‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற படங்களின் மூலம் தமிழ்ச் சினிமாவில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்திக் கொண்டவர் சாமி. இவர் இயக்கும் அடுத்த படம்தான் ‘கங்காரு’.
“கங்காரு எப்படி தன் குட்டியை மனசோடும் உடம்போடும் அதுதானே இரைதேடும்வரை சுமந்து திரிகிறதோ அப்படி தன் தங்கையை சுமக்கும் ஒரு அண்ணனின் கதைதான் இந்த ‘கங்காரு.’ அண்ணன்-தங்கை பாசத்துக்கு, இதுவரைக்கும் ‘பாசமலர்’ படத்தைத்தான் உதாரணமாகச் சொல்கிறார்கள். இனி ‘கங்காருவைக் கூறுவார்கள். இதுவொரு நவீன பாசமலர்..” என்கிறார் சாமி.
“நான் நிச்சயம் நடிகர்களுக்காக கதையைத் தயார் செய்யமாட்டேன். இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் வேறு சில காரணங்களினால் ஆதியை நடிக்க வைத்தேன். இப்போது இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளேன்…” என்கிறார் சாமி.
சிறு வயது முதலே கலையார்வம்… பள்ளி, கல்லூரிகளில் நாடகம், நடனம் என பங்கேற்ற ஹீரோ அர்ஜுனாவுக்கு சினிமா மீது காதல். முதலில் முகம் காட்டிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா.’ அதில் த்ரிஷாவின் அண்ணனாக வருவார்.
‘கங்காரு’ படம் பற்றி அர்ஜுனா பேசும்போது, “முதலில் இந்தப் படத்தில் நடிக்கக் கிளம்பும்போது அவர் கோபக்காரர் என்று பயமாக இருந்தது. ஆனால் பழகியபோது அவர் ஒரு குழந்தை வடிவிலான படைப்பாளி என்று தெரிந்தது இதில் என் பெயர் ‘முருகேசன்’. ஆனாலும் என்னை எல்லாரும் ‘கங்காரு’ என்றுதான் கூப்பிடுவார்கள். படத்தின் பாடல் காட்சிகளைப் பார்த்துவிட்டு அதில் நடித்திருப்பது நான்தான் என்று பலரும் நம்ப மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு என்னை உருமாற்றியிருக்கிறார் இயக்குநர். இதில் என் தோற்றம், நடை, உடை, பாவனை ஏன் ஒவ்வொரு அசைவையும் செதுக்கியவர் அவர்தான். இதில் எனக்குக் கிடைத்திருப்பது ஒரு அசாதாரணமான பாத்திரம். நிறைய எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருக்கிறேன். அதனால் வந்த வாய்ப்புகளைக்கூட மறுத்து வருகிறேன். ‘கங்காரு’ வரட்டும்.. அப்புறம் பாருங்க.. ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அர்ஜூனா.
நாயகி வர்ஷா அஸ்வதிக்கு இது ஆறாவது படம். ‘நாகராஜசோழன்’, ‘நீர்ப்பறவை’, ‘பனிவிழும் மலர்வனம்’, ‘அதிதி’க்குப் பிறகு ‘கங்காரு’.
“கதை கேட்டேன். நல்ல குடும்பக் கதை. இது அண்ணன்-தங்கை பாசத்தை மிக அழகாக, ஆழமாகச் சொல்கின்ற கதை. இயக்குநர் சாமி என்றதும் ஏதேதோ சொன்னார்கள். நடிக்கப் போனபோதுதான் புரிந்தது, அவரது திறமை. அவர் கோபக்காரர்தான். ஆனால் படைப்பு நன்றாக நேர்த்தியாக வர வேண்டும் என்று நினைப்பவர். சமரசமே செய்து கொள்ளமாட்டார். தாமதமானாலும் தரம் முக்கியம் என்கிற உறுதி அவருக்குண்டு. கொடைக்கானலில்தான் முழுப் படமும் எடுத்தார்கள். நல்ல குளிர், மழையில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். இப்போது படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எனவே புதிய படங்கள் எதையும் இப்போது நான் ஒப்புக்கொள்ளவில்லை… இந்தப் படம் வெளிவந்த பின்புதான் மற்றதெல்லாம்..” என்கிறார் அஸ்வதி.
படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில்தான் படமாகியுள்ளது. ‘கொடைக்கானல்’ என்பது படத்தில் ஓர் ஊராக வரவில்லை. ஓர் உயிருள்ள பாத்திரமாக வருகிறது. கேமரா சுழன்று 360 டிகிரி கோணத்தில் ‘கொடைக்கானல்’ முழுவதும் தெரியும்படிதான் ஆரம்ப காட்சிகளே இருக்கும். இந்த மலைப் பகுதியின் பின்னணி படத்துக்கு புது நிறத்தையும், தரத்தையும் காட்டும்.
இதுவரை 45 நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது. இன்னமும் 12 நாள் ஷூட்டிங் பாக்கியுள்ளது. பழனியில் 2 நாட்களும், கொடைக்கானலில் 10 நாட்களும் ஷூட்டிங் எடுக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.
சென்று வருக.. இந்தப் படத்தையாவது குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து ‘சாமி’ நல்ல பெயர் எடுக்கட்டும்..!