‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்

‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்

கடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் இயக்குநர் சத்ய சிவாவின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘கழுகு’.

ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு-2’ படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், காளி வெங்கட்டும், எம்.எஸ்.பாஸ்கரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். முதல் பாகத்தை எழுதி, இயக்கிய இயக்குநர் சத்யசிவாவே, இந்த 2-ம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஊர். பெயர், முகவரியில்லாத ஆனால் நண்பர்களாக இருக்கும் திருடர்கள் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும். ஒரு திருட்டுக்காக போலீஸ் அவர்களை கைது செய்திருக்கிறது.

கொடைக்கானல் அருகேயிருக்கும் மலைப்பகுதியில் வசித்து வருகிறார் பிந்து மாதவி. இவருடைய அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர் தொழிலதிபரான தாடி வெங்கட்டின் கையாள். தாடி வெங்கட் அந்த மலைப் பகுதியில் சில இடங்களை குத்தகைக்கு எடுத்து அங்கேயிருக்கும் மரங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ய நினைக்கிறார்.

இதற்காக லோக்கல் எம்.எல்.ஏ.வான ஹரீஷ் பெரடியிடம் லஞ்சம் பேசி அந்தப் பகுதியின் குத்தகையை கைப்பற்றுகிறார். இப்போது அந்தக் காட்டுக்குள் செந்நாய்களின் கூ்டடம் அதிகமாக இருப்பதால் உள்ளூர் மக்கள் யாரும் மரம் வெட்டும் வேலைக்கு வர மறுக்கிறார்கள்.

இதையறியும் தாடி வெங்கட் “துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களை துணைக்கு அழைத்து வந்தால் மக்கள் நம்பிக்கையுடன் வேலைக்கு வருவார்கள்..” என்று எம்.எஸ்.பாஸ்கரிடம் சொல்கிறார். இதற்காக வேட்டைக்காரர்களை தேடி எம்.எஸ்.பாஸ்கர் தேனிக்கு வருகிறார்.

அதே நேரம் போலீஸாரால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் போலீஸாரின் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு தப்பியோடுகிறார்கள்.

இவர்கள் தப்பியோடும்போது இவர்களைப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் இவர்கள் வேட்டைக்காரர்கள் என்று நினைத்து இவர்களை தன்னுடன் காட்டு வேலைக்கு வரும்படி அழைக்கிறார். அந்த சிச்சுவேஷனில் இருந்து தப்பிக்க நினைக்கும் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் சரியென்று சொல்ல, இருவரும் எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து கொடைக்கானல் மலைக்கு வருகிறார்கள்.

இங்கே தினம், தினம் மரம் வெட்ட காட்டுக்குள் செல்லும் மக்களுடன் துப்பாக்கியுடன் ச்சும்மா காவலுக்குச் செல்கிறார்கள் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும். பிந்து மாதவி, கிருஷ்ணாவை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். முதலில் கிருஷ்ணா பிடி கொடுக்காமல் தப்பித்தவர் ஒரு கட்டத்தில் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லிவிட்டு பிந்து மாதவியின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இதே நேரம் மாநிலத்தின் மந்திரி ஒருவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் விழுந்து நொறுங்குகிறது. இதையடுத்து எம்.எல்.ஏ. ஹரீஷ் பெரடியும் அவரது கட்சிக்காரர்களும், போலீஸ்காரர்களும் அந்தக் காட்டுக்குள் நுழைந்து விழுந்து, உடைந்த அந்த ஹெலிகாப்டரை தேடுகிறார்கள்.

ஹெலிகாப்டர் கிடைக்காமல் போனாலும், பண்டைய காலத்தில் தமிழ் மக்கள் பயன்படுத்திய ‘முதுமக்கள் தாழி’ மட்டும் எம்.எல்.ஏ.வின் கண்களில் சிக்குகிறது. இதைப் பற்றி அறிந்த எம்.எல்.ஏ. அடுத்த நாளே தன்னுடைய ஆட்களை வைத்து அந்த தாழியை உடைத்து அதில் இருக்கும் பழங்காலத்திய நகைகளை திருடிச் செல்கிறார்.

இதனை ஒளிந்திருந்து பார்க்கும் கிருஷ்ணா இந்த நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஊருக்குச் சென்று செட்டிலாகலாம் என்று நினைக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா..? இல்லையா..? பிந்து மாதவியுடனான அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் இந்தக் ‘கழுகு-2’ படத்தின் பிந்தைய கதை.

நாயகன் கிருஷ்ணாவுக்கு ஏற்ற கேரக்டர்தான். ஆனால் அவர் காட்டுவதுதான் நடிப்பு என்கிற வகையில் இயக்கம் செய்திருப்பதால் சீரியஸ் காட்சிகளில்கூட அவரது நடிப்பு நம்மை கதைக்குள் இழுக்கவில்லை. பிந்து மாதவியின் காதல் போர்ஷனிலும் காதலன் வேடத்தில்கூட கிருஷ்ணாவை முழுமையாகச் செய்யவிடவில்லை இயக்குநர். அதையும் அரைகுறை குழப்பத்திலேயே நகர்த்தியிருக்கிறார். இதனாலேயே முழுமையான நடிகராக கிருஷ்ணாவால் பரிமாணிக்க முடியவில்லை.

நாயகி பிந்து மாதவி பழைய பாவாடை தாவணி, அதற்கு மேல் ஒரு மேல் துணி என்று படம் முழுவதும் சிம்பிளான உடையிலும் அழகாய்தான் காட்சியளிக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் மட்டுமே நடிப்பில் கவர்கிறார். ஆனாலும், அவருக்கு வயதாகிவிட்டது என்பது சில, பல குளோஸப் காட்சிகளிலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

கிருஷ்ணாவின் மீது பரிதாபம் கொண்டு தனது காதலைச் சொல்லுவதிலும்.. அதே வேகத்தில் தனது பெற்றோரை இதற்காகவே பகைத்துக் கொள்வது என்பதிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் பிந்து மாதவி. அதிகப்படியான காதல் பேச்சுக்களும், தடாலடி ஆக்சன்களும் இல்லாமல் அவரையொரு அடக்கமான பெண்ணாக காட்டியிருப்பதால் பிந்துவுக்கு அதிகம் வேலையில்லாமல் போய்விட்டது. ஆனால், கடைசி காட்சியில் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அழுது தீர்த்துவிட்டார். பாராட்டுக்கள்.

வெகு நாட்கள் கழித்து முழுப் படத்திலும் வருவது போன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ‘காளி’ வெங்கட். ஹீரோவுக்கு நண்பன் என்றாலும் அவருக்கு இணையான கதாபாத்திரம்தான். இடையில் கதையை நகர்த்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் நடித்திருக்கிறார்.

பிந்து மாதவியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திரத்தையும் தாண்டி கொஞ்சம் வில்லத்தனத்தையும் செய்திருக்கிறார். முதலாளி வெங்கட்டிடம் ஒரு வேலையாளாக தன்னுடைய பணியை அடக்கமாகச் செய்யுபம் குணமும், கல்யாண நிச்சயத்தார்த்தத்தை நிறுத்தியதற்காக மகளிடம் கோபப்பட்டு கத்துவதும்.. இறுதியில் டிவிஸ்ட்டுகளின் நாயகனாகவே மாறிப் போவதுமாய் பாஸ்கரின் நடிப்புத் திறனுக்கு இந்தப் படமும் கொஞ்சம் சோளப் பொரியைப் போட்டிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினராக ஹரிஷ் பிராடி வசனங்களை மென்மையாக உச்சரிக்கும் பாணியில் புதிய வில்லனாக நடித்திருக்கிறார். பணம், பணம் என்று அலையும் பேய் மனிதனாக.. நகைகள் காணாமல் போகும்போது தனது மகனையை அடிக்கும் அளவுக்கு வெறித்தனம் மிக்கவராகவும் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் குறைவில்லை. இவருடைய தேர்வும் மிக சரியானதே..

தொழிலதிபர் தாடி வெங்கட், மற்றும் பிந்து மாதவியின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா ஆகியோருக்கு பெரிய ரோல்கள் இல்லை. காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால், தாடி வெங்கட்டிற்கு பின்னணி குரல் கொஞ்சமும் பொருந்தவில்லை.

முதல் பாராட்டு ஒளிப்பதிவாளர் ராஜாவுக்குத்தான். படத்தின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் ஒரு மெல்லிய இயற்கைக் காட்சிகளுக்கான டோனே தெரிகிறது.

காட்டுக்குள் காண்பிக்கப்படும் காட்சிகள் முழுவதிலும் தன்னுடைய வித்தையை மொத்தமாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். போலீஸ் ஜீப்புகள் வந்து செல்லும் அந்த பாதையும், பிந்து மாதவி போலீஸை பார்த்ததும் அவசரம், அவசரமாக ஓடும் காட்சியிலும் கேமிராவின் கைவண்ணம் அழகு.

பாடல் காட்சியிலும் பிரேம் பை பிரேம் மிக அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மரம், செடி, கொடி என்று மெல்லிய இருட்டாய்  காட்சியளிக்கும் காட்டின் அழகையும், அதில் ஒளிந்திருக்கும் இயற்கையின் அதிசயத்தையும் மிகத் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இப்படியொரு இடத்தில் நாம் குடி போகக் கூடாதா என்று நாம் நினைக்கும் அளவுக்கு இருக்கிறது இவரது ஒளிப்பதிவு. பாராட்டுக்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ‘காந்த கண்ணழகி’ பாடல் மட்டுமே கேட்கும் ரகம். இதற்கு யாஷிகா போட்டிருக்கும் ஆட்டமும் ஜோர்.. பின்னணி இசையில் இயக்கத்தை மீறி போகாமல் தனது முத்திரையை பதித்திருக்கிறார் யுவன். கோபி கிருஷ்ணாவின் படத் தொகுப்பு படத்தை போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறது.

காட்டில் மரம் திருட்டு, செந்நாய்களின் தொல்லை.. மலைவாழ் மக்களின் பிரச்சினை. இடையில் ஒரு காதல்.. என்று போய்க் கொண்டிருந்த திரைக்கதையில் திடீரென்று முதுமக்கள் தாழி.. நகைகள் திருட்டு.. எம்.எல்.ஏ.வின் தேடுதல் வேட்டை என்று திசை மாறியதால் படத்தின் மீதான முழு கவனமும் சிதறிவிட்டது.

அதிலும் திரைக்கதையில் அழுத்தமும், உண்மைத்தனமும் இல்லாமல் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதால் அதுவே காமெடியாகிவிட்டது. பிந்து மாதவி டீ போட வந்தவர், போலீஸை பார்த்தவுடன் பதறியடித்து ஓடுகிறார். ஓட்டமாய் ஓடுகிறார். ஓடிக் கொண்டேயிருக்கிறார். இத்தனை தூரத்திலா உட்கார்ந்து டீ போடுவார்கள்..? இயக்குநர் கொஞ்சம் யோசித்திருக்கலாமே..?

அதேபோல் ஹெலிகாப்டரை தேடி வந்தவர்கள் தேடும் அழகே பக்கென்று சிரிப்பைத் தந்துவிட்டது. அவ்வளவு பெரிய ஹெலிகாப்டர் மலையில் விழுந்தால் காட்டுக்குள் இருக்கும் மக்களின் காதுகளுக்கு கேட்காமலா போயிருக்கும்..? அதிலும் அந்த தேடுதல் வேட்டை காட்சியில் ஏதோ புழு, பூச்சியைத் தேடுவதை போல நடிகர்கள் பாவ்லா காட்டியிருப்பது நகைச்சுவையின் உச்சம். படத்தில் நகைச்சுவை தெறித்திருப்பது பிந்து மாதவியை பெண் பார்க்க வந்த நேரத்தில் ஒரு பெரிசு விடும் அந்த ஒரேயொரு டயலாக்குதான்..!

செந்நாய்க் கூட்டத்தை இரண்டு முறை மட்டுமே காட்டிவிட்டு அதையும் அம்போவென்று பாதியிலேயே விட்டுவிட்டார்கள். செந்நாய்களின் கூட்டத்தை கிராபிக்ஸில் செய்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கலாம். பொம்மை போல் தெரிந்ததால் அது பார்வையாளர்களிடத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

படத்தின் கதையை காதலாகக் கொண்டு போவதா..? அல்லது சமூக நோக்கில் கொண்டு செல்வதா..? அல்லது திருடர்களின் வேட்டையாகக் கொண்டு போவதா…? என்கிற குழப்பத்தில் இயக்குநர் செய்திருக்கும் திரைக்கதைதான் படத்திற்கு சோதனையாய் அமைந்திருக்கிறது.

இதை முதலிலேயே சரி செய்திருந்தால் படம் ஒரு வழியாக ஒரு நிலையை அடைந்திருக்கும். இப்போது முழுமையடையாமல் இருப்பதால், இந்தக் ‘கழுகு-2’ வெகு தூரமோ, அல்லது வெகு உயரமோ பறக்கவில்லை என்பதுதான் உண்மை.

Our Score