“இந்தியன்-2 படமே எனது கடைசி படம்…” – நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு..!

“இந்தியன்-2 படமே எனது கடைசி படம்…” – நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு..!

“இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் ‘இந்தியன்-2’ படம்தான் நான் நடிக்கும் கடைசி படம்…” என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தற்போது ‘மக்கள் நீதி மையம்’ என்ற அரசியல் கட்சியைத் துவக்கி மிகவும் பரபரப்பாக மக்கள் சேவை செய்து வருகிறார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.

தன்னுடைய 6 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக பல்வேறு மொழி நடிகர், இயக்குநர்களால் இன்றைக்கும் போற்றப்பட்டு வருகிறார்.

kamalhasan

8 முறை சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதையும், 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர் கமல்ஹாசன். தன்னுடைய 6 வயதில் அறிமுகமான முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’வில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றவர் கமல்ஹாசன்.

3 முறை சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருக்கிறார். 16 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் ‘இனிமேல் பிலிம்பேர் நிறுவனம் தனது பெயரை சிறந்த நடிகருக்காக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று அன்பு வேண்டுகோளையும் வைத்தவர் கமல்ஹாசன்.

இதுபோக பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் வழங்கிய எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இத்தகைய பெருமைகளையுடைய கமல்ஹாசனை அவருடைய ரசிகர்கள் ‘காதல் இளவரசன்’, ‘உலக நாயகன்’ என்றும் ‘ஆஸ்கர் நாயகன்’ என்றும் பெயர் சொல்லி அழைத்து பெருமிதப்படுகிறார்கள்.

kamalhasan-major-pose-1

இதுவரையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் சேர்த்து 222 படங்களில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். ‘இந்தியன்-2’ அவருடைய 223-வது திரைப்படமாகும்.

தமிழகத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத இப்போதைய அரசியல் சூழலில் திடீரென்று அரசியலில் குதித்தார் கமல்ஹாசன். தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ நற்பணி மன்றமாக மாற்றியமைத்து சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வந்திருப்பதால் இந்த அரசியல் களம் தனக்கொன்றும் புதிதல்ல என்று கமல்ஹாசன் கூறினார்.

சமீப மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இப்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி தனது கட்சியின் சார்பில் பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தான் அடுத்து நடிக்கவுள்ள ‘இந்தியன்’ படத்தின் 2-ம் பாகத்துடன் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும், அத்திரைப்படமே தனது கடைசி திரைப்படம் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

kamalhasan-5

இனிமேல் முழு வீச்சாக அரசியலில் இறங்கி சமூகப் பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது கட்சியின் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தாலும், அவரது திரைத்துறை ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கமல்ஹாசனின் நடிப்புத் திறமை என்பது புதிதாக சினிமாவை நாடி வருபவர்களைக்கூட சினிமாவின் தீவிர ரசிகர்களாக மாற்றிவிடும் தன்மையுடையது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்-2’ படத்தைத் துவக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக கமல்ஹாசன் நடிக்க முன்பேயே ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான மேக்கப் டெஸ்ட் கடந்த வாரம் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் முழு திருப்தியடைந்த இயக்குநர் ஷங்கர் வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் இந்தியன் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்திருக்கிறார்.

இப்போதைய அரசியல் என்னும் சாக்கடையில் சிக்கி கமல்ஹாசனும் மாட்டிக் கொள்ளப் போகிறார். இதில் இறங்காமல் திரைத்துறையிலேயே இருந்தால் இன்னும் சிறப்பான திரைப்படங்களை அவரால் கொடுக்க முடியும் என்று விசும்புகிறார்கள் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தீவிர ரசிகர்கள்..!

Our Score