரிப்பாளர் சங்க(கில்டு) தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கத்திடம் பேசினேன். அவரும் இந்த உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவை தந்துள்ளார். நாளை காலை அவரது தலைமையில்தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறோம்” என கூறினார்.
இது பற்றி ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “இயக்குநர் தியா சொல்வது நூற்றுக்கு நூறு சரி. இவர் மட்டுமல்ல, சிறிய பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பலரும் இதே தணிக்கை அதிகாரி மதியழகனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள் ரிலீசாகாமல் முடங்கியுள்ளன.
அவ்வளவு ஏன்..? நான் எடுத்திருக்கும் படத்தின் ட்ரெய்லரில் சிறுவர்கள் நம் தேசிய கொடியை பிடித்தபடி நிற்கும் காட்சி இருப்பதால், அதை காரணம் காட்டி சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டார். நம் சிறுவர்கள், நம் தேசிய கொடியை பிடிக்காமல் பாகிஸ்தான் தேசிய கொடியையா பிடிக்க முடியும்..?
அந்த அளவுக்கு தணிக்கை அதிகாரி மதியழகன் எதேச்சதிகார போக்குடன் செயல்படுகிறார்.. சிறிய பட்ஜெட் படங்களே வரக் கூடாது என அவர் நினைக்கிறார். பெரிய படங்களுக்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்கிறார். இந்த நிலைக்கு ஒரு முடிவுகட்ட நாங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்கிறேன்…” என கூறியுள்ளார்.
‘கபாலி’ படத்துக்கே ‘யு’ சர்டிபிகேட் கொடுத்த மகான்தான் மதியழகன். லஞ்சமும், ஊழலும்தான் இப்போதைக்கு சர்வ அதிகாரம் படைத்த அதிகாரிகளின் விருப்பம். இந்த சர்வ அதிகாரம், சர்வாதிகாரமாக மாறியதன் விளைவுதான் இது..!
யார்தான் பூனைக்கு மணி கட்டுவது என்று யோசித்து வந்த வேளையில், கில்டு அமைப்பினர் துவக்கியிருக்கும் இந்தப் போராட்டம் பாராட்டுக்குரியது..! வெல்க போராட்டம்..!