full screen background image

கணம் – சினிமா விமர்சனம்

கணம் – சினிமா விமர்சனம்

டைம் டிராவல் படங்கள் ஹாலிவுட்டில் அடிக்கடி எடுக்கப்பட்டாலும் தமிழ் சினிமாவுக்கு அரிதான ஒன்றுதான்.

‘இன்று நேற்று நாளை’, சூர்யா நடித்த ’24’, சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ போன்ற ஒருசில படங்களே இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை எல்லாவற்றிலும் இல்லாத ஒரு புதிய ஒன்றை இதில் கொடுத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக். அதுதான் அம்மா சென்டிமென்ட்.

டைம் டிராவல் கதையில் அம்மா சென்டிமென்ட்டை இணைத்து நல்லதொரு ஃபீல் குட் படமாக இதனை கொடுத்துள்ளார்.

ஷர்வானந்த், ரமேஷ் திலக், சதீஷ் மூவரும் சிறு வயதில் இருந்தே இணைபிரியாத நண்பர்கள்.

இசை கலைஞரான ஷர்வானந்த் சிறு வயதிலேயே தனது அம்மா இறந்துவிட தந்தை ரவி ராகவேந்திராவுடன் வாழ்ந்து வருகிறார். அம்மா இறந்துவிட்டதால் ஒருவித பய உணர்வுடனே வாழ்ந்து வருகிறார். இவரது காதலி ரிது வர்மா.

ரமேஷ் திலக் வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வருகிறார். நன்றாக படித்து இருந்தால் நல்ல வேலைக்கு சென்றிருக்கலாம் என்று நினைப்பவர்.

சதீஷ் நல்ல வேலையில் இருந்தாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் போராடுகிறார்.

இப்படி மூவரும் வெவ்வேறு பிரச்சனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாள் விஞ்ஞானியான நாசர் “உங்களுடைய பிரச்சனையை தீர்க்க உங்களை 1998-ம் ஆண்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால், அங்கு எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று கேட்கிறார்.

மூவரும் “சரி” என்று ஒப்புக் கொண்டு நாசரின் உதவியுடன் கடந்த காலத்திற்கு செல்கின்றனர். கடந்த காலத்திற்கு சென்றவர்களின் பிரச்சினை தீர்ந்ததா? நாசருக்கு என்ன தேவை அதனை அவர்கள் செய்தார்களா ? அமலா உயிரிழப்பதை தடுத்தார்களா? என்பதே கணம்.

ஷர்வானந்த் ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு தமிழில் ஆதியாக மீண்டு வந்துள்ளார். உணர்வுகளை அடக்கி வைத்துக் கொண்டு முகபாவனைகளிலேயே அருமையான நடித்துள்ளார். இவருக்கும் அமலாவுக்கும் இடையேயான காட்சிகள் நெகிழ்ச்சியாக உள்ளன.

இறந்து போன அம்மாவை நேரில் சென்று பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு ‘கணம்’ பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

ரிது வர்மா குறைந்த காட்சிகளே வந்தாலும் தனது வேலையை சரியாக செய்துள்ளார். நாசர் விஞ்ஞானியாக தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்.

30 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் அமலாவை அம்மாவாக பார்ப்பது 1990 கிட்ஸ்களுக்கு சற்று மன வலியை ஏற்படுத்தினாலும் அவரது சிரிப்பு தென்றலாக வீசுகிறது. நடிப்பும் அப்படியே இருக்கிறது.

நண்பர்களாக சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் கடந்த காலத்திற்கு சென்று தங்களையே தனது சிறு வயது சிறுவர்களாக பார்த்து வியப்பது.. தாங்கள் அப்போது செய்த தவறுகளை மாற்றியமைக்க போராடுவது என காமெடியில் ரசிக்க வைத்துள்ளனர்.

இயக்குநரின் இத்தகைய காட்சிகள் படம் பார்க்கும் நமக்கும் நாஸ்டாலஜியாக உள்ளன. இது போன்ற‌ காட்சிகளை இன்னும் வைத்திருக்கலாம். ஆனால், படத்தின் முக்கிய குறிக்கோள் தாய், மகன் பாசம் தான் என்பதால் தேவையான காட்சிகளை மட்டுமே வைத்துள்ளார்.

சிறு வயது சிறுவர்களாக வரும் ஜெய், ஹிதேஷ், நித்யா மூவரும் சிறப்பான தேர்வு. நடிப்பும் அருமை. இவர்களின் சிறு தவறால் கடந்த காலத்தில் மாட்டிக் கொள்ளும் தருணம் சிறப்பு.

ஜேக்ஸ் பீஜேவின் பாடல்கள் நன்றாக உள்ளது. குறிப்பாக ‘அம்மா’ பாடல் அருமை. பின்னணி இசையும் தேவையான இடங்களில் ஒலித்து படத்திற்கு பலமாக உள்ளது.

சுஜித் சாரங்கனின் கேமரா நன்று. சதீஷ் குமாரின் கலை இயக்கம் 1998-ல் இருந்த சென்னையை சிறப்பாக காட்டியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தியவிதம் சிறப்பு.

நல்ல கதைகளை மட்டுமே எப்போதும் தயாரிப்பேன் என்ற ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்ஆர்.பிரபு மற்றுமொரு முறை அதனை நிரூபித்துள்ளார்.

டைம் டிராவல் கதையில் அம்மா மகன் பாசத்தை இணைத்து அனைவரும் ரசிக்கும்படியான படத்தை கொடுத்துள்ளார் புதுமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக்.

தனது அம்மா நோயின் காரணமாக இறந்துவிட்ட தாக்கத்தால் இப்படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். அதுவும் இல்லாமல் எந்த இயக்குநரும் செய்யாத ஒன்றை இவர் இப்படத்தில் செய்துள்ளார்.

அதாவது படத்தின்‌ முடிவில் “எழுத்து, இயக்கம்” என்று தனது பெயரை போட்டுவிட்டு கீழே “சன் ஆஃப் புஷ்பாவதி சேகர்” என்று போட்டுள்ளார். இதில் இருந்தே தெரிகிறது இயக்குநர் தனது அம்மாவை எவ்வளவு நேசித்துள்ளார் என்று.!

சில குறைகள் இருந்தாலும் படம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகும்.

RATINGS :  3.5  /5

Our Score