“எனக்கு அரசியல் தெரியாது.. நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை.. தேர்தலில் யாரையும் நான் ஆதரிப்பதும் இல்லை..” என்று பல சமங்களில் பேட்டியளித்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், திடீரென்று ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். அவருக்கே வாக்களியுங்கள் என்று அந்தத் தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..!
கமலஹாசனின் ஆசியைப் பெற்ற அந்த வேட்பாளரின் பெயர் எம்.ஏ.பேபி. போட்டியிடும் மாநிலம் : சத்தியமாக தமிழ்நாடு இல்லை; கேரளா. போட்டியிடும் தொகுதி : கொல்லம். கட்சி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
எம்.ஏ.பேபி கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தளபதிகளில் ஒருவர். கட்சியின் பொலிட்பீரோ கமிட்டியின் உறுப்பினரும்கூட.. பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர்.. திரைத்துறை, எழுத்துத் துறை என்று பல துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நடிகர் கமல்ஹாசனுக்கு மிக நெருங்கிய நண்பர்.
2010-ம் ஆண்டு ஓணம் பண்டிகையைத் துவக்கி வைக்க வரும்படி கமலுக்கு அழைப்பு விடுத்து அவரை கவுரப்படுத்தியது அப்போதைய கம்யூனிஸ்டு கேரள அரசு. அப்போது அந்த கேரள அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் இந்த பேபிதான். இதற்குப் பின்பும் கடந்தாண்டுகூட ஓணம் பண்டிகையின் சிறப்பு விழாவில் கமலை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். இதிலும் பேபி கலந்து கொண்டு கமலை பாராட்டித் தள்ளியிருந்தார்.
இத்தனை நெருக்கமான கம்யூனிஸ்டு தோழர் பேபிக்கு தனது ஆதரவை அளிப்பதாகக் கூறி கமல் அளித்திருந்த செய்தியை தீக்கதிர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தி இதுதான் :
“நட்புதான் பேபியின் மதம். நான் அவரது நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்திய தேசத்தில் கலை, இலக்கியம், இசை, திரைப்படம் இத்தனை துறைகளின் வளர்ச்சிக்கும் நன்மைக்குமாக இவ்வளவு அதிக அக்கறை கொண்டுள்ள மற்றொருவர் இல்லை. இந்தக் கலாச்சார அக்கறையிலிருந்துதான் அவரது அரசியல் உருவாகுகிறது.
அவர் விசாலமான அறிவியல் அடிவானத்துச் சொந்தக்காரர். திரைப்படம் குறித்த அவரது ஆழ்ந்த அறிவு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மனித நேயத்திற்கும் மனித உறவுகளுக்கும் உன்னதமான பெருமை சேர்க்கிற மனிதநேயர் பேபி. அப்படிப்பட்ட பேபி, வெற்றி பெறுவது இந்த நாட்டுக்கு மிக அவசியமாகும்..” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
“அரசியல் அறிவுடன், திரைப்படத் துறையின் அறிவையும் சேர்த்து வைத்திருக்கும் பேபிக்கு மக்கள் வாக்களித்து ஜெயிக்க வைக்க வேண்டும்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் கட்சிக்காரராகவே மாறி வாழ்த்தியிருக்கிறார் கமல்ஹாசன். சந்தோஷம்தான்..
உலக நாயகனின் இது போன்ற வாழ்த்தைப் பெறும் தகுதியுள்ள ஒரேயொரு வேட்பாளர்கூட தமிழ்நாட்டில் இல்லையா..?
என்ன கொடுமை சரவணா இது..?
தகவலுக்கு நன்றி : எழுத்தாளர் இரா.முருகன்