நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்சி மே தின விழா’வில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார்.
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் சிறப்பு மே தின விழா நேற்று மாலை வடபழனி இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொண்டு பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, ”இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும் இதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழுவினர் செய்து காட்டியிருக்கிறார்கள்.
‘நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர்’ என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால்கூட தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள். எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ என்கிற நிலைமையிலும் விஷால் குழுவினர் இறங்கினார்கள். செய்து காட்டினார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்..” என்றார்.










