கே.பாலசந்தர் நலம் பெற வேண்டி நடிகர் கமல்ஹாசனின் வீடியோ செய்தி..!

கே.பாலசந்தர் நலம் பெற வேண்டி நடிகர் கமல்ஹாசனின் வீடியோ செய்தி..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உடல்நலக்குறைவினால் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நல்ல உடல் நலம் பெற வேண்டி நடிகர் கமல்ஹாசன் அமெரி்ககாவில் இருந்து அனுப்பியிருக்கும் வீடியோ செய்தி இது :

“இங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் முக்கிய இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, கே.பாலசந்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி என்னை வந்து அடைந்தது.

கே.பாலசந்தரின் உடல்நிலை பற்றி அவரின் உதவியாளர் மோகனிடம் விசாரிப்பதற்காக போன் செய்தேன். அவரோ செல்போனை பாலசந்தரிடம் கொடுத்து விட்டார். ‘ஹலோ’ என்று பாலசந்தரின் குரல் மெலிதாக வந்தது.

‘சார், பட வேலை நடந்து கொண்டிருக்கிறது. முடித்து விட்டு வந்து விடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன். அதன் பிறகு, ஒன்றரை நிமிடம். அவர் பேசியது எதுவும் எனக்கு புரியவில்லை. இருப்பினும், அவரது பேச்சுக்கிடையே, ‘சரி, ஆகட்டும் சார்’ என்று தோராயமாக சொல்லி வைத்தேன்.

சற்று நேரத்தில், தவறான இடங்களில் ஆமோதிக்கிறேன் என்று இருவருக்குமே விளங்கியபோது, மெலிதாக சிரித்தார். தொடர்ந்து கொஞ்சம் பேசிவிட்டு, செல்போனை உதவியாளரிடம் கொடுத்தார்.

நான் வந்து சாதிக்கக் கூடியது ஒன்றும் இல்லை. எனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் இத்தருணத்தில் உதவாது. சரியாகச் சொன்னால், படிக்காமல் வாங்கிய எந்த பட்டமும் எந்த தருணத்திலும் உதவாது.

வேலையை முடிக்காமல் வருவதை நான் மட்டுமல்ல, நான் தொழில் கற்க உதவிய கே.பி.யும் விரும்பமாட்டார். எனது ஆர்வமெல்லாம், முடிந்தால் முதலில் படத்தை அவருக்கு போட்டுக் காட்ட வேண்டும்.

இரண்டாவது, அது முதலாவதைவிட முக்கியமானது. தொலைபேசியில் அந்த ஒன்றரை நிமிடம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இவ்விரண்டும் இயலாமல் போனால், அவர் என்னவெல்லாம் சொல்லி இருப்பார் என்று என்னால் யூகிக்க முடியும். அந்த புரிதலை அவருடன் நான் பழகிய 43 வருடங்கள் எனக்கு வழங்கி இருக்கிறது.

இன்னும் பல ஆண்டுகள் கே.பி. மக்கள் மனதில் தெளிவாக நினைவிருக்கும்படி செய்யும் மற்றுமொரு படம் ‘உத்தமவில்லன்’. எங்கள் நேசத்தின் மற்றுமொரு பாசக் கடிதம் ‘உத்தமவில்லன்’. 36 வருடங்களில் அவரிடம் பெற்ற அனுபவம் இன்னும் பல வருடங்கள் கை கொடுக்கும் எனக்கு.

இந்த எழுத்துகூட வேலைக்கு நடுவில்தான் நடக்கிறது. எனக்கு நான் விரும்பும் கலையில் நல்ல இடத்தை தேடித்தந்த என் ஆசானுக்கு வணக்கங்கள், என்றும்போல். முடிந்தால், மீண்டும் எழுந்து வாருங்கள் அய்யா, உங்கள் கமல்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

Our Score